September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சொல்லாத சொல்

ம. மணிமாறன்
முகம் பார்த்துப் பேச அச்சம் வந்தால் எப்படி எதிர்கொள்ள முடியும் மனிதர்களை.. இத்தனைக்கும் எப்போதும் பேசி சிரித்து மகிழ்ந்திருக்கும் கூட்டத்து மனிதர்கள்தான். காலை பணிக்குப் போகும்போதும், திரும்பி வீடு நோக்கி வரும்போதான பயணத்தின் போது தினமும் சந்திக்கிறவர்களே. பெரும் மகிழ்ச்சியான உரையாடல் களமது.. உள்ளூர் துவங்கி, உலக அரசியல் வரையிலும் தீவிரமாக தர்க்கம் நடக்கும். அருகில் பயணிக்கும் பயணிகள் குறித்த எந்த கவனமோ, பிரக்ஞையோ இன்றி உரையாடலில் அனல் பறக்கும். கடந்த அய்ந்தாறு வருட ரயில் பயணங்களின் நினைவுகளை தொகுத்து எழுதணும் என்று கூட நினைத்து வைத்திருந்தேன். மகிழ்ந்திருந்த இந்த ரயிலில்தான் மனம் தைக்கும் சொற்பிரயோகத்தால் தடுமாறும்படி ஆகிவிட்டது.
இப்படியான சொற்பதங்கள் வெளிப்படுவது மிக சமீபத்தில்தான். அதிலும் குறிப்பாக நோய்த் தொற்று முற்றி பொது முடக்கம் குறித்த பதட்டத்தில் மொத்தச் சமூகமும் தவித்துக் கிடக்கும் பொழுதினில் இப்படிப்பட்ட சொற்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பது துரதிருஷ்டம்தான். அது அவர்களின் வாய்ச் சொல்தானா.. அப்படி அந்த வார்த்தை வெளிப்பட்டபோது கூட மௌனமாக கடந்தது நான்தானா எனும் சந்தேகம்கூட துளிர்க்கத் துவங்கியது.
இம்மாதிரி சொற்கள் வெளிப்பட்ட ஆரம்ப நாட்களில் ஒரு முறை கோபம் தலைக்கேறி “ஏன் சார் இப்பிடிப் பேசுறீங்க? ஒரு நாளைக்கு டீச்சரா இருந்து பாருங்க. அப்பத் தெரியும், நாங்க செஞ்சிக்கிட்டிருக்கிற வேலையோட பலாபலன்.. சும்மா எல்லாரும் பேசுறமாதிரி பொறுப்பான பேங்க் மேலாளர் நீங்களே இப்பிடி பேசலாமா?” என சுள்ளென எரிந்து விழுந்தேன். இப்பிடி சட்டென கோபமாக பதில் கூறும் வழக்கம் உடையவனில்லை நான். அப்படியொரு பதில் வரும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை போல. ஒரு பெரும் அமைதி நிலவியது.
“சார் ரிலாக்ஸா இருங்க. ஏன் பதட்டப்படுறீங்க?”
இப்படி தொடரும் சொற்றொடர் எங்கு வந்து நிற்கணுமோ, கச்சிதமாக அங்கு வந்து நின்றது. “நீங்க கோபப்பட்டாலும் இதுதான சார் உண்மை? உண்மையை எதிர்கொள்ளத் தயங்கக்கூடாதுன்னு நீங்க எத்தனை தடவை சொல்லிருக்கீங்க”
நானும் கூட யோசனையில் நகர்ந்தேன். உரையாடல் திசைமாறும் எனும் தந்திரத்தால் இப்பிடிக் கூறினேனா? அல்லது அவர் கூறியதின் தொடர்ச்சியாக அந்தப் பெட்டியில் பலரும் அதே கருத்துடன் நம்மை நெருக்கி விடுவார்கள் எனும் பயமா? ஏன் இத்தனை கோபமாக நான் பேசினேன்?எதையும் நிதானமாக எதிர்கொள்ளும் என்னைத் தீண்டிய சொல் எது?
தடுமாறி வண்டியில் ஏறி இடம் தேடிய எனக்கு இடம் தந்து “சார்.. உட்காருங்க. அப்புறம் லாக்டவுன் போடப்போறாங்க போல..உங்க பாடு ஜாலிதான். வீட்டிலேயே இருந்துக்கிட்டு ஆன் லைன் கிளாஸ், ஆஃப் லைன் கிளாஸ்னு பொழுதக் கழிக்கலாம்”
இப்பிடி கிண்டலும், கேலியுமாகத் துவங்கிய உரையாடல் இந்தப் புள்ளியில் வந்து வெடிப்புறும் என நான் நினைக்கவில்லை.. நானும் மிக ஜாலியாகத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் மூர்க்கமாக ஆசிரிய சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் முடிவோடு பேச்சு நகர்ந்ததைப் பார்த்து ஒருவேளை என்னைப் பதட்டம் தொற்றியிருக்கலாம்.
இந்த உரையாடலில் பலரும் கருத்துச் சொல்லத் துவங்கினார்கள். நானும் ஆன்லைன் கிளாஸில் இருக்கும் சிரமங்கள் , கற்றலில் இருக்கும் போதாமைகள், அரசுப் பள்ளி மாணவர்களது குடும்பச் சூழல், பொருளாதார பின்புலம் என யாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தேன். எல்லோர் முகத்திலும் ஒருவிதமான அசட்டையும், ஏளனமும் இருப்பதாக என் உள் மனம் படுத்தி எடுத்தது. அந்த கடைசிச் சொல்லை அவர்கள் சொல்லியிருக்க வேண்டாம். ஆனாலும் சொன்னார்.. “சார் பள்ளிக்கூடம், நடந்தாலும் நடக்காட்டாலும், லாக்டவுன் போட்டாலும், போடாட்டாலும் ஒண்ணாந்தேதியானா டான்னு சம்பளம் அக்கவுண்ட்ல விழுந்திரும்ல? முன்னூறு நாள் நீங்க வேலைக்கே போகல. ஆனா சம்பளம் என்ன நிக்கவா செஞ்சுச்சு? பைசா குறையாம, வந்துக்கிட்டுதான இருந்துச்சு”?
இப்பிடியான உரையாடலை துவக்கி வைத்த மற்றொரு மாதச் சம்பளக்காரர் நடக்கும் இந்த நாடகத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததைப் போல செல்ஃபோனை விசாரித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது சிரிக்கவும் செய்தார். வீடியோ பார்த்து சிரிக்கிறாரா அல்லது என்னைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்து கொண்டு மாட்டிக்கிட்டீங்களான்னு மனதிற்குள் சிரிக்கிறாரா.. தெரியவில்லை.
அந்த ரயில் பெட்டியே கொந்தளித்தது. இப்ப வகை தொகையில்லாம ஆளாளுக்குப் பேசினார்கள். ஆமாம் சார். பொறந்தா வாத்தியாரா பொறக்கணும். வருசத்தில பாதி நாள் லீவு. கை கொள்ளாத அளவு சம்பளம். வீடு, வாசல், காருன்னு ராஜ வாழ்க்கை வாழுறாங்க. அந்தக் காலத்தில டீச்சர்னா எப்படி இருந்தாங்க? இப்ப பாருங்க..நித்தம் ஒரு நியூசென்ஸ் கேசுல சிக்கிக்கறாங்க. துட்டு கொழுத்தா இப்பிடித்தானே அலையச் சொல்லும்?
இப்பிடி எழுதவே முடியாத எல்லைகளையெல்லாம் கடந்து ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.. நல்ல வேளை நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. முட்டிக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நகர்ந்தேன்..
இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. எங்கிருக்கிறது சிக்கல்.. மொத்த சமூகத்தையும் ஆசிரியர்களுக்கு எதிரான புள்ளியில் நிறுத்தி வைத்திருக்கும் இந்த வன்மத்தின் சூட்சுமம் எது? மிகப் பெரிய விவாதத்தை நமக்குள் நடத்த வேண்டியிருப்பதையே இந்த ரயில் பெட்டி களேபரம் எனக்குள் உருவாக்கியிருக்கிறது. நம்முடைய ஒர்க் கல்ச்சர். பொதுவெளியில் நம்முடைய நடை உடை பாவனைகள். இன்னும் ஒவ்வொரு புள்ளியிலும் நம்மை தற்காலப் படுத்திக் கொள்ளுதலின் அவசியம்..இப்பிடி எல்லா வகையிலும் மாற்றம் நிச்சயம் தேவைப்படவே செய்கிறது. அவர்களுடைய குற்றச் சாட்டிலும் கேலிப் பேச்சிலும் இதுநாள் வரையிலும் இருந்து வருகிற யாவிற்கும் அவர்களை மட்டும் பொறுப்பாளியாக்க முடியாது. திட்டமிட்டு பரப்பப்படுகிற இது மாதிரியான குற்றச்சாட்டுகளை முற்றாக புறந்தள்ளவும் கூடாது. இது குறித்தெல்லாம் நமக்குள் பேசியாக வேண்டிய அவசரம் இருக்கிறது.. பேசிப் பார்ப்போம்.. விவாதிப்பதற்கான புள்ளிகளை எவரேனும் இட்டு வையுங்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் .. ம. மணிமாறன்.
(9443620183 – [email protected])

Spread the love