June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தண்டனை ஒரு தீர்வு அல்ல

அது – மரத்தின் வேரை வெட்டுவது போல. வேண்டாம்.
நீதி போதனை வகுப்பு ஒரு தீர்வு அல்ல. பெரும்பாலான ஆசிரியர்கள் கடவுள் நம்பிக்கைக் கதைகளைத்தான் கொண்டு வந்து கொட்டுவார்கள். குழந்தைகளின் தன்னம்பிக்கையை மேலும் சிதைப்பார்கள். வேண்டாம்.
‘பகிரும் வகுப்பறை (Sharing Classroom)’ ஒரு தீர்வு. மாணவர்கள் தங்கள் கோபங்களையும் வருத்தங்களையும் கொட்டித் தீர்க்கும் வகுப்பறை. நல்ல தொடக்கத்தைத் தரவேண்டியவர் ஆசிரியர். மாணவரின் பேச்சு ஒவ்வொன்றுக்கும் பதில் பேசவேண்டியவர் அல்லர்.
மாணவர்கள் கொட்டுவதைத் தாங்கும் விசாலமும் பொறுமையும் அவர் இதயத்தின் மாண்புகள். ஆசிரியர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். வகுப்பறை – ஓர் உயிருள்ள சந்திப்பு. அவ்வப்போது வாய்களையும் மனங்களையும் திறக்க வேண்டும்.
பேச்சுக்கு ‘பகிரும் வகுப்பறை’ என்றால் செயல்பாடுகளுக்கு – ‘ஒவ்வொருவரும் ஒரு நட்சத்திரம்.’ ஒவ்வொரு மாணவருக்குள் மிளிரும் தனித்துவத்தை- திறமையை – கண்டறியும் ஏற்பாடு அது. அதற்கு – வாய்ப்பும் அவசியம் ; வெளிப்படும்போது கண்டு கொண்டாடும் கண்களும் அவசியம்.
பள்ளிகளும் சரி – அரசும் சரி நின்ற இடத்தில் நின்று பழைய பழைய யோசனைகளையே முன்வைக்க வேண்டாம்.
கொஞ்ச தூரம்- கொஞ்ச தூரமாவது முன்னால் நடக்க வேண்டும். நடந்து வந்து பேசவேண்டும்.
-பேராசிரியர் ச.மாடசாமி (94441 64836)

Spread the love