September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் எப்போது திரும்பும்?

அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ சிதைத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை உடைத்து, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பதவியிறக்கி, அதன் அந்தஸ்தைக் குறைக்கின்ற அறிவிப்பை நரேந்திர மோடி அரசு வெளியிட்டு 3 ஆண்டுகள் முடிந்துவிட்டன.
இந்த நடவடிக்கைகளின் காரணமாக, பிற மாநிலங்களைப் போலவே இந்த யூனியன் பிரதேசங்களும் ஜனநாயகத்தின் பலனைப் பெறும் என பிரதமர் மோடி அப்போது நம்பிக்கை தெரிவித்தார். அந்த உயர்ந்த லட்சியத்தை அடைய, அரசியல் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என 5000-த்துக்கும் மேற்பட்டோரை அவருடைய அரசு கைது செய்து சிறையில் அடைத்ததுதான் இதில் நகைமுரண். அவரது மற்ற பல வாக்குறுதிகளைப் போலவே இந்த வாக்குறுதியும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
மூன்று வருடம் கடந்த பின்னும் களத்தில் பெரிய மாற்றம் ஏதும் வந்த பாடில்லை. அந்த மக்களுக்கு 2019 ஆகஸ்ட் 5 அன்று ஜனநாயகம் எவ்வளவு தூரத்தில் இருந்ததோ அதே தூரத்தில்தான் இன்றும் இருக்கிறது. அன்று கைதான நூற்றுக்கணக்கானோர் இன்னமும் விசாரணையின்றி சிறையில் வாடி வருகின்றனர். புதிதாக பல அதிருப்தியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்படுவது வாடிக்கையாகி இருக்கிறது. ஊடகங்கள் தொடர்ந்து அடக்குமுறையைச் சந்தித்து வருகின்றன. முகமது ஜுபைர் போன்ற ஊடகவியலாளர்கள் அரசின் தணிக்கை நடவடிக்கைகளை துணிச்சலாக எதிர் கொள்கின்றனர். உச்சநீதிமன்றம் அவர் கைது செய்யப்பட்ட விதத்தை கடுமையாக விமர்சித்திருந்தது.
எல்லை நிர்ணயக் குழுவின் பணிகள் முடிந்த போதிலும் சட்டமன்றத் தேர்தல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் பின்னர் துணைநிலை ஆளுநர் ஆட்சியும் கடந்த நான்கு வருடங்களாக அங்கே நீடித்து வருகின்றன.
பிரிவு 370 விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு மோடி அரசு அன்று சொன்ன காரணங்கள்:
பாதுகாப்பு மேம்படும்.. பயங்கரவாதம் ஒழிக்கப்படும்..புதிய அரசியல் சகாப்தம் மலரும்..பொருளாதாரம் இந்தியப் பொருளாதாரத்தோடு ஒன்றிணைக்கப்பட்டு வளர்ச்சியடையும்.. மக்கள் புனர்வாழ்வு பெறுவார்கள்.. மூன்று பத்தாண்டுகளாக அகதிகளாக வாழ்ந்துவரும் காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் சொந்த நிலத்திற்குத் திரும்புவதற்குரிய சூழல் அங்கே ஏற்படும்..
என்றெல்லாம் அளந்து விடப்பட்டது.
ஆனால் நடந்தது என்ன?
பாதுகாப்பு நிச்சயம் மேம்படவில்லை. 2019-21 க்கு இடையில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை மோடி அரசின் முதல் பதவி காலமான 2014-19 விட அதிகம் என உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஐந்து ஆண்டுகளில் பலியானவர் எண்ணிக்கை 177 ஆக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 87 பேர் பலியாகியுள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவும் குறைந்தபாடில்லை. இந்த காலத்தில் 437 காஷ்மீர் இளைஞர்கள் கிளர்ச்சியாளர்களாக மாறியுள்ளனர் என தெற்காசிய பயங்கரவாத இணைய முகப்பு தெரிவிக்கிறது.
பொருளாதார சரிவு
கோவிட் 19 பொது முடக்கத்தின் காரணமாகவும் பாதுகாப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட முடக்கத்தின் காரணமாகவும் 2019-21 காலகட்டத்தில் மேலும் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்தது. இந்தியாவில் மிகவும் சிறந்து விளங்கிய மாநிலங்களில் ஒன்றாக இருந்த மாநிலத்தின் பொருளாதாரக் குறியீடுகள் கடைநிலைக்கு தள்ளப்பட்டன. அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளால் புதிய நம்பிக்கை பிறந்திருக்க முடியும். ஆனால் பழங்கள், உற்பத்தி, தரை விரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் நிலைமை இன்னும் பொருளாதாரத்தில் தோன்றவில்லை.
காஷ்மீர் பண்டிதர்களின் மீதான தாக்குதல்கள்
1990-களில் நடந்ததைப் போலவே பண்டிதர்கள் மீதான தாக்குதல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 2021-ல் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட 10 இந்துக்களும் இன்னுயிர் இழந்துள்ளனர். காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு எதிர்வினையாக ஏற்பட்ட கலவரத்தில் இந்தத் துயரம் நடந்துள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகள் உயிருக்குப் பயந்து மறைந்து வாழக்கூடிய சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. மாநில நிர்வாகம் ஏறக்குறைய அவர்களைக் கைவிட்டு விட்டது. எல்லை நிர்ணய ஆணையக் குழுவின் அறிக்கையும் கவலை தருகிறது. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைத்து அவர்களிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கமாக உள்ளது. பயங்கரவாதிகள் உருவாக்கிட நினைத்ததைத்தான் இன்றைய சூழல் ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உரசல் அதிகரிக்கும் ஆபத்தும் அதிகரித்து வருகிறது.
மோடி நிர்வாகத்தின் எதேச்சதிகார அணுகுமுறை
அன்றைய பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாயும் மன்மோகன்சிங்கும் தங்களால் இயன்ற அளவிற்கு காஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர். முன்னவர் அமைதிக்கான முயற்சியைத் தொடங்கினார். பின்னவர் அதில் தொடர்ந்து சென்று பொருளாதாரத்திற்கு உயிரூட்ட முயன்றார். எல்லை தாண்டிய வர்த்தக உறவுகள் மீண்டும் மலரத் துவங்கின. அமைதி ஓரளவிற்கு திரும்பியது. 5000 பண்டிதர்கள் தங்களின் மறுவாழ்வு இல்லங்களுக்குத் திரும்பினர். ஓரளவிற்குக்கு சுதந்திரமான ஊடகங்கள் பெருகின.
ஆனால் மோடியின் ஆட்சியில் ஜனநாயக அமைப்புகளுக்கு மாறாகவும் பேச்சு சுதந்திரத்தை தட்டிப் பறித்தும் தன்னிச்சையான வழியை பின்பற்றியதால் வாஜ்பாய்-மன்மோகன் சிங் காலத்தில் கிடைத்த ஆதாயங்கள் காணாமல் போயின. இப்போது கூட நிலைமையை சரி செய்து விட முடியும். அதற்கான அரசியல் தெளிவும் கலந்தாலோசிக்கும் தன்மையும் முன்னெடுப்பும்தான் தற்போது தேவை. அதற்கு முதல் படி சட்டமன்றத் தேர்தல்கள்தான்.
எல்லை நிர்ணயக் கமிஷன் ஏற்கனவே வரையறுத்த தொகுதிகளின்படியே தேர்தல் நடத்திவிட்டு, புதிய பரிந்துரைகளை தேர்தலுக்குப் பின் உருவாகும் புதிய சட்டமன்றத்தின் ஆலோசனைக்கு விட்டுவிடலாம். இது ஜனநாயக பூர்வமாகவும் இருக்கும். நம் அரசியல் அமைப்பு முறையின் அடிநாதமாய் திகழும் கூட்டாட்சி பிரதிநிதித்துவத்தின் உணர்வுக்கு உகந்ததாகவும் அமையும்.
மூன்று ஆண்டுகளாக உருப்படியான எந்தவித நடவடிக்கையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுக்கவில்லை. ஆனால் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கப் போவதாக வெற்று வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்புச் சட்டம், 2019-ஐ கொண்டு வந்து திருத்தி விட முடியும். தேர்தல் முறை மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு திரும்புவதற்கு இது பேருதவி புரியும்.
75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும்போது இதைவிடப் பொருத்தமான முடிவு வேறு என்ன இருந்து விட முடியும்?
ஆதாரம் : றுயவைiபே கடிச னுநஅடிஉசயஉல in து&மு.,
சுயனாய முரஅயச in கூhந ழiனேர, 5 ஹரப 2022
தமிழில் : கடலூர் சுகுமாரன்
(94437 [email protected])

Spread the love