May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தமிழ்நாடு நிதியமைச்சரின் நேர்காணல்

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சன்னி வர்மாவுக்கு கடந்த மாதம் அளித்த பேட்டி இன்றும் பொருத்தமாகவே உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தொடர்ச்சியாக மாநில அரசுகளின் செலவழிக்கும் சக்தியின் மீது தனது கட்டுப்பாட்டை அதிகரித்து வருகிறது.
ஒன்றிய மாநில நிதி உறவுகளின் வரலாற்றை முதலில் கூறுகிறேன், டெல்லியிலிருந்து ஆள்பவர்களின் கூட்டாட்சிக்கு எதிரான, மாநிலங்களுக்கு எதிரான, சர்வாதிகார அணுகுமுறையே இப்பிரச்சினையின் தொடக்கம். அரசியலைப் பொறுத்தவரை ஒருவரின் நிலைப்பாடு என்பது அவர் எந்தப் பக்கம் அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்தது என்று சொல்வார்கள். இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் ஒரு பிரச்சினையில் உங்களது நிலைப்பாடு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறீர்களா, சட்டமன்றத்தில் அமர்ந்து இருக்கிறீர்களா அல்லது வீதியில் நின்றுகொண்டு பேசுகிறீர்களா என்பதைப் பொறுத்தது. அந்த பழமொழிக்கு மிக சிறந்த உதாரணமாக விளங்குபவர் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
ஏனெனில் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகளுக்கான வலிமையான குரலாக அவர் விளங்கினார். ஆனால் அவரே பிரதமரானதும் அவரது செயல்பாடுகள் தலைகீழாக மாறின. இன்று நிதி, நிர்வாகம், மாநில அரசுகளுக்கு அநீதி இழைக்கப்படும் ஒன்றிய அரசின் திட்டங்கள் என அனைத்து வகையிலும் மாநிலங்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும் அளவிற்கு மாறிவிட்டன. இதுவரையிலான இந்திய வரலாற்றில் இதுவே மிக மோசமான சர்வாதிகாரத் தன்மை மிக்க அதிகாரப் பறிப்பு நடவடிக்கைகள் எனக் கூறலாம்.
பதிமூன்று ஆண்டுகள் குஜராத் முதல்வராக அவர் பதவி வகித்தபோது பேசியவற்றுக்கு முற்றிலும் முரண்பட்டு தற்போது செயல்படுகிறார். அடிப்படையான கள சூழல் இதுதான். அவர்கள் மெல்ல மெல்ல நயவஞ்சகமான முறையில் மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் ஊடுருவி வருகின்றனர்.
முடிவெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு மிக அருகாமையில் இருக்கும்போது நிர்வாகம் பொறுப்பு உள்ளதாகவும் நல்ல விளைவுகளை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் அதிகரிக்கும் என்பது அடிப்படைக் கோட்பாடு. ஒன்றிய அரசு தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அதிகாரங்களைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும்போது இயல்பாகவே பல வழிகளில் சிக்கல்களை அது உருவாக்குகிறது.
மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு இன்றி எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசால் முறையாக செயல்படுத்த முடியாது. இதை அதிகாரத்தின் மேல்தட்டில் உள்ளவர்களுக்கு உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசுகள் இருக்கின்றன.

Spread the love