September 28, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தமிழகத்திற்கென்று தனிக் கல்விக் குழு… வரவேற்போம்!

உமா
மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையின் கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்து சுமார் 3 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போதைய தமிழக அரசு மத்திய அரசின் இப்போக்கை ஏற்காமல் தொடர்ந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது பற்றி சிந்தித்துக் கொண்டுள்ளது. அதன் நீட்சியாகவே சில முன்னெடுப்புகளை இந்த அரசு எடுத்து வருகிறது. 2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கான தனித்துவமான மாநிலக் கொள்கையை வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும் என அறிவித்திருந்தது. அதன்படி, ஏப்ரல் மாதம் 5-ம் தேதி தமிழ்நாட்டிற்கு என தனியாகக் கல்விக் கொள்கையைப் பரிந்துரை செய்வதன் பொருட்டு புது டெல்லி முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி த. முருகேசன் அவர்களது தலைமையில் 13 நபர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தது தமிழக அரசு ..
கல்விக் குழு உறுப்பினர்கள் : பேராசிரியர் எல். ஜவகர் நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்; நீட் தேர்வு குறித்து பரிசீலித்து பரிந்துரை அளிக்க அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியவர்; புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்; புதிய தேசிய கல்விக் கொள்கை மிகப் பெரிய ஆபத்து என இவரது ‘கல்வியைத் தேடி’ நூல் சொல்லும். ஆர். இராமானுஜம், தேசிய கணித அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர்; தொடர்ந்து அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான கற்பித்தல் பாடப் பொருள்களையும், முறைகளையும் குறித்து துறையின் பல்வேறு படிநிலைகளில் இருப்பவர்க்கு வழிகாட்டி வருபவர்; பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; பேராசிரியர் இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக்கல்வி அலுவலர், யூனிசெப்நிறுவனம்; எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்; விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன்; டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்; க. துளசிதாசன், கல்வியாளர்; முனைவர் ச.மாடசாமி, தமிழ்நாடு அறிவொளி இயக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்.. கல்வியியல் எழுத்தாளர்; இவரது நூல்கள் சமகாலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு அகத் தூண்டல் தருபவை . வகுப்பறைகளை உயிருடன் வைத்துக் கொள்ள வழிகாட்டுபவை .இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்; ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று முதல்வர் அறிவிப்பு செய்தவுடன் மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. புதிய ஆசிரியன் வழியாகவும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் சிறப்பான ஆளுமைகள் என்பதில் ஐயமில்லை. கல்வித் துறையில் நேரடியாகப் பணியாற்றிய பலர் இடம் பெற்றிருப்பது மிகுந்த பாராட்டுதலைப் பெறுகிறது. துறை சார்ந்தவர்களுக்குத்தான் கல்வித் துறையில் ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் குறித்த புரிதல், செய்ய வேண்டிய மாற்றங்கள், கல்வி வளர்ச்சிக்கான திட்டமிடல் போன்றன வாய்க்கும். ஏ.கே. ராஜன் குழுவில் கருத்துருக்களைத் தயார்படுத்தி அரசுக்கு அளித்ததில் பெரும் பங்காற்றியவர் பேரா. ஜவஹர் நேசன். அவரையே இக்குழுவிற்கு தலைமைப் பொறுப்பு வகிக்க முதல்வர் ஆணையிட்டிருக்கலாம்.
அதோடு குழுவில் இன்னும் சிலரை இணைத்திருக்கலாம். ஆலோசகர்களாக மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ஆர்..வே. வசந்தி தேவி.. கல்வித் தளத்தில் தொடர்ந்து பணி செய்துவரும் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர்களில் ஓரிருவரையும் இணைத்திருக்கலாம்.
தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?
1976-ல் கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்று 45 ஆண்டு காலம் ஆயிற்று. அதன் விளைவுதான் இன்று கல்வித் துறையில் இத்தனை பிரச்சினைகள். அவற்றை ஆய்வுக்குட்படுத்த பல உப குழுக்களை அமைத்து, கள நிலவரங்களை ஆய்வு செய்து, எதிர்கால சந்ததிகளுக்கான செயல் திட்டங்களை தற்போது அமைக்கப்பட்டிருக்கும் குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கலாம். அரசுப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வுரிமையை மையமாக வைத்து கல்விக் கொள்கையை வடிவமைப்பதே சமூக நீதியைக் காக்கும் செயலாக அமையும்.
தமிழகத்தில் 2631 ஓராசிரியர் பள்ளிகள் இயங்கி வருவதாக கடந்த ஆண்டின் புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. அதோடு பல ஆயிரம் ஈராசிரியர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதனால் தொடக்கப் பள்ளிகளின் தரமான கல்விக்கு உத்தரவாதம் தர உடனடி நடவடிக்கை வேண்டும்.
வகுப்புக்கு ஓராசிரியர் என்ற விதத்தில் ஆசிரியர் நியமனங்கள், கழிப்பறை வசதிகள், தூய்மைப் பணியாளர்கள் நியமனம், வகுப்பறை பற்றாக்குறை, விளையாட்டு மைதானம் இல்லாமை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்
வகுப்பறைகளில் ஆசிரியர்-மாணவர் உறவு நேசம் மிகுந்ததாக இல்லை. ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத பணிகளுக்கு உள்ளாவதோடு அதிகாரிகளின் கைப்பாவைகளாக மாறி விட்டதால் குழந்தைகளுக்கான நேரம் தர மறுக்கும் சூழல் இருக்கிறது. இது மாற வேண்டும். பள்ளி நூலகங்கள் பயன்பாட்டுக்கே வருவதில்லை. குழந்தைகளை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்க பல வருடங்களாகப் பூட்டிக் கிடக்கும் நூலகங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
அடிப்படையான இப்பிரச்சினைகளை சீர்டுத்தினால்தான், அதன் பிறகு உருவாக்கப்படும் கல்விக் கொள்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் நாள் தமிழக அரசு புதிய அறிவிப்புகளாக 28 வகையான அறிவிப்புகளை பள்ளிக் கல்விக்கு வெளியிட்டுள்ளது. திறன்சார் வகுப்பறைகள் உருவாக்கம், நடுநிலைப் பள்ளிகளுக்கு உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் அமைத்தல், ஆங்கில ஆய்வகங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதில் கூட ஓராசிரியர் பள்ளிகள் குறித்தான அறிவிப்புகள் இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி.
அதே சமயம், ஒரு தொலைநோக்குப் பார்வையில் தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டால் கல்விப் புலத்தில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழகம் விளங்கும் என்று உறுதியாக நாம் சொல்ல முடியும்,
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி
நமது மாநிலத்தில் சுதந்திரமாக நம் கருத்துகளைக் கூறுகிறோம். ஆனால் ஏற்கனவே ஒன்றிய அரசு கல்வித்துறை மட்டுமின்றி எல்லாத் துறைகளின் உரிமைகளையும் மாநில அரசிடமிருந்து அபகரித்துக் கொண்டுவிட்டது. அந்த வகையில் கல்வி குறித்தான தனது கொள்கைகளை நாடு முழுவதற்குமான சட்டமாக மாற்றி அமல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை அன்றாடம் ஏதேனும் ஒரு அறிவிப்பை மாநில அரசுகளிடம் திணித்து வருகிறது.
கல்வி உட்பட அனைத்துத் துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதில் அதிதீவிரமாக உள்ள ஒன்றிய அரசு தமிழக அரசு கொண்டுவர நினைக்கும் மாற்றங்களை அனுமதிக்கப் போவதில்லை. நீட் தேர்வுக்கு தமிழக அரசுக்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் தயாராக இல்லை. ஒன்றிய அரசின் ஒப்புதலோடுதான் இந்த அத்துமீறல் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு முன்வைக்கும் மாநில உரிமைகளைப் பெறவே ஒரு கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல்தான் நாட்டில் உள்ளது. அந்தப் போராட்டத்தில் தமிழக அரசுடன் சேர்ந்து குரல் கொடுக்க தமிழக மக்கள் தயாராவோம்!
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (அ3) –
[email protected] – 99769 86098)

Spread the love