May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

டுஜக் டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி

தேனி சுந்தர் வழங்கும் சர்க்கரைப் பொங்கல்.
பொங்கல் அன்று காலையில் பொங்கல் சாப்பிட்ட கையோடு சுந்தரின் புத்தகத்தைக் கையிலெடுத்தேன். எது இனித்தது என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. அப்பப்பா! தெவிட்டாத இன்பம்! குழந்தைகள் மொழி சுந்தருக்கு சரளமாகவும், இயல்பாகவும் வருவது குறித்து பெருமிதம் அடைந்தேன். தமிழில் குழந்தைகள் இலக்கியம் படைத்திட மற்றுமொரு எழுத்தாளர் கிடைத்துள்ளார். குழந்தைகளின் மழலைக்கு யாழும், குழலும் ஒப்பாகா என்று வள்ளுவர் வழி அறிந்துள்ளோம். ஆனால் மழலைக் குரல் ஒலிக்கும் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று வாசகர்களை இன்ப வெள்ளத்தில் மிதக்கச் செய்கிறார் சுந்தர்.
‘டுஜக் டுஜக்… அப்பாவின் டைரி’-யில் இதோ ஒரு உரையாடல்—
கூப்ட்டு கூப்ட்டு திரும்பலன்னா/ கோவம் வரும்ல../ அப்பல்லாம் பாப்பா/ இப்பிடித்தான் கூப்பிடுறது/ .. ஏ அழகான அம்மாவே.. பார்க்க மாட்டியா..?.. / ஏ மீசக்கார அப்பாவே என்னைய/பார்க்க மாட்டியா?../ இப்பிடிக் கூப்பிட்டா/ யாருக்குத்தான் பிடிக்காது.. அவுக அம்மாவுக்கு/ உடனே வெக்கம் வந்துரும்..!..
என்று குழந்தை மொழியோடு நகைச்சுவையும் மிளிர எழுதி வெற்றி கண்டுள்ளார் சுந்தர். புத்தகத்தைப் படித்து முடித்ததும் வாசகர்களுக்கு அடடா! நம்ம குழந்தையின் மழலையை டைரியில் எழுதிவைக்கத் தவறிவிட்டோமே என்ற ஆதங்கம் வருவது உறுதி. அதுவே சுந்தரின் வெற்றி. கல்வியாளர்கள் ச.மாடசாமி, ராமானுஜம் ஆகியோர் அணிந்துரையுடன் ஓவியர் ஸ்ரீரசா கைவண்ணத்துடன் பாரதி புத்தகாலயம் நூலினை பாங்குடன் வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியராகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயலாளராகவும், புதுவிழுது இதழ் ஆசிரியராகவும், கல்வி உரிமைப் போராளியாகவும் வலம் வரும் சுந்தர் குழந்தை இலக்கிய எழுத்தாளராகவும் பரிணமித்துள்ளார்.
புதிய ஆசிரியனின் வாழ்த்துகள்!
வெளியீடு: பாரதி புத்தகாலயம். விலை:ரூ.100/-
-பெ.விஜயகுமார்

Spread the love