September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தலையங்கம்

கூட்டாட்சி தத்துவத்தை உறுதிப்படுத்துவோம்!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று மாநிலத்தின் உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த 25 தலைப்பிலான கோரிக்கைகளைப் பட்டியலிட்டு விரிவான ஆவணமாக பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார். தமிழகத்தின் உடனடித் தேவையான கொரோனா நோய்க்கான தடுப்பூசியைத் தங்கு தடையின்றி தந்திடவேண்டும், ஊட்டி மற்றும் செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலைகளை செயல்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரி பாக்கியையும் தமிழகத்திற்குரிய நிதியாதாரங்களையும் தாமதமின்றி வழங்க வேண்டும், நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டா விவசாயத்தைப் பாதுகாத்திட மேகதாது அணைத் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை உடனே துவக்க வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளுடன் இட ஒதுக்கீட்டு அளவை மாநிலங்களே தீர்மானிக்கும் உரிமை இருந்திட வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்ட திருத்தங்கள், தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும், நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் தமிழகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையிலான உறவினை ஆண்டான்-அடிமை என்ற நிலையிலிருந்து பார்க்காமல் அரசியலமைப்புச் சட்டம் நிர்ணயித்துள்ள கூட்டாட்சி தத்துவம் எனும் உயர்ந்த விழுமியத்தின் அடிப்படையில் பார்த்து ஒன்றிய அரசு தமிழக அரசின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். இத்தகு அணுகுமுறையே ஒன்றிய மாநில உறவுகளை மேம்படுத்த உதவிடும். ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படும் நிலையே உள்ளது. மாநில ஆளுநர்கள் தங்களின் அதிகார எல்லைகளை மீறிச் செயல்படுவதும், ஒன்றிய அரசு தன் ஒற்றை அதிகாரத்தைத் திணிக்க முயல்வதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி உள்ளன. இந்நிலையிலிருந்து மாறி இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாத்திட கூட்டாட்சி தத்துவத்தை ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதையே தமிழக அரசு மட்டுமல்ல, மக்களும் எதிர்பார்க்கின்றனர் நரேந்திர மோடி புரிந்து கொள்வாரா?
– ஆசிரியர் குழு

பிரதமரைக் காணவில்லை!

தொற்று நோயின் இரண்டாவது அலையின் வீச்சில் மூச்சுத் திணறி மக்கள் அவதிப்பட்டிருக்கும் சூழலில் நாட்டின் பிரதமரும், அவரின் இணைபிரியா நண்பர் அமித்ஷாவும் காணாமல் போயுள்ளனர். உலக நாடுகளில் எல்லாம் தொற்று நோயின் அபாயம் விலகிக்கொண்டிருக்க இந்தியா மீட்சியின் அறிகுறியே தென்படாமல் தத்தளிக்கிறது. நோயின் துயரம் ஒரு புறம், நோய்த் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அறிவிக்கப்படும் ஊரடங்கு உறுத்துவந்தூட்டும் துயரம் ஒரு புறம் என்று மக்கள் படும் அவதி சொல்லிமாளாது. முதல் அலையின் போது கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் வாழ்வாதாரங்களை இழந்து குடும்பத்துடன் நடந்தே தங்கள் பிறப்பிடம் நோக்கி பசி, பட்டினியுடன் நடைப்பயணம் மேற்கொண்டு கடும் துயரத்திற்கு ஆளானர்கள். பலர் மாண்டும் போனார்கள். கொரோனா காலத்தில் அடுத்த பெருந்துயராக வேலையின்மை மக்களை வாட்டி வதைக்கிறது. வேலையிழந்து பரிதவிக்கும் தொழிலாளிகள் குடும்பங்கள் உயிர்பிழைத்திருக்க ஊரடங்குகாலத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கங்கள், பொருளாதார நிபுணர்களின் வேண்டுகோளை மோடி அரசு கடைசிவரை கண்டு கொள்ளவேயில்லை. விவசாயிகளுக்கு விரோதமாக மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசு கடந்த 6 மாதங்களாகப் போராடி வரும் விவசாயிகளின் குரலைக் கேட்க மறுக்கிறது. 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் உயிர் நீத்தபிறகும் பிரதமர் மனம் இரங்கவில்லை. மத்திய அரசைக் கண்டித்து மே 26 அன்று கருப்பு தினமாக நாடெங்கிலும் அனுசரிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதன் காற்றைப் பிடுங்கிவிடும் வேலையே நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம், அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற தொழிலதிபர்களின் வருமானம் பல மடங்கு அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. பொதுமுடக்கக் காலத்தில் முகேஷ் அம்பானிக்கு ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்திய ஆட்சியாளர்களின் பாரபட்சமான கொள்கை அம்பலப்பட்டு நிற்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது செல்வவரி விதிக்க அரசு மறுக்கிறது. பெரும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவிக்கும்போது புதிய நாடாளுமன்றக் கட்டடம், பிரதமருக்கு சொகுசு பங்களா திட்டங்களைக் கைவிடச் சொல்லி நாட்டின் மீது அக்கறையுள்ள அனைவரும் இடித்துரைத்தும் மோடி அண் கோ அதைக் கேட்கத் தயாரில்லை. அவ்வப்போது மக்களுக்கு அறிவுரைகளை வழங்கும் மோடி- அமித்ஷா இணையர்கள் மக்கள் கோரிக்கை வைத்துப் போராடும்போது மட்டும் கண்ணில் படுவதில்லையே, ஏன்? –                                                                                                                                                     ஆசிரியர் குழு

Spread the love