September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தீவிரவாதம் எந்தப் பெயரில் வந்தாலும் ஆபத்துதான்

மதுக்கூர் இராமலிங்கம்


தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட பொதுவான கருத்தியல் அவசியம் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார். சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் இடம்பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாடு அண்மையில் தஜகிஸ்தான் தலைநகர் துஷான்பே நகரில் நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘இந்தியாவிலும் கிட்டத்தட்ட அனைத்து எஸ்சிஓ நாடுகளிலும் இஸ்லாத்துடன் தொடர்புடைய மரபுகள் உள்ளன. இந்நாடுகளிடையே ஒரு வலுவான வலைப்பின்னலை உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது யாரும் மறுக்க முடியாத மிகவும் சரியான கருத்துதான்.
அடுத்து நடந்த ஐ.நா. பொது சபையிலும் மதத் தீவிரவாதத்திற்கு எதிராக முழங்கியிருக்கிறார். எங்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுவாரே தவிர, இந்து தீவிரவாதம் பற்றியோ இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது பற்றியோ வாயைத் திறப்பதில்லை. இந்தியாவில் இவரது அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குறியாக்கும் வகையிலேயே அவரது அரசால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அனைத்து மக்களுக்குமான பிரதமர் என்ற நிலையில் அல்லாமல் பல்வேறு சமயங்களில் ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் ஆகவே மாறி, இந்துத்துவா கொள்கைகளை முன்வைப்பதோடு பிற மதங்களின் பண்பாடு மற்றும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் வகையில்தான் தொடர்ந்து பேசி வருகிறார் என்பதற்கு ஏராளமான சான்றுகளை நம்மால் முன்வைக்க முடியும்.


ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்தும் எஸ்சிஓ மாநாட்டில் அவர் கவலை தெரிவித்துள்ளார். ஆப்கனின் இன்றைய நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டியது அமெரிக்க வல்லரசுதான். அங்கிருந்த சோவியத் ஆதரவு நஜிபுல்லா அரசைக் கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவே தாலிபான் மற்றும் ஒசாமா பின்லேடன் வகையறாக்களை 1990-களில் வளர்த்துவிட்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். தாலிபான்களைப் பயன்படுத்தி நஜிபுல்லாவைப் படுகொலை செய்து அவரது அரசைக் கவிழ்த்தபிறகு வளர்த்தகடா மார்பில் பாய்வது போல அத்தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பினர். இதை சரி செய்வதாகக் கூறி ஆப்கானிஸ்தான் சென்ற அமெரிக்கப் படைகள் இன்று தோல்வியுடன் திரும்ப நேர்ந்திருக்கிறது. அமெரிக்கப் படைகளையே விரட்டி அடிக்கும் அளவுக்கு தாலிபான்கள் தற்போது வலுப்பெற்று விட்டனர். மீண்டும் அவர்கள் வசம் ஆப்கானிஸ்தான் சென்றதற்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும். ஆப்கன் விசயத்தில் ஆசியாவின் இப்பகுதியில் இந்தியா முற்றிலும் தனிமைப்படும் நிலைமை ஏற்பட்டதற்கு மோடி அரசின் ராஜதந்திரக் குறைபாடுகளே காரணம். அயல்துறைக் கொள்கை விசயத்தில் வெளிப்படையாகவே அமெரிக்க சார்பு நிலையை மோடி அரசு எடுத்து வருகிறது. ஒரு வலதுசாரி அரசு இன்னொரு வலதுசாரி அரசை ஆதரிப்பது இயற்கைதான். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வல்லாதிக்கப் போக்கை தடுக்க வேண்டுமானால் இந்தியா-சீனா-ரஷ்யா போன்ற நாடுகளிடையே ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் அவசியம். மோடி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலக நிலைமை இதுதான்.


தீவிரவாதத்தை எதிர்த்து உலக அரங்கில் பேசினால் மட்டும் போதாது. அது வாய்வார்த்தையோடு நின்றுவிடும். ஒரு குறிப்பிட்ட மதத்தோடு மட்டும் தீவிரவாதத்தை தொடர்புபடுத்தாமல், தீவிரவாதம் எந்த வடிவில், எந்த உருவில் வந்தாலும் அதை எதிர்த்து நிற்பதுதான் உண்மையான தீவிரவாத எதிர்ப்பு. தீவிரவாதங்களுக்கிடையே சார்பு நிலை எடுக்கக்கூடாது என்பது மிக அடிப்படையானது.


இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் இளைஞர்களை அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனையை நோக்கி ஈர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது நகைப்புக்குரியது. தேசிய அளவிலான விஞ்ஞானிகள் மாநாட்டிலும் வெளியிலும் அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் முரணான சிந்தனைகளை பிரதமர் துவங்கி, மத்திய அமைச்சர்கள் முன்வைப்பதும், பாடத்திட்டங்களிலேயே பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துக்களை புகுத்துவதும் சங்பரிவாரத்தினரின் வாடிக்கை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


பல்நோக்கு உலகை பாதுகாப்பதன் மூலமே அமெரிக்கா கொணர நினைக்கிற ஒரு துருவ உலகைத் தடுக்க முடியும். தன்னை உலகப் போலீஸ்காரனாக நினைத்துக்கொண்டு அனைத்து நாடுகளின் உள்நாட்டு விசயங்களிலும் தலையிடுவது அமெரிக்க வல்லரசின் இயல்பாகிவிட்டது. வியட்நாம், கொரியா எனத் துவங்கி, இராக், சிரியா, ஈரான், தற்போது ஆப்கானிஸ்தான் வரை அமெரிக்காவின் திட்டங்கள் தங்களுடைய ஆதிக்கத்தை உலகம் முழுவதும் நிலைநாட்டும் நோக்கம் கொண்டவை. பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகள் விரட்டியடிக்கப்பட்டாலும் அமெரிக்கா தன் இயல்பை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. கியூபாவுக்கு எதிராக பல்லாண்டுகளாக நீடித்துவரும் பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியும் மறுப்பதோடு, கட்டுப்பாடுகளை மேலும் அதிகப்படுத்தவும் முனைந்துள்ளார்.

ஐ.நா. பொதுமன்றத்தில் கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என பெரும்பான்மை நாடுகளின் ஆதரவோடு பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும் தன்னுடைய ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா அத்தீர்மானங்களை நிராகரிக்கிறது. நாடுகளின் குரல் அங்கே செல்லாக்காசாகி விடுகிறது. வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரி அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து சதி மற்றும் கவிழ்ப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. பாலஸ்தீன மக்கள் மீது காலம்காலமாக இஸ்ரேல் நடத்திவரும் கொடூரத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா துணை நிற்பதும் தொடர்கிறது. பல்வேறு அரபுநாடுகள் இன்று அமெரிக்காவைக் கண்டிக்கும் திறனையே இழந்து செயலற்று நிற்கின்றன.


இந்நிலையில், ஜவஹர்லால் நேருவின் முன்முயற்சியால் உருவான கூட்டுச்சேரா கொள்கையின் அடிப்படையில் இந்தியாவின் அயல்துறை கொள்கை அமைவது அவசியம் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகிறோம். உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா வளர்முக நாடுகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்ற முடியும். கடந்த காலங்களில் இந்தியா இப்படி செயல்பட்டதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். அந்த பெருமைமிகு பாரம்பரியத்தை மீளக் கொணரும் வகையில் இந்திய அரசின் செயல்பாடு அமைவதும் அமெரிக்கா அல்லாத உலக நாடுகளின் அமைப்புகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்வதும் இன்றையத் தேவை. இந்தியா அந்தத் திசையில் காலெடுத்து வைப்பது எப்போது என்பதுதான் நம் கேள்வி.

(94422 02726 – [email protected])

Spread the love