August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தின்றுகொண்டே…நின்றுகொண்டே!!

டாக்டர் ஜி. ராமானுஜம்,


வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று இரண்டு விஷயங்களைச் சொன்னவர்கள் இன்னொரு விஷயத்தைச் சேர்த்திருக்கலாம். குறைந்தபட்சம் இரண்டாவது பாயிண்டில் துணைவிதியாகவாவது இணைத்திருக்கலாம். அதுதான் ‘பந்தியில் இடம் பிடித்துப் பார்’ என்பது.
ஒரு திரைப்படத்தில் கவுண்டமணியை ஒரு குழந்தைக்குப் பெயரிட அழைப்பார்கள். அவரும் பெருமையாகப் போய் முருகேசன் என வைத்துப் பின் பெண் குழந்தை என்று தெரிந்ததும் முருகேசி என வைப்பார். விஷயம் அதுவல்ல. அந்தக் குழந்தைக்கு ஐநூறு ரூபாய் மொய் செய்திருக்கிறார் எனத் தெரிந்ததும் பலரும் அவரது வீட்டு வாசலில் பெயர் வைக்கக் குவிவார்கள். அறுபது எழுபது வயது ஆட்கள் எல்லாம் பெயர் வைக்கப் படையெடுப்பார்கள். எல்லாமே கவுண்டர் தரப்போகும் பணத்துக்காக!
அதேபோல் கொரோனா காலத்தில் லாக்டவுன் சமயத்தில் ஐம்பது பேர்களுக்கு மேல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என்பதால் அதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதித் திருமண நிகழ்வுகளை நடத்தியவர்களும் உண்டு. அதே நேரம் லாக்டவுன் காலத்தில் வைத்தால் வரவு வராமல் போய்விடுமே என்ற காரணத்தால் பல திருமணங்கள் இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்டன. உண்மையிலேயே சொந்தக்காரர்கள் வரமுடியாது என்ற காரணத்தாலும் கூடச் சிலர் தள்ளிப் போட்டிருக்கலாம்.
தண்ணீரில் அழுத்தப்பட்ட காற்றுள்ள பந்து கையை எடுத்ததும் வீறு கொண்டு வெளியே வருவதுபோல் கல்யாணங்கள், காதுகுத்து, புதுமனை புகுவிழா என நடத்தித் தள்ளினார்கள். ஏற்கனவே கல்யாணம் ஆனவர்கள்கூட அலைபாயுதே மாதவன் ஷாலினி ஸ்டைலில் ரகசியத் திருமணம் செய்து கொண்டவர்கள்போல் மனம் வருந்தி மீண்டும் ஊரறிய ஊரை அழைத்து மறுதிருமணம் செய்து கொண்டார்கள். ஒரே நாளில் நான்கைந்து முகூர்த்தங்கள் இருந்தன. எந்த நிகழ்வுக்கு எப்போது செல்வது, என்ன பரிசளிப்பது.. முக்கியமாக எந்த நிகழ்வில் எந்த வேளை சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த புரோட்டோக்கால் குழப்பத்தில் புதுமனை புகுவிழா என நினைத்து கல்யாண மண்டபத்துக்குப் போய் சுற்றிப் பார்த்து வீட்டை நல்லா பிரம்மாண்டமா கட்டியிருக்காங்க என வியப்பதும், சடங்கு வீட்டில் பையன் வீட்டுச் சார்பாக மொய் எழுதும் இடம் எங்கே எனக் கேட்கும் குழப்பங்களும் நடந்தன.
அதைவிட முக்கியம் பந்திகளில் இடம் பிடிப்பது. கல்யாண மண்டபங்கள் கிடைப்பது மணமகன்/மகள் கிடைப்பதைவிட அரிதான விஷயமாகிவிட்டதால் கிடைக்கும் மண்டபத்தில் கல்யாணங்களை வைத்து விடுகின்றனர். அந்த மண்டபங்களின் சைஸுக்கும் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லாததால் பல சமயங்களில் குண்டூசியால் குழிதோண்டுவது மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களை அமரவைத்து நடக்கும். ஆகவே டைனிங் ஹால்கள் நிரம்பி வழியும். இந்திய ரயில்வே வெப்சைட்டில் தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு நிகரான சாதனைதான் பந்திகளில் இடம்பிடிப்பது.
ரஜினி, கமல் திரைப்படங்களுக்கு முதல்நாளே போய் படுத்துக் கொள்வார்கள், அது போல் காலை டிஃபன் முடிந்ததிலிருந்தே பந்தியில் மதியம்வரை அமர்ந்து இடம் பிடிப்பவர்கள் உண்டு. பெரும்பாலும் ஓரிரு பந்திகள் நின்று சாப்பிடுபவர்களை ஏக்கமாக வேடிக்கை பார்த்த பின்புதான் நமக்கு உட்கார இடம் கிடைக்கும். நமது ஜாதகத்தில் அன்று கட்டங்கள் சரியாக இருந்தால் நாம் யார் பின்னால் நிற்கிறோமோ அவர்கள் குறைவாகவும் வேகமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் கட்டங்கள் என்றுதான் சரியாக இருக்கும்? சலூனில் நம் முன்னால் முடி வெட்டும் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் சாய்பாபா போலும், ஷேவிங் பண்ண அமர்ந்திருப்பவர்கள் பெரியார் போலவும் அமைகின்றனர். அது போன்றே பந்தியிலும் நாம் யார் பின்னால் நிற்கிறோமோ அவர்கள் உணவை நன்கு ரசித்து நிதானமாக உண்பவராக இருப்பார். அவர் மோர் சாதத்துக்கு வந்துவிட்டாரே என சந்தோஷப் பட்டால் பரோட்டா சூரிபோல கோட்டையெல்லாம் அழித்துவிட்டுச் சாம்பார் சாதத்திலிருந்து மீண்டும் ஆரம்பிப்பார். இள வயது வாலிபர்கள் பின்னால் நிற்கவே கூடாது. நிறைய நேரம் சாப்பிடுவார்கள். சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இருதய நோய், சிறுநீரக பாதிப்பு இருப்பவர் என ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்த யாராவது பந்தியில் இருந்தால் அவர்கள் பின்னால் நிற்கலாம். பேருக்குக் கொறித்துவிட்டு எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொண்டு செல்வார்கள்.
நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நம் பின்னாலேயே ஒருவர் நின்று கொண்டிருப்பது அசௌகரியமாக இருந்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கிறது. பல சமயங்களில் நமக்கு வேண்டியதை நமக்குப் பின்னாலே நிற்பவர்களே பரிமாறுபவர்களைத் திட்டி வாங்கித் தருவார்கள். சாருக்கு பாயாசம் ஊத்துங்க! மோர் கேக்கறார்ல..காதுல விழலையா?.. என்றெல்லாம் சத்தம் போட்டு அவர்களே நமக்கு உதவுவார்கள். பக்கத்து இலைக்குப் பாயசம் போல் இது அடுத்த பந்திக்கான அட்வான்ஸ்!
வெற்றிபெற்ற ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் இன்னொரு மனிதன் பசியோடும் ஏக்கத்தோடும் காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம் கல்யாணப் பந்திகளில் இடம்பிடிப்பதில்…
(9443321004 – [email protected] )

Spread the love