September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சோமாருக்கியலா! … சொந்தூரெந்தூருங்!

டாக்டர் ஜி. ராமானுஜம்
மேலே தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்கள் எதோ ஆப்பிரிக்க அல்லது கொரிய மொழிகளின் கெட்ட வார்த்தைகள் அல்ல. செந்தமிழ் மொழிச் சொற்கள்தான். அவை என்னவென்று பிறகு பார்ப்போம்.
செந்தமிழ் நாடென்ற போது இன்பத் தேன் வந்து காதில் பாய்ந்தாலும் வடவேங்கடம் முதல் தென்குமரி வரை நீண்டிருக்கும் தமிழ் நாட்டில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஏற்றவாறு அந்தத் தேனின் நிறம், மணம்,குணம் ஆகியவை மாறும். சில இடங்களில் செந்தேன், சில இடங்களில் கருந்தேன். சில இடங்களில் கொம்புத்தேன். சிலசமயம் சொம்புத்தேன். வட்டார வழக்குகளினால் தமிழின் பேச்சு வழக்கில் ஏற்படும் மாறுதல்கள் எண்ணிலடங்காதவை. பல சமயங்களில் எதிரே பேசுபவர் தமிழிலேயே பேசினாலும் சப்டைட்டில் போட்டால்தான் கேட்பவருக்குப் புரியும் என்னும் அளவுக்குப் போய்விடும்.
மேலே சொன்ன ’சோமாருக்கியலா?’ என்பது திருநெல்வேலிக்காரர் இன்னொருவரைப் பார்த்துச் சுகமாக இருக்கிறீர்களா எனக் கேட்பதன் வட்டார வழக்கு. அதிலும் ’சோமாருக்கியலா சார்வாள்?’ என்றால் சார்வாள் என்பது எதோ போர்வாள் போன்ற ஆயுதம் எனப் புரியாமல் பிற மாவட்டத்தவர் முழிப்பதுண்டு. சார் என்னும் மரியாதைச் சொல்லுக்குக் கூடுதல் மரியாதை ஏற்றி மறியாதையாகச் (ரொம்ப மரியாதை ஆகவே வல்லின ற) சொல்வதுதான் அது.
“சொந்தூரெந்தூருங்?” என்று கோவைக்காரர் ஒருவர் நெல்லைவாசியான என்னிடம் கேட்டார். ’சொந்த ஊர் எந்த ஊருங்க?’ என்பதன் மேற்கு மண்டல வடிவம்தான் அது என்பது விளங்குவதற்குள் கொஞ்சம் தலை சுற்றித்தான் போனது. சொந்தூருங்? என்று அதை இன்னும் சுருக்க்க்குபவர்களும் உண்டு!
நோய் அறிகுறிகளைக் குறிக்கவும் இது போன்ற வட்டார வழக்குகள் அதிகம் உண்டு. நெல்லைப் பக்கத்தில் துரத்துகிறது என்றால் நாயோ , மாடோ துரத்துவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இருமலைத்தான் துரத்தல் என்பார்கள். இதுபற்றித் துரத்தும் நோய் என்று முன்பு ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறேன். அதே போல் திருநெல்வேலியில் வளர்ந்த மருத்துவர் சென்னைக்குச் சென்றால் அங்கு நோயர் ஒருவர் ’ ஊட்டம்மாக்கு ஒரே கேராக்கீது சார். காலவர்ல இட்டாரேன்’ என்றால் மருத்துவருக்கே தலைசுற்றி விடும். மனைவிக்குத் தலைசுற்றுகிறது, கால்மணியில் அழைத்து வருகிறேன் என்பதுதான் அதன் பொழிப்புரை! நாகர்கோவிலுக்குப் பணியாற்ற வந்தார் சென்னைவாழ் மருத்துவர் ஒருவர். அவரிடம் நாரோயில் ( நாகர்கோவில்தான்) நோயர் ஒருவர் ” எனக்க மகன் சரியாட்டு சாப்டவே மாட்றான். நல்ல வண்ணமாய் ஆகக் குளிகை தாங்க சாரே!” என்றார். மருத்துவ சிலபஸ்சிலேயே இல்லாத நோய்களைப் பார்த்தது போல் பயந்து விட்டார் மருத்துவர். வண்ணமாக ஆக வேண்டுமென்றால் கமல்ஹாஸன் போல் கலராக ஆக வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உடம்பு குண்டாக ஆக வேண்டும் என்று குளிகை ( மாத்திரை) கேட்கிறார் அவர்.
இப்படி ஒரே மொழிக்கே ஒவ்வொரு வட்டார வேறுபாடுக்கும் திருக்குறள் போல் ஒரு விளக்க உரை தேவைப்படுகிறது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால்
திருநெல்வேலி பேச்சு: அன்னா ..தெரியுதா?..அங்கன வாரியலால வாசத் தூத்திட்டு நிக்கால்ல அயித்த…பையப் போய்ட்டு அவோ வீட்டுத் தட்டோட்டில இந்தச் சம்படத்தைக் காய வச்சிட்டு வாலே!! என்று இருக்கும்.
இதற்குப் பரிமேலழகர் உரை எழுதினால் அன்னா என்பது அங்கே என்பதன் வழூஉவாகவும் வாரியல் என்பது குப்பைகளை வாரியெடுக்கும் விளக்குமாற்றுக்கு காரிய ஆகுபெயராகவும் அயித்த என்பது அத்தை என்பதன் மரூஉ ஆக விளங்குதலாலும் நிக்கா என்பது நிற்கிறாள் என்பதன் ஈறுகெட்ட எதிர்மறையாக ஆகுதலானும் தட்டோட்டி என்பது தட்டை ஒட்டி என்பதன் ஐகாரக்குறுக்கமாகி மொட்டைமாடியின் குழூ உக்குறியாகவும் வருதலான் சம்படம் என்பது மூடியுள்ள பாத்திரத்தைக் குறிப்பால் உணர்த்தும் வட்டார வழக்காகி வந்து ஈண்டு விளிச்சொல்லான எலே என்பதோடு முடிகிறது என இருக்கும்.
அதுவே கலைஞர் கருணாநிதி உரை தம்பி! நீ சென்று ஆங்கே விளக்குமாற்றால் வீட்டைப் பெருக்கிக்கொண்டிருக்கும் உன் அத்தையின் வீட்டின் மாடிக்கு மெல்லச் சென்று இப்பாத்திரத்தைக் காய வைத்துவிட்டு வருவாயாக! என்று அமையும்.
சாலமன் பாப்பையா உரை: ஏய்! நீ மெதுவாப் போய் அங்க துடைப்பத்தால் வீடு கூட்டிக்கொண்டிருக்கும் அத்தை வீட்டு மொட்டைமாடியில் இந்த பாத்திரத்தை காய வைத்துவிட்டு வா! என்று இருக்கும்.
இந்தக் குழப்பம் எல்லாம் எதற்கு எனப் பேசாமல் மௌனமாகவே இருப்பது சாலச் சிறந்தது. அதுவே அனைவருக்கும் புரியும் மொழி!! நல்லவேளை அதிலும் வட்டார வேறுபாடுகள் இன்னும் வரவில்லை!!
(9443321004 – [email protected]

Spread the love