September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

டாணாக்காரன்

சினிமாத்தனமே இல்லாத அனுபவமாக
ஒரு போலீஸ் சினிமா…
சோழ. நாகராஜன்
எளிய மக்களின் மனங்களில் நீண்ட நெடுங்காலமாகப் பதிந்துவிட்ட போலீஸ் எனும் பெரும் பிம்பத்தைத் தகர்த்து எறிந்தும் சுக்குநூறாகக் கிழித்துமிருக்கிறது இந்த டாணாக்காரன் என்ற தமிழ் சினிமா. இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரும், ஜெய்பீம் படத்தில் காவல்துறையின் கொடூரமான எஸ்.ஐ.-ஆக வந்து எல்லோரையும் மிரட்டியவருமான தமிழ் என்பவர்தான் இந்தப் படத்தின் இயக்குநர். அதுமட்டுமல்லாமல் அவரே 10 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய அனுபவமும் பெற்றவர். எனவே இந்த டாணாக்காரன் ரத்தமும் சதையுமாக அது தன் நோக்கத்தைப் பார்வையாளர்களிடம் மிக நேர்த்தியாகக் கடத்துகிறது. அதனால், முற்றிலும் ஒரு புதிய போலீஸ் அனுபவத்தை நமக்குத் தருகிறது.
நாம் பாதிக்கப்பட்ட நிலையில் புகார் கொடுக்கப்போகிறபோது அங்கேயொரு நேர்மையான போலீஸ் இருந்திருந்தால் நமக்கு நீதி கிடைத்திருக்குமல்லவா? – எனும் கேள்வியோடு, தனது அப்பாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் சோக விளைவால் உந்தப்பட்டு ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்கிற லட்சியக் கனவோடு காவலர் பயிற்சிப் பள்ளியில் சேர்கிறார் கதாநாயகன் அறிவழகன் பாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு. அங்கே இளம் பயிற்சியாளர்களும், தேர்வாகியும் பல ஆண்டுகளாகப் பயிற்சி வகுப்பில் சேர இயலாமல் வயது முற்றிப்போன பயிற்சிக் காவலர்களுமாக 350 பேர் இணைந்துகொள்கிறார்கள்.
உயர் அதிகாரி எப்படிக் கேவலமாகத் திட்டினாலும் சகித்துக்கொண்டு, கட்டளைகளுக்கு அடிபணியவும், 350 பேர்களுக்கான கழிப்பிட வசதியை 6- ல் இருந்து 5 ஆகக் குறைத்து, மற்ற கழிப்பறைகளைப் பூட்டிவிட்டு, இப்படியும் பழகிக்கொள்ள வேண்டும் என்பதாகவும், பயிற்சிக் காலத்தில் குறைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பொறுத்துக்கொண்டு குறைகளே இல்லை என்று சொல்லவும் பயிற்சியாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
இதுபோன்றவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார் பயிற்சிக் காவலர்களில் ஒருவரான அறிவழகன். அதேபோல அதிகாரிகளால் அவமானத்துக்கு உள்ளாகும் உடல் பருமனுள்ள பயிற்சிக் காவலர் முருகனுக்கும், வயது மூத்த பயிற்சிக் காவலரான சித்தப்பா பிரகதீசுக்கும் பக்கபலமாக நிற்கிறார். கட்டாய நன்கொடை வசூலிக்கப்பட்டு அது அதிகாரிகளால் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. அதையும் அறிவழகன் கடுமையாக எதிர்க்கிறார். இதனாலெல்லாம் உயர் அதிகாரிகளின் பகையையும், கோபத்தையும் சம்பாதிக்க வேண்டிவருகிறது. இந்தச் சூழலில் அந்த அதிகாரிகளிடமிருந்து தப்பி எப்படித் தனது பயிற்சியினை வெற்றிகரமாக அவர் முடிக்கிறார் என்பதே மீதிக் கதை.
போலீஸ் பயிற்சி என்பது எத்தனை கொடூரமானதாகவும் வன்மங்கள் மலிந்ததாகவும் இருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது நமக்கு திடுக்கிடுகிறது. மக்கள்மீது கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் குணத்தினை காவல்துறையினர் தாங்களே கொடுமைகளை அனுபவித்துப் பெறுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சினிமா நாயகத்தனம் முகம் காட்டாமல் தனது கதாபாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்துக் காட்டியிருக்கிறார் விக்ரம் பிரபு. இவர்தான் ஹீரோ என்று பார்வையாளர்களுக்குத் தெரிந்தபோதிலும் துறுத்தல் இல்லாத நடிப்பால் நாயக பிம்பத்தை உடைத்திருக்கிறார். இருந்தபோதிலும் அந்தக் காதல் பாட்டு என்னதான் அடக்கி அடக்கி வாசிக்கப்பட்டிருந்தாலும் கதையோட்டத்தின் இயல்புக்குத் தேவையில்லாத ஆணியாகவே இருந்து நம்மை முகம் சுளிக்க வைக்கிறது. காதல் பாட்டு என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. இல்லை என்றால் சொல்லாமலேயே விட்டுவிடலாம் படத்தின் நாயகியின் பங்கினை. தானுமொரு உயர் அதிகாரிதான் என்பதை அவ்வப்போது நிரூபிப்பதற்காக பயிற்சிக் காவலர்களை டேய்… வாடா… போடா… என்னடா என்றெல்லாம் படத்தின் கதாநாயகி அஞ்சலி நாயர் பேசி நம்மைக் கிச்சுக் கிச்சு மூட்டுகிறார். நம்மால்தான் ரசிக்க முடியவில்லை.
படத்தில் நாயகனையும் துhக்கிச் சாப்பிட்டுவிடுகிறார்கள் காவல் அதிகாரிகளாக வரும் லால், மதுசூதன ராவ் மற்றும் அந்த சட்டம் தொடர்பான வகுப்பெடுக்கும் அதிகாரி ஆகியோர். பதவி உயர்வைக் கோட்டைவிட்டுவிட்டு குடிப்பதும் புலம்புவதுமான காவலர் பாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். 45 வயதில் சீனியாரிட்டி அடிப்படையில் பயிற்சி வகுப்புக்கு வரும் ‘சித்தப்பா’ பாத்திரத்தில் த.மு.எ.க.ச.வின் புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன் நடிப்பு மனதில் நிற்கிறது. மிக நேர்த்தியான நடிப்பை அவர் வழங்கியிருக்கிறார்.
கருணை அடிப்படையில் பணியில் சேரும் பயிற்சிக் காவலர் முருகன் போன்று உடல்பருமன் போன்ற குறைபாடுடையவர்கள் காவல்துறையின் அலுவலகப் பணிகளுக்குத்தானே அனுப்பப்படுவார்கள்? அதுபோலவே, அந்தக் கவாத்து மைதானம். படம் முழுக்க அதே மைதானத்தில் நிகழுவது கொஞ்சம் சோர்வையும் தருகிறது. படத்தின் பின்னணி இசைக்காக ஜிப்ரானையும், சோர்வை உணரும்போதெல்லாம் காமிரா கோணத்தை மாற்றி மாற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிற மாதேஷ் மாணிக்கத்தையும் பாராட்டலாம்.
“இந்த சிஸ்டம் இருக்கே இது முரட்டுத்தனமான வெள்ளைக்காரனுக்கும் முட்டாள்தனமான அரசியல்வாதிகளுக்கும் பிறந்த குழந்தை. இங்கே நேர்மையை எதிர்பார்ப்பவனுக்குத்தான் கஷ்டமெல்லாம்…” – என்றொரு வசனம் வருகிறது. அதை உள்ளிருந்தே சரிசெய்ய வேண்டும் என்று நாயகனுக்கு உணர்த்தி அவனைக் காக்கிச்சட்டை போடவைக்கிறார் இயக்குநர். காவல்துறையில் மலிந்துகிடக்கும் அடிப்படையான ஒரு அதிகாரவர்க்க மூர்க்கத்தைக் கலையாக்கியிருப்பதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ரசிகர்கள் வரவேற்கவேண்டிய ஒரு சினிமா முயற்சிதான் இந்த டாணாக்காரனும்.
(98425 93924 – [email protected])

Spread the love