September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தமிழறிவும் நல்லிணக்கமும்
அடையாளமெனக் கொண்ட ஆளுமை…

சோழ. நாகராஜன்

நெல்லை கண்ணன் மறைந்துவிட்டார். தமிழின் வளங்களையெல்லாம் அள்ளிப்பருகி, அதனைக் கேட்போர் வியக்க உரைத்து வந்ததொரு காலப் பெட்டகம் இன்று இல்லை. ஆம், அவர் ஒரு காலப்பெட்டகம்தான். இத்தனைக்கும் அவர் தன்னை ஒரு பண்டிதராகக் கருதிக்கொண்டவர் அல்ல. இலக்கியத்தில் அவர் தொடாத வகைமையே இல்லை. எதையும் எளிய முறையில் இயம்பி, தான் எடுத்துக்கொள்ளும் பொருளுக்குப் பெருமைகளைச் சேர்த்துவிடுபவர் நெல்லை கண்ணன்.
அவர் ஒரு அபூர்வமான மேடை ஆளுமை. மிகவும் தனித்துவமானது அவரது மேடைப்பேச்சு. தமிழில் அவர் தொடாத பொருளில்லை என்பது போலவே அவர் விமரிசிக்காத ஆளுமைகளே இல்லை என்பதும் உண்மைதான். அடிப்படையில் ஒரு காந்தியவாதியாக-காமராஜர் பற்றாளராகவே அவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டார். தமிழறிந்த ஒரு காங்கிரஸ்காரருக்கே உரிய முழுமையான அடையாளங்களோடுதான் அவர் மேடைப்பேச்சுகளும் அமைந்திருந்தன. அதனாலேயே அவரைப் போற்றியோரும் உண்டு. அதற்குச் சமமாக அவரை விமரிசித்தோரும் உண்டு. இவை எது பற்றியும் அவர் கவலைப்பட்டதாதவே தெரியவில்லை. தனது மனதிற்குச் சரியென்று பட்டதையெல்லாம் ஒளிவின்றி வெளியிட்டவாறு அவரது மேடைப் பேச்சுகளின் பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
மகாகவி பாரதி பற்றிய அவரது தொடர் சொற்பொழிவுகள் பலரது கவனம் ஈர்த்தன. அவை ஆய்வு நோக்கில் அமைந்தவையாகவும் கருதத்தக்கன. திருக்குறளாகட்டும், கம்பராமாயணமாகட்டும் எதிலும் அவரது தனித்துவ முத்திரை இருக்கும். எந்தப் பேச்சினூடாகவும் அவரது சமூக எள்ளல் நையாண்டி ரசிக்கத்தக்கதாக இருக்கும். அதனாலேயே அவரது நெல்லை வட்டார மொழிநடைக்கு தமிழகமெங்கும் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் ரசிகர்கள் அமைந்தார்கள்.


பெரியார் குறித்து சரியானதொரு புரிதலுக்கு ஒரு கட்டத்தில் அவர் வந்து சேர்ந்தார். அது காலம் அவருக்கு இட்ட கட்டளைதான். அவருள் ஊறிக்கிடந்த மரபார்ந்த தமிழ் ஞானம் அவரையொரு மதச்சார்பற்ற ஆன்மீக நெறியாளராகவும் திகழச் செய்திருந்தது. அதனாலேயே ஃபாசிசம் தலையெடுத்திருக்கிற இன்றைய சூழலில் அவருக்கு எதிரான நெருக்கடிகளும் உருவாயின. அவற்றையும் தனக்கேயுரிய நகையுணர்வுடன் எதிர்கொண்டு கடக்கத் துணிந்தார் நெல்லை கண்ணன்.
திருநெல்வேலியில் ந.சு. சுப்பையா – முத்துலட்சுமி தம்பதியினருக்கு 1945-ம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் நான்காவது மகனாகப் பிறந்தார் கண்ணன். அவருடன் பிறந்தோர் எட்டு பேர். புகுமுக வகுப்பு வரையில் பயின்ற கண்ணன் தனது தந்தையாரிடம் தமிழ் பயின்றார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய நெல்லை கண்ணன் 1996-ல் நடந்த பொதுத்தேர்தலில் சென்னை சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. அவர் போட்டியிட்டது திமுக தலைவர் கலைஞரை எதிர்த்து.
நெல்லை கண்ணன் குறுக்குத்துறை இரகசியங்கள் தொகுதி 1 மற்றும் 2 கட்டுரைத் தொகுப்பு நூல்களையும், வடிவுடை காந்திமதியே, காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள், திக்கனைத்தும் சடைவீசி, பழம்பாடல் புதுப்பாட்டு போன்ற கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், குவைத், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். தான் கற்ற தமிழை மற்றவர்க்குச் சுவைபடத் தருவதில் அவருக்கு ஈடு அவரே என்கிற அளவு திறனும் படைப்பூக்கமும் கொண்டிருந்தவர் நெல்லை கண்ணன். முதலில் சொல்லின் செல்வர், நாவுக்கரசர் என்றெல்லாம் அழைத்த அவரை பின்னர் தமிழ்க் கடல்’ என்றே அழைத்தார்கள் தமிழன்பர்கள். கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அவருக்கு இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பித்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவருக்குக் காமராசர் கதிர் விருது வழங்கியது. கலை - இலக்கியம், அரசியல், சமூகம் என்று எந்தத் துறையெனினும் அதில் தோய்ந்த ஞானத்துடன் உரை நிகழ்த்த வல்ல நெல்லை கண்ணனின் பேசும் தொனி, உடல்மொழி ஆகியவை கடும் விமரிசனத்திற்கு உள்ளானதுண்டு. வட்டாரச் சொற்களும், நையாண்டியும் பொங்கிவழியும் நெல்லைச் சீமைக்கேயுரிய மொழிநடையில் தனது சொற்பொழிவினூடாக அவர் புகுந்து விளையாடும்போது அவற்றை ரசித்து மகிழாதார் இல்லை. அதனை மேட்டிமை கொண்ட சாதியக்கூறாக அடையாளப்படுத்தி அவரை விமரிசிப்போரும் உண்டுதான். அது பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மாறாக, தனது வெள்ளந்திப் பேச்சால் அவர் பலமுறை வம்புகளை விலைக்கு வாங்கியுமிருக்கிறார்.

அப்படியொரு நிகழ்வுதான் நெல்லை மேலப்பாளையத்தில் அவர் நிகழ்த்திய உரையினைத் தொடர்ந்து அவர் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளான சம்பவம். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடந்த அந்தக் கூட்டத்தில் மத்திய ஆட்சியாளர்களின்மீது அவர் வைத்த விமரிசனத்தினூடாக அவர் பயன்படுத்திய சொற்கள் அவரை சிக்கலில் மாட்டிவிட்டன. மோடி, அமித் ஷாவின்சோலியை முடிக்கணும்’ என்று அவர் கூறியது அவர்களை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற பொருளில்தான்! ஆனால் பாஜகவினர் அதை பெரிய பிரச்சனையாக ஊதிப் பெருக்கி அவரை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தினர். அதற்கு அடிபணிந்த அதிமுக அரசு அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையிலேயும் தள்ளியது. ஆனால் உண்மையும் நேர்மையும் தன்னிடம் இருப்பதாக உணர்ந்த அவர் தனது நகைச்சுவை உணர்வு கொண்டு அவற்றையெல்லாம் கடந்து வந்துவிட்டார்.
அவர் வைத்திருந்த தெய்வ நம்பிக்கை அவரை ஆற்றுப்படுத்தியதோ இல்லையோ, அவருள் பொதிந்து கிடந்த தீராத தமிழ் அவரது தன்னம்பிக்கையின் ஆதாரமாக இருந்தது என்பதே உண்மை. தமிழின் வளமைகளையெல்லாம் ஊரறியச் சொல்லிக்கொண்டேயிருந்த நெல்லை கண்ணன் என்ற அந்தத் தமிழ்க்கடலின் அலை ஓய்ந்தபோது தமிழ்கூறும் நல்லுள்ளங்கள் எல்லாம் ஒருசேர வருந்தின… அவருக்கு அன்னைத் தமிழால் அஞ்சலி செய்தன.
நெல்லை கண்ணன் புகழ் தமிழ் போலவே நெடிது வாழும்!
(98425 93924 – [email protected])

Spread the love