August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

திரை இசைப் பாடல்களில் பகுத்தறிவு சிந்தனைகள்

நன்னிலம் ஆறுமுகம்
திரையிசைப் பாடல்களில் முற்போக்கான கருத்துகளை எழுதியவர்களில் உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து என பலரைச் சொல்லலாம்.
“அறிவுக்கு வேலை கொடு / பகுத்தறிவுக்கு வேலை கொடு / மூடப்பழக்கத்தை விட்டுவிடு / காலம் மாறுது கருத்தும் மாறுது / நம்மால் நாடும் மாற வேண்டும் நாமும் மாற வேண்டும்..”
என்று தலைவன் என்ற திரைப்படத்திற்கு கவிஞர் வாலி பாடல் எழுதியிருப்பார். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் சிந்திக்கும் தன்மைக்கு உட்படுத்தி ஏன்? எதற்கு? என்ற கேள்விகளைக் கேட்பதே பகுத்தறிவாகும். பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேட்ட மாத்திரத்திலேயே ஒன்றை நம்பி விடக்கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பி விடக்கூடாது. கடவுளாலேயோ மகாத்மாவாலேயோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பி விடக்கூடாது. திறந்த மனதுடன் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆலோசித்து தீர்வு காண வேண்டும்.
உடுமலை நாராயணகவி பாடல்களில் பகுத்தறிவு சிந்தனைகள் : பாமரர்கள் பேசும் எளிய சொற்களை தம் பாடல்களில் கையாண்டு எழுதியவர். நல்ல தம்பி என்ற திரைப்படத்திற்கு அவர் எழுதிய ‘அந்தக் காலமும் இந்தக் காலமும்’ பாடலில்
“நெனைச்சதை எல்லாம் எழுதி வச்சது அந்தக் காலம் – எதையும் நேரில் பார்த்தே நிச்சயிப்பது இந்தக் காலம்!
துரோபதை தன்னைத் துகிலுரிஞ்சது அந்தக் காலம் – பெண்ணைத் தொட்டுப் பாத்தாச் சுட்டுப் பிடுவான் இந்தக் காலம்!
பக்தி முக்கியம் அந்தக் காலம்! படிப்பு முக்கியம் இந்தக் காலம்!”
என்று எழுதினார்.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்: பொதுவுடமைக் கருத்துக்கள் நிறைந்த அவரது பாடல்களில் பகுத்தறிவு நிறைந்து காணப்படும். “சின்னப் பயலே சின்ன பயலே சேதி கேளடா..!” என்று தொடங்கும் அரசிளங்குமரி திரைப்படப் பாடலில் “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்ற பகுத்தறிவு சிந்தனையை விதைக்கிறார்.
கவிஞர் மருதகாசி: நினைத்ததை முடிப்பவன் என்ற திரைப்படத்திற்கு “கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. நீ காணும் தோற்றம்.. உண்மை இல்லாதது.. அறிவை நீ நம்பு.. உள்ளம் தெளிவாகும்.. அடையாளம் காட்டும்.. பொய்யே சொல்லாதது…” என்று செல்கிறது இவரது பாடல்.
கவிஞர் கண்ணதாசன் : “பல பல பல ரகமாயிருக்குது பூட்டு.. அது பலவிதமாய் மனிதர்களை பூட்டுது.. பகுத்தறிவு சாவிய போட்டு நான் கச்சிதமாய் திறந்து வைப்பேன்.. இதயத்தைக் காட்டு..” என்று ஆனந்த ஜோதி படத்தில் எழுதினார்.
கவிஞர் வைரமுத்து : பௌர்ணமி அலைகள் என்ற திரைப்படத்தில் நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் என்ற பாடலில் “சகுனங்கள் பார்த்தால் பயணங்கள் இல்லை” என்று எழுதியிருப்பார்.
திரையிசைப் பாடல்களில் பகுத்தறிவு சிந்தனைகளை மேல்நிலை வகுப்பு அல்லது கல்லூரி அளவில் பாடமாக வைக்கலாம். இதன் மூலம் நன்னெறிக் கருத்துக்களையும் உயரிய பண்பினையும் தன்னம்பிக்கையினையும் மாணவர் மனதில் விதைக்க முடியும்.

Spread the love