September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தமிழ் சினிமா தரம் உயர்த்தப்படுமா..?

சோழ. நாகராஜன்
சினிமா எனும் கலையின் இலக்கணப்படி தமிழ் சினிமா என்பது உண்மையில் ஒரு கலைக்குரிய லட்சணங்களோடு சினிமா ஆகியிருக்கிறதா? அறிவியல் பெற்றெடுத்த உன்னதக் கலையான சினிமாவை நாம் அதன் தனித் தன்மையோடுதான் அணுகுகிறோமா? ஒரு மொழியின், மொழியினம் சார்ந்த பண்பின் அசலான பிரதிபலிப்பாக அந்த மொழியின் கலையும் இலக்கியமும் இருத்தல் அவசியமல்லவா? அந்த அவசியம் சினிமாவுக்குப் பொருந்தாதா?
பேசாப்பட யுகத்தில் நம் சினிமாக்களின் மொழி குறித்த உணர்வு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கவில்லை. ராஜா ஹரிச்சந்திரா என்று அதன் பெயரைத் தமிழில் எழுதிவிட்டால் அதுவே அதுவொரு தமிழ் சினிமா என்று சொல்வதற்குப் போதுமான தகுதி பெற்றதாக ஆகியிருந்தது. அந்நாளில் பேசாப்படத்தை ‘ஊமைப்படம்’ என்றே சொல்லி வந்தார்கள். ஆனால், ஒருநாள் உலகம் முழுதும் சினிமா பேசத் தொடங்கியபோது அது எந்த மொழியில் பேசுகிறது என்பது முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
ஆங்கிலப் படம் என்றால் அதில் வரும் கதை மாந்தர் ஆங்கிலத்தில் உரையாடினார்கள். அதுபோலவே பிற மொழிப் படங்களும் அந்தந்த மொழிபேசிய கதாமாந்தர்களால் அந்தந்த மொழியின் சினிமாக்கள் என்று அறியப்பட்டன. சரி… மொழி ஒன்றைப் பேசினாலே அது அந்த மொழியின் முழு சினிமா ஆகிவிடுமா? அந்த சினிமா அந்த மொழியின் பண்பாட்டை, மக்களின் வாழ்க்கையினை ஓரளவேனும் அசலாகப் படம் பிடித்தல் வேண்டாமா?
தமிழ்த் திரைப்படத்தின் துவக்க காலத்தில் படங்களின் பெயர்கள் என்னமாதிரி இருந்தன என்று பார்ப்போம். காளிதாஸ், ஹரிச்சந்திரா, ராமாயணம், சத்யவான் சாவித்திரி, திரௌபதி வஸ்திராபகரணம், ஸ்ரீகிருஷ்ணலீலா, அதிரூப அமராவதி, பக்த நந்தனார், பக்த ராமதாஸ், லங்கா தகனம், மார்க்கண்டேயா, நள தமயந்தி, ராதா கல்யாணம், சாரங்கதாரா..! அப்பப்பா… இவையெல்லாம் 1931 தொடங்கி 35 முடிய தமிழில் வெளிவந்த சில தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள். இவை அத்தனையும் புராண-இதிகாசக் கதையாடல்களை உள்ளடக்கமாகக் கொண்டவை. மக்களின் வாழ்வோடு கிஞ்சித்தும் தொடர்பில்லாத் தன்மை கொண்டவை. மக்கள் அறிந்துவைத்திருந்த கதைகளையே மறுபடியும் மறுபடியும் சினிமாவில் புகுத்தி, காசு பார்த்தார்கள் அந்நாளைய சினிமா கர்த்தாக்கள்.
35 ல் பி.கே.ராஜா சாண்டோ என்ற மேதமை மிக்க தமிழ்க் கலைஞன்தான் முதன்முதலாகத் தமிழ் சினிமாவில் மக்களின் வாழ்க்கையை அருகில் சென்று படம்பிடித்துக் காட்டிய முதல் கலைஞன். ஆமாம், அவர் உருவாக்கிய ‘மேனகா’ எனும் திரைப்படம்தான் தமிழின் முதல் சமூகப் படம். அதற்குப் பின்னரும் நம் தமிழ்த் திரைப்பட உலகம் புராணத்தைத் தனக்கான அட்சயபாத்திரமாகக் கருதிக்கொள்வதிலிருந்து மிக நீண்டநெடிய காலம் விடுபடவே இல்லை.
பெயர் மற்றும் கதையமைப்பு இவற்றில் நவீன மாற்றங்கள் வராமலேயே இருந்ததற்கு தமிழ் சினிமாவானது இங்கே நாடகத்தின் திரைப் பிரதிபலிப்பாக இருந்தது முக்கிய காரணம். ஆம். தமிழ் சினிமாவின் தோற்றமே நாடகங்களின் வீடியோ பதிவுகளாக அமைந்துபோயின.
இன்றைய சமரசம் மிக்க வணிக சினிமாவின் விதைகள் இப்படித்தான் அன்றைக்கே விதைக்கப்பட்டு, முளைவிட்டன. இந்தியாவில் வங்க மொழியிலும், மலையாளத்திலும் அசல் சினிமாவின் நேர்த்திமிக்க தரம் ஓரளவேனும் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்தபடியாகக் கொஞ்சம் கன்னட மொழியிலும், அதிலும் குறைவாக இந்தியிலும் இத்தகைய சினிமாக்களுக்கான நல்ல முயற்சிகள் நடந்தன. தமிழ் சினிமாவும் தெலுங்கு சினிமாவும் பாமர ரசனையை உசுப்பேற்றிக் காசு பண்ணுவதையே வெற்றிகரமான திரைப்பட முயற்சியெனப் போலியாக நம்பவைத்துக்கொண்டிருந்தன. இப்படிக் கூறுவதால் அங்கெல்லாம் நல்ல திரைப்பட முயற்சிகள் நடக்கவே இல்லை என்பதாகவும் பொருள் கொண்டுவிட வேண்டாம். முன்னர் ஸ்ரீதர், வீணை எஸ்.பாலச்சந்தர்.. பின்னர் மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்றோர் தமிழ் சினிமாவில் சில நல்ல மாற்று முயற்சிகளை முயன்றவர்கள்தாம்.
தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெயர் மட்டுமா இல்லை? தமிழ் வாழ்வும் இல்லைதானே? மலையாள சினிமாவில் கேரளத்தைத் தரிசிக்கலாம் என்பார்கள். ஆமாம், அங்கே நாயகனும் நாயகியும் தங்களின் காதல் கனவில் ஒருபோதும் அந்த மண்ணுக்கு அந்நியமான பூமியில் ஆடிப்பாடிக் களிப்பதில்லை. தங்களது பண்பாட்டுக்கு அந்நியமான உடைகளை அணிந்து கொள்ளும் ஆடையலங்காரக் காட்சிகளை வைப்பதில்லை. கையாளுகிற கதையாடல்களுக்கு விரோதமாக, லாஜிக் இடிக்கிற எந்தவொரு அம்சத்தையும் நம் தமிழ் சினிமா அளவுக்கு மலையாள சினிமாவிலோ அல்லது வங்க சினிமாவிலோ பார்ப்பது அரிது.
சினிமா என்பது கலைகளின் சங்கமமான கலையும்கூட. அதுமட்டுமல்ல… அது காட்சிக்கலை. காட்சியில் உணர்த்த இயலாததைத்தான் கதை மாந்தர்களின் வாய்மொழி வசனங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பது சினிமாவின் பிரதானமான சட்டம். ஆனால், நாம் இன்றுவரையில் படம் பிடிக்கப்பட்ட நாடகங்களையே சினிமா என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழ் சினிமாவுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்ற நிலை கூட இங்கே இல்லை. இன்றுவரையில் மாஸ்டர், பீஸ்ட் என்றெல்லாம் பெயர் வைக்கும் தவறுகள் நின்றபாடில்லை.
தமிழ் சினிமாவில் தமிழ் மனிதர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்லுவதே நாம் அதைத் தமிழ் சினிமா என்றழைத்திடச் சரியான காரணமாக அமைய முடியும். வெறும் சமரசம், பெரும் சமரசம், எதிலும், எப்படியும், எப்போதும் சமரசம்… அதன் பிரதான நோக்கம் பணம் போட்டுப் பணம் அள்ளும் வணிகம் மட்டுமே என்றாகியிருக்கிறது.
அங்கொன்றும், இங்கொன்றுமாக நல்ல முயற்சிகள் இல்லாமல் இல்லை. ஆனால், எது எல்லாமுமாக வியாபித்துள்ளது என்பதே பேசப்பட வேண்டியது. தமிழ் சினிமாவை எல்லாவகைகளிலும் தமிழ் சினிமாவாகத் தரமுயர்த்துவது எல்லா தமிழ் சினிமாவினரின் தலையாய கடப்பாடுமாகும் என்பதை நாம் உணர்வது எப்போது..?
(98425 93924 – [email protected])

Spread the love