September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

திலீப் குமார்:

தனித்துவ நடிப்புக் கலையின் முன்னோடி…
சோழ. நாகராஜன்


இந்தி சினிமாவின் கொடூர வணிக சூழலில்தான் திலீப் குமார் போன்ற மிகச்சிறந்த கலைஞர்களும் உருவாகியிருக்கின்றனர். சூழல் எத்தகையதானாலும் தன்னையும் தனது கலையின் மேன்மையையும் தக்கவைத்தலே ஒரு கலைதான். அந்தக் கலையில் திலீப் குமார் வென்றே வந்துள்ளார். ‘சோகங்களின் நாயகன்’ என்று பெயரெடுத்திருந்தாலும் அவரது பன்முகப்பட்ட நடிப்புத் திறன் பலரையும் புருவமுயர்த்தவே வைத்தது. திலீப் குமாரை ‘இந்திய நடிப்புக்கலையின் பாணினி’ என்கிறார் பிரபல இந்தி சினிமாவின் கதாசிரியர், பாடலாசிரியர் ஜாவித் அத்தர். வடமொழி இலக்கண ஆசிரியர்தான் பாணினி. நடிப்பில் திலீப் குமாரை பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் காப்பியடிக்கிறார் என்றும் அமிதாப் பச்சனோ திலீப் குமாரின் பரம பக்தர் என்றும் சொல்கிறார்கள். துன்பியல் நடிப்பில் எந்த நடிகரும் திலீப் குமாருக்குப் பக்கத்தில்கூட நிற்கமுடியாது என்பது இந்திப் படவுலகில் கவனம் பெற்ற பரவலான பேச்சாக இருக்கிறது. பாலிவுட் படவுலகில் போற்றுதலுக்குரியதாக இரண்டு ஆளுமைகளைத்தான் முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள். அவர்களுள் ஒருவர் ‘சின்ன அக்கா’ என்று அன்போடு அழைக்கப்படுகிற இந்தியாவின் வானம்பாடி லதா மங்கேஷ்கர். மற்றொருவர் திலீப் குமார். அவரது இயற்பெயர் யூசுஃப் கான். திரையுலகிற்காக திலீப் குமார் என்று பெயரை மாற்றிக் கொண்டவர் இன்றைய பாகிஸ்தானின் பெஷாவரில்தான் பிறந்தார். பிரபல நடிகர் ராஜ்கபூர் பிறந்ததும் அதே பகுதிதான். இருவரும் பால்ய காலத்திலேயே நண்பர்கள். பின்னாளில் தனது ஆவாரா, ஸ்ரீ420, ஜக்தே ரகோ போன்ற அற்புத சினிமாக்களின் மூலம் ராஜ்கபூர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சோசலிசக் கனவுகளைக் கலைப்படைப்புகளின் ஊடே வழி மொழிந்தார் என்றால் நேருவின் விருப்ப நாயகனாகவே திலீப் குமார் ஆகிப்போனார்.
அது நடந்தது 1944-ல். அந்நாளைய பம்பாயின் முன்னணிப் படப்பிடிப்பு நிலையமான பாம்பே டாக்கீஸ் மாத சம்பளமாக ஆயிரத்து இருநூற்றைம்பது ரூபாய் தந்து முதன்முதலில் திலீப் குமாரை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்தது. தேவிகா ராணியும் இமன்சு ராயும் இணைந்து உருவாக்கியதுதான் அந்த பாம்பே டாக்கீஸ். அவருக்கு வாய்ப்பளித்த முதல் படம் ஜ்வார் பாட்டா. ஆனால், அவரது முதல் வெற்றிச் சித்திரமான ஜுகுனுவுக்காக (1947) திலீப் குமார் மூன்றாண்டுகள் காத்திருக்கவேண்டியதிருந்தது.
ஒரு முறை பாம்பே டாக்கீசில் அந்நாளைய மெகா ஸ்டார் அசோக்குமாரைச் சந்தித்தார் திலீப். அப்போது நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களே அநேகம் பேர் என்பதால் நாடகபாணி மிகை நடிப்பே எல்லோரிடத்திலும் வெளிப்பட்டது. ஆனால், அசோக்குமாரிடமிருந்து நடிப்பென்பது இயல்பான ஒன்றென்பதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் இளம் திலீப் குமார். அவரது நடிப்பில் அசோக்குமாரின் யதார்த்த நடிப்பின் தாக்கம் பெரிதும் காணப்பட்டது. தனது படங்களையும், அதில் தனக்கான கதாபாத்திரங்களையும் மிகவும் கவனமுடன் தேர்வு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்ததால் திலீப் குமார் வேறு எந்தவொரு சராசரி நடிகரிடமிருந்தும் மாறுபட்டதொரு கலைஞராகவே விளங்கினார். வெறும் நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராக, சினிமா தயாரிப்பாளராக, சிறந்ததொரு தத்துவாசிரியராக, கவிஞராக பன்முகத் திறன்களைக் கொண்ட முழுமையானதொரு கலைஞனாக அவர் வெகு சீக்கிரத்திலேயே உயர்ந்தார். அவருடைய விரிந்த கலை ஞானமும் கற்றுக்கொள்ளும் பேரார்வமும் அவரை இந்திய சினிமாவின் தனித்துவமான புதியதொரு நடிப்பு வெளிப்பாட்டுக் கலைஞனாகத் தரமுயர்த்தியது. கவித்துவ அழகோடு அவர் வசனம் பேசும் முறையும், இடையிடையே சிந்திக்கத்தக்கபடியான இடைநிறுத்தமும், பிறர் மதிக்கிற முறையில் அமைதி காத்தலுமான முற்றிலும் புதுவிதமான அவரது நடிப்புத் திறனை உலகறிந்த இந்திய இயக்குநர் சத்யஜித் ரே வெகுவாகப் பாராட்டினார். ஹாலிவுட்டின் மார்லன் பிராண்டோ எனும் தனித்துவ நடிப்புக் கலையின் முன்னோடிக்கு முன்னமேயே திலீப் குமார் அதில் தானொரு முன்னோடி என்பதை நிரூபித்துவிட்டார். ஆனால், அதனை மேற்குலகம் உடனே அறிந்துகொண்டுவிடவில்லை. 40-களில், 50-களில், 60-களில் மேளா, தேவதாஸ், தில் தியா தர்த் லியா போன்ற படங்கள் அவரை முழுக்க முழுக்க சோகத்தில் மூழ்கச் செய்தன. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது கண்டு உளவியல் மருத்துவர்கள் அவரை அதிக சோகம் நிறைந்த பாத்திரங்களில் நடிக்கக் கூடாது என்று தடைபோட்டார்கள். அந்தளவிற்கு நடிப்பின்மீதான அவரது ஈடுபாடு இணையற்றதாக இருந்திருக்கிறது.
மருத்துவர்களின் அறிவுரைக்குப் பின்னரே அவர் மென்மையான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யத் தொடங்கினார். அது அவரது உடல் நலனை மட்டுமல்லாது தொழிலிலும் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. ராம் ஒளர் ஷியாம், தரானா, கோகினூர் போன்ற படங்கள் அவரது மாறுபட்ட நடிப்பு வகைமைகளுக்குச் சிறந்த உதாரணங்களாகின. 70களில் ராஜேஷ்கன்னா, அமிதாப் பச்சன் போன்ற நடிகர்களின் வருகைக்கு முன்னான காலகட்டத்தில் இந்திப் படவுலகை ஆண்டுகொண்டிருந்தவராக திலீப் குமார் இருந்தார். 80-களில் திலீப்பின் மறுபிரவேசமும் நிகழ்ந்தது. பிரபல இந்தி நடிகை சைராபானுவைக் காதல் திருமணம் செய்துகொண்ட திலீப் குமார் ஒரு தீவிர வாசிப்பாளரும்கூட. அவரது நேர்காணல்களில் அரசியல், கலை, சமூகம் குறித்த அவரது ஆழ்ந்த புரிதல்கள் வெளிப்படுவதைக் கண்டு பலரும் வியப்பதுண்டு. கவிதையின் காதலன் அவர். இத்தனை ஆண்டுகாலத் திரையுலக வாழ்க்கையில் ரசிகர்களே ஆச்சரியப்படுமளவுக்கு அமைதியும் அவையடக்கமும் அவரது இயல்பாக இருந்தன. அவர் பிறந்த நாடான பாகிஸ்தானின் உயர்ந்த விருதான ‘நிஷான் இ இம்டியாஸ்’ விருதை அந்த நாடு திலீப்புக்கு அறிவித்தபோது அவர்மீது எழுந்த தேசப்பற்று குறித்த சர்ச்சையை அவர் தனது முதிர்ச்சியும் அமைதியுமான இயல்போடு கடந்து சென்றார்.
இந்தியத் திரையுலகில் நிகரற்ற கலைஞனாக முத்திரை பதித்த திலீப் குமாருக்கு பத்மபூஷன்(1991), பத்மவிபூஷன் (2015), தாதாசாகேப் பால்கே (1994) போன்ற உயரிய விருதுகள், எட்டுமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகள் ஆகியன வழங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, கடந்த ஜூலை 7-ம் தேதி மும்பையில் காலமானார்.
தனது தனித்துவமான நடிப்பாற்றலால் அவருக்குப் பின்னால் உருவான பல கலைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த திலீப் குமார் எனும் அந்த ஒப்பற்ற கலைஞரை இந்திய சினிமா வரலாறு என்றும் நினைவில் கொள்ளும்.
(98425 93924 – [email protected])

படங்கள் : Nagarajan 1, 2 and 3

Spread the love