June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தரமா, தகுதியா, தடையா..?

முனைவர் ச.சீ. இராஜகோபாலன்
தரம் என்ற சொல் நிர்வாகவியலில் அதிகம் புழங்கும் வார்த்தை. தரத்தைத் துல்லியமாக அளவிடுவது கடினம். எனவே தரத்திற்கு எல்லை வகுக்கப்படும். 5 செ.மீ. நீளமுள்ள ஆணியை இலட்சக்கணக்கில் தயாரிக்கும் பொழுது பலவும் 5 செ.மீ.க்குக் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். 0.1 செ.மீ. என்று எல்லை வகுத்தால் 4.9 செ.மீட்டரிலிருந்து 5.1 செ.மீ. வரையுள்ள ஆணிகள் ஏற்கப்படும். மற்றவை நிராகரிக்கப்படும்.
கல்வியில் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் தரத்தை வெளிப்படுத்துவதாகக் கொள்ளப்படுகின்றன. தேர்வு மதிப்பெண்கள் நிலையானவையல்ல. ஒரு தேர்வில் 90 விழுக்காடு பெறுபவர் மற்றொரு தேர்வில் 40 விழுக்காடே பெறுவதும் உண்டு. தேர்வு முடிந்து சில காலத்திற்குப் பின் அதே வினாத்தாளைக் கொடுத்த பொழுது மாணவரது சாதனை வேறுபட்டு இருப்பதும் காணப்பட்டது. தமிழில் 90 விழுக்காடும், கணிதத்தில் 25 விழுக்காடும் பெற்றால் எது மாணவரது உண்மையான மதிப்பீடு? தேர்வுகளில்லாக் கல்விமுறையைப் பல நாடுகளும் பின்பற்றுகின்றன.
‘கற்றதையெல்லாம் மறந்தபின் எது தக்கி நிற்கின்றதோ அதுதான் கல்வி’ என்று ஒரு கல்வியாளர் வரையறுக்கின்றார். ‘ஒருவரிடம் ஏற்படுத்தும் மாற்றமே கல்வி’ என்றும் சொல்லப்படுகின்றது. தன் வாழ்க்கையில் கற்றவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதே கற்றலின் வெற்றி தோல்வியை வெளிப்படுத்தும். ஆக, கற்கும் பொழுதே ஒருவரது கற்றலை மதிப்பிடுவது முறையாகாது. பள்ளிப் பருவத்தில் சாதாரணமாக இருந்தவர் பின்னர் ஒளிமிக்க வாழ்க்கைக்கு உரியவராக மாறியிருப்பதைத் தனி நபரது திறமை என்று கருதுகின்றோம். அதே போல கற்கும் பொழுது சிறந்து விளங்குபவர் பலரும் வாழ்க்கையில் தோல்வியடைவதையும் காண்கின்றோம்.
வினா-விடை, மதிப்பெண் முறை ஒருவரது ஆளுமையை அளக்கும் கருவிகளாகாது. கல்வியின் மூலம் தனி நபர்களிடம் ஏற்படுத்தும் மாற்றமே அவர்களை அடையாளப்படுத்தும். தேர்விற்கு ஆயத்தப்படுத்தல் என்பது பள்ளிகள் பின்பற்றும் முறையாகும். அவை மாணவரது உண்மையான கற்றலை வெளிப்படுத்தாது.
(044-23620551 – [email protected])

Spread the love