June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தவறிழைக்கும் மாணவருக்கு
தண்டனைகள்தான் தீர்வா?…

உமா
கடந்த மாதத்திற்கு முன்பு பள்ளி மாணவர்களில் சிலர் பள்ளி வளாகங்களில் வன்முறைச் சம்பவங்கள், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதாக காணொளிகள் பொது வெளியில் பகிரப்பட்டு பல்வேறு ஊடகங்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின. ஆசிரியர்கள் தரப்பிலிருந்து ‘பணிப் பாதுகாப்பு தேவை’ என்ற குரல்கள் உரத்து சத்தமிட்டன. இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஆசிரியர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொந்தரவு செய்யும் மாணவர்களுக்கு அவர்களது நடத்தைச் சான்றிதழில் காரணம் குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழ் வழங்கிவிடப் போவதாக எச்சரிக்கை செய்தார்.
காரணங்களை ஆராய்வோம்
லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிக் கல்வியில் இணைந்திருக்க, ஒரு சில பள்ளிகளில் இப்படி நடப்பதும் அது மிகவும் மிகைப்படுத்தப்பட்டு குழந்தைகள் மீது கடுமையான அவதூறு சாயம் பூசப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவர்கள் எதனால் இவ்வாறு செய்கிறார்கள்.. திடீரென நடத்தை மாறுபாடு எப்படி வந்தது.. காரணங்கள் என்னவாக இருக்கும் .. என்ற ஆய்வை முதலில் பள்ளிக் கல்வித் துறை விருப்பு வெறுப்பின்றி செயல்படுத்திட வேண்டும். காரணங்களையே ஆராயாமல் மாணவர்களைக் குற்றவாளிகளாக்கி தண்டிக்க எடுக்கப்படும் முடிவுகள் சரிதானா?
அரசுப் பள்ளிகளுக்கு வரக்கூடிய குழந்தைகள் யாராக இருக்கிறார்கள்? பொதுப்பள்ளி முறை சிதைந்து அருகமைப் பள்ளிகள் அருகிப் போய் தனியார் கல்விச் சந்தையில் தங்கள் குழந்தைகளைக் காவு கொடுத்து விட்ட நடுத்தர, உயர் நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் குழந்தைகளா இவர்கள் ? இல்லை.. இல்லை. சாதி, பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த விளிம்பு நிலையில் வாழும் அன்றாடங்காய்ச்சிகளின் குழந்தைகள்தான் இவர்கள். இவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் பிரதிபலிப்புதான் இவர்கள் வழியே வெளிப்படுகிறது. வீடும் சமூகமும் கற்றுத் தருவதைத்தான் மாணவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் வெளிப்படுத்த எத்தனிக்கின்றனர். இதுதான் பூதாகரமாக வெடிக்கிறது.
கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் முதல் தலைமுறையாக இருக்கும் இவர்களுக்கு தண்டனை தந்து பள்ளியை விட்டு வெளியேற்றுவது சமூக நீதிக்கு அவமதிப்பு அல்லவா?
இங்கு கல்வித் துறை என்பது சட்ட திட்டங்களை வகுக்கும் நிலைப்பாட்டில் மட்டும் தன்னை அன்றாடம் வலுவூட்டிக் கொள்வதிலேயே கவனம் செலுத்துவதை வேதனைக்குரிய விஷயமாகத்தான் பார்க்க முடியும். நல்லதொரு சமூகத்தினைக் கட்டி அமைக்கத் தேவைப்படும் மனிதப் பண்புகளை வளர்க்கும் கல்வி பெற்ற குழந்தைகளை வார்த்து எடுக்கும் கல்விக் கூடங்களை உருவாக்காமல், தேர்ச்சி மதிப்பீட்டை மட்டும் அளவுகோலாக வைத்து மனப்பாடக் கல்வியை, பாலோ ப்ரையரே கூறுவது போலான வங்கிமுறைக் கல்வியை வழங்கி மனிதர்களுக்கு பதிலாக எந்திரங்களை உருவாக்கும் அபாயகரமான துறையாக, இன்று கல்வித்துறை வளர்ந்து நிற்கிறது.
மாணவர்களுக்கு இலவசங்களை மட்டும் வழங்கி விட்டு, தேவையான அளவுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல், நல்ல கற்பித்தல் சூழலைத் தராமல், வாழ்க்கைச் சூழலுடன் பொருந்தாத கல்வியைக் கற்றுக் கொடுத்து சலிப்பை உருவாக்கும் கல்வி முறையையே இங்கு காண முடிகிறது. சமூக மதிப்பீடுகள் அற்ற கல்வியையும், தேடலையும் தன்னம்பிக்கையையும் உருவாக்காத அடிமை மனநிலையை விதைக்கும் கல்வி முறையையே நம்மால் தர முடிகிறது.
கடந்த பத்தாண்டுகளாக, பள்ளிக் கல்வியில் பயிலும் குழந்தைகள் இந்த சுமையான கல்வி முறையை விரும்புகிறார்களா..மகிழ்ச்சியான கற்றல் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதா .. யாருக்கான கல்வி இது .. குழந்தை நேயக் கல்விமுறை நம்மிடையே உருவாக்கப்பட்டுள்ளதா? வருடந்தோறும் தேர்வுகள் எழுதவைத்து அடுத்த வகுப்புக்கு அனுப்பி விட்டால் கல்வி வழங்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமா ?
இவற்றை எல்லாம் நாம் சிந்திக்கவும் விவாதிக்கவும் தயாராக இருக்க வேண்டும் ..
யாருக்கு தண்டனை தந்து விட முடியும் ?
வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைக் கறிவேப்பிலைக் கொத்து மாதிரி வைத்துப் பாதுகாக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடிக்க விரும்புவதில்லை. அடித்தல் என்பது கடந்த காலச் சொல். அவரவர் சொந்தக் குழந்தைகளையே ஆசிரியர்களால் அடிக்க முடிகிறதா என்பதை எண்ணிப் பார்த்தால், விடை கண் முன்னே வந்து நிற்கும். எங்களுக்கு மாணவர்களை அடிக்க உரிமை வேண்டும் என்று கோரும் ஆசிரியர்கள் இதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடைசி பெஞ்ச் மாணவர்கள்
ஒவ்வொரு வகுப்பறையும் தனக்கே தெரியாமல் ஒவ்வொரு வருடமும் சில குழந்தைகளை வகைப்படுத்தி ‘லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ்’ என்ற பட்டத்தை வழங்கி வன்முறையாளர்களாக உருவாக்கி வருவதை அறிவோம். கற்றல் குறைபாடு உள்ளவர்கள், மெதுவாகக் கற்போர், கற்பித்தல் குறைபாட்டால் கற்றல் இடைவெளி ஏற்பட்ட குழந்தைகள், ஆர்வமின்றி கவனச் சிதறலில் ஈடுபடும் குழந்தைகள், குடும்பச் சூழலால் கற்றலுக்குள் வர இயலாத குழந்தைகள்.. என பல்வேறு காரணங்களால் ‘லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்ஸ்’ ஆக மாறிவிட, அவர்களுக்கென்று ஒரு உலகம் பிறக்கிறது. அங்கு அவர்கள் தனிப் பெரும் ஆட்சி நடத்த விழைகின்றனர். விளைவு, வன்முறையாளர்களாக உருவாகுகின்றனர். ஆனால் எப்போதும் போல ஆசிரியர்கள் அவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள், தண்டக் கருமாந்திரங்கள் என்ற வசைகளைப் பாடியபடியே கடந்து செல்கின்றனர்.
என்ன செய்யலாம்?
பள்ளிகளின் முகங்கள் மாற வேண்டும். பெற்றோர்-சமூகத்துடன் அவை கைகோர்க்க வேண்டும். வகுப்பறைகள் மாற்றம் பெற வேண்டும். குழந்தைகள் விரும்பும் கருத்துச் சுதந்திரம் மிக்க வகுப்பறைகளாக அவை மாறவேண்டும். ஆசிரியர்களின் அதிகார தோரணை முற்றிலும் அழிந்து, அன்புமயக் கற்பித்தல் முறை வகுப்பறைகளில் மலர வேண்டும். விளையாட்டு, ஓவியம், பாட்டு உள்ளிட்ட அனைத்துவிதமான பயிற்சிகளும் முறையாக பள்ளிகளில் தரப்பட்டு அததற்குரிய ஆசிரியர்களை நியமித்து பன்முகத்தன்மை கொண்ட மாணவர்களை வளர்க்கத் திட்டமிட வேண்டும். என்சிசி, என்எஸ்எஸ், ஜெஆர்சி போன்ற அமைப்புகளை வளாகத்திற்குள் கொணர்ந்து, 12-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து, அனைத்து மாணவர்களையும் ஏதாவது ஒரு அமைப்பில் ஈடுபடுத்தி அவற்றின் விதிமுறைகளைப் பின்பற்றும் பழக்கத்தை உருவாக்குதல் அவசியம். மன நல ஆலோசகர் நியமனம் அவசியம் தேவை. வாசிப்புப் பழக்கத்தை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நிச்சயம் உருவாகும். அன்றாடம் பள்ளிப் பிரார்த்தனைக் கூட்டங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்கள் குறித்தும், வரலாற்று நிகழ்வுகள் குறித்தும், பல்வேறு ஆளுமைகள் குறித்தும் தொடர்ந்து அறிமுகப்படுத்துவது முக்கியம்.
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஏதோ ஒரு பொக்கிஷம் புதையலாக இருப்பதைக் கண்டறிய முயல வேண்டுமே தவிர பள்ளியை விட்டு வெளியே அனுப்பி வாழ்நாள் தண்டனை அளிப்பது நிச்சயம் அறமற்ற செயலே.
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (அ3) –
[email protected]ail.com – 99769 86098)

Spread the love