September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

*ஜெய்பீம் திரைப்படமும் அதற்கு அப்பாலும்*

“ஜெய்பீம் படம் பார்த்துவிட்டீர்களா?” என்று நேற்று முழுவதும் தோழர்கள் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். உடனடியாக படத்தைப் பார்க்காமல் இருப்பதே ஒரு குற்றம் என்று தோன்றும் அளவிற்கு சமூக வலைத்தளங்களில் தோழர்கள், நண்பர்களின் கருத்துக்களும் – ஊடக விமர்சனங்களும் அமைந்திருந்தன. எனவே நேற்று அந்த திரைப்படத்தை பார்த்து முடித்து விட்டேன். மிகச் சிறந்த திரைப்படம். கச்சிதமான கதையமைப்பு, எடிட்டிங் என்று பல்வேறு வகைகளில் சிறப்புக்குரிய படமாக இருந்தது.

எல்லா கலைஞர்களுமே குறை சொல்ல முடியாத அளவிற்கு தாம் ஏற்றுக் கொண்ட கதாப்பாத்திரமாகவே மாறியிருந்தார்கள். செங்கேணியின் நடிப்பு அதற்கு உச்சமாக அமைந்திருந்தது. அவருடைய உடல் மொழியும், அவருக்கு குரல் கொடுத்தவரின் நேர்த்தியும் பாராட்டுக்குரியவை.

ஜெய் பீம் திரைப்படம் வெளியானதை ஒட்டி நடைபெறும் விவாதங்களில் ராஜாக்கண்ணுவின் காவல்நிலையக் கொலையும், அதில் மார்க்சிஸ்ட் கட்சி செய்த தலையீடுகளையும் சிலர் பாராட்டி பதிவிட்டுள்ளார்கள். வேறு சிலர் திரைப்படத்தை மட்டும் பேசிவிட்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் பங்கேற்பை தவிர்த்துவிட கடும் முயற்சி எடுத்துள்ளார்கள். வேறு சிலர், மார்க்சிஸ்ட் கட்சி, இந்த பிரச்சனையில் மட்டும்தான் போராடியது போல நினைத்து எழுதுவதையும் பார்க்க நேர்ந்தது. இந்த எதிர்வினைகள், பதிவுகள் எல்லாமே திரைப்படம் என்ற ஊடகத்தின் வலுவான தாக்கத்தையே எடுத்துக் காட்டுகின்றன. 

தினமும் இதுபோன்ற ஏராளமான பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சி தலையீடு செய்கிறது, போராடுகிறது. சில தலையீடுகளில் வெற்றி கிடைக்கிறது. வெற்றியோ, பின்னடைவோ – போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு செய்த தலையீடுகளில் ஒன்றான  கம்மாபுரம் ராஜாக்கண்ணுவின் லாக்கப் படுகொலை, இந்தத் திரைப்படத்தில் கருவாக மாறியிருக்கிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பார்வதி, ரத்னவேல் நாடார், குறுக்காட்டூர் சேகர், பூவானி கணேசன் சாத்தான்குளம் அருண்பாரத், தாளமுத்து நகர் வின்சென்ட் உட்பட பல லாக்-அப் படுகொலை வழக்குகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியிருக்கிறது. இதில் உலக்கையைக் கொண்டு அடித்தே கொல்லப்பட்ட வின்செண்ட் கொலை குறித்து கேள்விப்பட்டதும், அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் என்.சங்கரய்யா, நேரில் வந்து போராட்டத்திலும் பங்கெடுத்தார். ஏறத்தாழ இந்த எல்லா வழக்குகளிலும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் என ஏதாவது ஒன்றையேனும் பெற முடிந்துள்ளது.

நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 19 ஆண்டு கால போராட்டம் நடைபெற்றது. கோவை அருகே சின்னாம்பதி என்ற பழங்குடி கிராமத்தில் நடந்த வன்கொடுமைக்கு எதிராகவும் பல ஆண்டுகள் போராட்டம் நடந்தன. இந்த ஒவ்வொரு போராட்டங்களிலும் மோசமான அதிகாரிகளையும், நல்ல அதிகாரிகளையும், நீதியை நிலைநாட்டிய நீதிபதிகளையும், அதற்கு மாறானவர்களையும் எதிர்கொண்டிருக்கிறோம். மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சிகளில் பல்வேறு அமைப்புகள் துணையாகவும் நின்றுள்ளன. 

தொகுத்துப் பார்த்தால் – இந்த பல்வேறு சம்பவங்களில் குற்றவாளிகள், காவல்துறையினர்,  நிர்வாகத்தினர், வழக்கறிஞர்கள், நீதிமன்றம், துணை நின்றவர்கள், வெவ்வேறு நபர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், எல்லா நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று போராடியதாக செங்கொடி இருந்திருக்கும். இப்படி ஏராளமான பிரச்சனைகளில் செங்கொடி முன் நின்றுள்ளது. 

 மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைந்து இந்தப் போராட்டங்களை முன்னெடுக்க வருவோர்… இணையாமல் கூட இணையாக வர விரும்புவோர் அனைவரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாருங்கள் என்று வரவேற்று அழைக்கிறோம்.

-தோழர் கனகராஜ், (சிபிம், தமிழ் மாநில செயற்குழு) எழுதிய கட்டுரையிலிருந்து..

———————————————————————————————————–

# ‘தீபாவலி’

எழுத்துப் பிழை

என்றார் ஆசிரியர்…

 “கருத்து சரி” என்றான்

(ஏழை) மாணவன்.

———————————————————————————————————–

 # அண்ணாத்தே….*

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியின் தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ்…. ரஜினியிடம்,

“அண்ணா நான் தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க” என்பார்.

அதற்கு ரஜினி, “நீ தப்பு பண்ணலேம்மா, நான்தான் தப்பு பண்ணிட்டேன்” என்பார்.

அப்போது தியேட்டரே எழுந்து நின்று, “ஐயோ… நீங்க யாருமே தப்பு பண்ணல, நாங்கதான் தப்பு பண்ணிட்டோம்”னு கதறுவாங்க பாருங்க, அங்க நிக்கறாரு டைரக்டர்!

Spread the love