August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தறிகெட்டு அலையும் தனியார் கல்வி நிலையங்கள்

ஒரு நாட்டின் உயர்கல்வியின் வளர்ச்சியே அந்நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாகும். நம் நாட்டின் உயர்கல்வியின் நிலைமை மிகவும் தரந்தாழ்ந்து போயுள்ளது. இதற்கான காரணம் கல்வி கொடுக்கும் கடமையை ஒன்றிய-மாநில அரசுகள் தட்டிக் கழித்துவிட்டு பொறுப்பினை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட்டதேயாகும்.
மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் என்று அனைத்துப் படிப்புகளும் தனியாரிடம் விடப்பட்டு சீரழிந்துள்ளன. லாப நோக்குடன் மட்டுமே நடத்தப்படும் தனியார் கல்வி நிறுவனங்களால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது. பெற்றோர்களின் பணம் விரயமாகிறது.
இன்று உலகில் கல்வியைக் கட்டணமின்றி வழங்கிய நாடுகளே தரவரிசைப் பட்டியலில் முதல் வரிசையில் இருக்கின்றன. அந்த நாடுகளில் எல்லாம் கல்வி கொடுக்கும் பொறுப்பை அரசுகளே ஏற்றுள்ளன என்பதை நமது அரசுகள் கவனிக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இந்தியாவின் இடம் 132 என்பதற்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். 2014-ல் உயர்கல்வியில் தனியாரின் பங்கு 17 விழுக்காடாக இருந்தது. எட்டாண்டுகளில் இப்போது 49 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தமிழகத்தில் இருக்கும் 476 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 225 கல்லூரிகளில் அடிப்படை வசதிகளும், தகுதியான ஆசிரியர்களும் இல்லை என்ற உண்மை வெளியாகியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை புகுத்தியுள்ள எண்ணற்ற போட்டித் தேர்வுகள் கல்வியின் நோக்கத்தையே சிதைத்துள்ளன. கற்றலினும் முக்கியமானது சூநுநுகூ, சூநுகூ, சூகூஹ, துநுநு போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதுதான் என்ற அவலம் உருவாகியுள்ளது. பைஜூஸ், ஆகாஷ், ஆலன், டைம்ஸ் போன்ற கோச்சிங் மையங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றன. எட்டாம், ஒன்பதாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் இத்தகு கோச்சிங் மையங்களில் பயிற்சி பெறுகின்றனர். இதனால் ஆகும் பணச்செலவுடன், கடும் மன உளைச்சலுக்கும் மாணவர்கள் ஆளாகின்றனர். தறிகெட்டுப் போயுள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கடிவாளம் போடாவிடின் கல்வி ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும். ஏராளமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தியா போன்ற வளரும் நாட்டில் கல்வி கொடுக்கும் பொறுப்பை அரசுகளே ஏற்றுக் கொள்வதுதான் இப்பிரச்சனையைத் தீர்க்கும் வழி.
-ஆசிரியர் குழு

Spread the love