September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

செல்ஃபோனால் செத்தவை

டாக்டர் ஜி. ராமானுஜம்
ஒரு நாள் காபி குடித்துவிட்டுக் காசு கொடுக்கலாம் எனப் பார்க்கிறேன். பர்சைக் காணவில்லை. வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அது நான் வழக்கமாக காப்பி குடிக்கும் கடை அல்ல. மாவாட்டச் சொல்வார்களா எனத் தெரியாமல் நின்று கொண்டிருந்தபோது ஆபத்பாந்தவனாக ஓர் இளைஞர் வந்தார். ரெண்டு ஹால்ஸ் வாங்கிவிட்டு செல்ஃபோனை வைத்துக் கொண்டு அங்கிருந்த ஜி.பேக்கான குறியீட்டைப் (ணுசு உடினந) படம் பிடித்தார். பணம் கொடுத்துவிட்டுச் சென்றார். பிறகுதான் எனக்குப் புரிந்தது. ஒரு டீத்தூள் விளம்பரத்தில் இந்த டீத்தூளில் இஞ்சி, ஏலக்காய், துளசி , கிராம்பு, பட்டை,சோம்பு என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கின்றன என்பார் ஒரு பெண்மணி. அது போல் பர்ஸ் உட்பட கடிகாரம், காலெண்டர், காமெரா என எல்லாமே செல்ஃபோனிலேயே ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றனவே எனப் புரிந்தது.
மதனின் கார்ட்டூன் ஒன்று உண்டு. பல வருடங்களுக்கு முன்னால் வந்த ஜோக் அது. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுமார் முப்பது நாற்பது பேர்கள் கூடி இருப்பார்கள். அவர்கள் முன் அவர்களது நிறுவனத்தின் தலைவர் நின்று கொண்டிருப்பார். “இன்னிலேர்ந்து நீங்க எல்லாரும் செய்யும் எல்லா வேலையையும் இந்த மெஷினே செஞ்சிடும். சாரி! உங்களுக்கெல்லாம் இனி வேலை இல்லை!” என்பார். அருகில் ஒரு குட்டியூண்டு ரோபோ நின்று கொண்டிருக்கும். அது மாதிரித்தான் மொபைல் ஃபோன் வந்த பிறகு பல சமாச்சாரங்கள் காணாமல் போய்விட்டன.
பொறுமை, அமைதி, நிம்மதி இதெல்லாம் என்று சொல்கிறீர்களா? அது சீரியஸ் கட்டுரைக்கான சப்ஜெக்ட். காமெடியாகச் சொல்ல வேண்டுமானால் செல்ஃபோன் வந்த பிறகு அருங்காட்சியகத்தில் மட்டுமே பல பொருட்களை இனி பார்க்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.
முதலில் அஞ்சலி செலுத்த வேண்டிய விஷயம் கடிதங்களுக்கு. “காதலித்துப்பார்! தபால்காரர் தெய்வமாகத் தோன்றுவார் ” என்பது வைரமுத்துவின் வரிகள். இன்றைய காலத்தில் எழுதியிருந்தால் காதலித்துப் பார்! ஈ மெயில் தெய்வமாகத் தோன்றும்!' என எழுதியிருப்பார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு எனக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்த தகவலை டைப்ரைட்டரில் டைப் அடித்த ஒரு லெட்டரை பீடி குடித்தபடியே ஒரு தபால்காரர் கொண்டுவந்து கொடுத்தார். இப்பொழுது ஈ மெயிலில் அடுத்த வினாடி தொடர்பு கொள்ள முடிகிறது. கடிதங்களின் நீட்சியாக அழைப்பிதழ்களையும் சொல்லலாம். பெரிய நிகழ்வுகள் தவிர்த்துப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள் வாட்ஸ் அப்பிலேதான் அனுப்பப்படுகின்றன. அதேபோலத்தான் வாழ்த்து அட்டைகளும்.பொங்குக பொங்கல், தங்குக செல்வம்’ என்பது போன்ற மொக்கையான வரிகளுடன் கரும்பு, பொங்கல் பானை படங்களுடனும் நடிகர் நடிகையர் படங்களுடனும் வாழ்த்து அட்டைகள் அன்று விற்கப்பட்டன என்றால் இன்றைய தலைமுறையினர் நம்ப மறுப்பார்கள். எல்லாப் பண்டிகைகளுக்கும் வாட்ஸப் வாழ்த்துதான். அதில் பல ஃபார்வேர்டர்ட் செய்திகள்தான்.
அடுத்த ஆப்பு கடிகாரத்துக்குத்தான். இப்போதெல்லாம் மணி என்ன என யாராவது கேட்டால் உங்கள் கை மணிக்கட்டைப் பார்த்தீர்கள் என்றால், உங்கள் வயது நாற்பதுக்கு மேல் என அர்த்தம். காரணம் இன்று எல்லாமே செல்ஃபோனில் அடக்கம். அடக்கமாகியிருக்கிறது என்றால் நிஜமாகவே இறந்தபின் அடக்கம் செய்வார்களே அந்த பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். சுவர்க்கடிகாரம், கைக்கடிகாரம், அலாரம் க்ளாக் எனப் பல்வேறு விதங்களில் நம்மிடையே உலவிவந்த கடிகாரங்களுக்கு நேரம் சரியில்லாமல் போனதால், எல்லாவற்றுக்கும் பதில் இன்று கையிலேயே ஒரு ஃபோனை எடுத்துச் செல்கிறோம்.
டி.வி வந்த பிறகு நாடகங்கள் அழிந்து போனதுபோல் மொபைல் ஃபோன்கள் வந்தபிறகு டி.வி பார்க்கும் பழக்கமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. செய்தித்தாள்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அது போன்றே புத்தகங்களும். ஒரு திரைப்படத்தில் விவேக் ஒரு பெட்டிக்கடையில் ஒரு வார இதழை வாங்குவார். அதற்கு இலவசமாக காப்பிப் பொடி, சோப்பு, ஷாம்பூ.. என ஒரு பலசரக்குக் கடையையே இலவசமாகக் கொடுப்பார்கள். அதற்கு விவேக் “உங்களைப் படிக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது..” என்பார்.
சும்மாவே நம் மக்களைப் புத்தகங்கள் வாங்க வைக்க பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும். மொபைல் ஃபோன் வந்தபிறகு அச்சுப் புத்தகங்கள் வாசிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. அப்படியே புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்றாலும் ஆடியோ புக்காகக் கேட்கிறார்கள். ஒரு சிறுவனிடம் ஒரு புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அது எத்தனை பக்கம் எனக் கேட்டேன். `சின்ன புத்தகம்தான். நாலு மணி நேரம்!’ என்றான். பக்கங்களால் புத்தகங்களை அளவிடுவது போய் எத்தனை மணி நேரம் என்று ஆடியோ அல்லது வீடியோவால் அளவிடுகின்றனர். அரைஞாண்கொடி முதற்கொண்டு அடகு வைத்து ஆயிரம் பக்க புத்தகத்தை எழுதி வெளியிட்டால், அசால்டாக புத்தகத்தின் பி.டி.எஃப். கிடைக்குமா எனக் கேட்கின்றனர்.
ரூபாய் நோட்டில் தொடங்கி காலெண்டர், டைரி எனப் பல்வேறு சமாச்சாரங்கள் செல்ஃபோனால் காணாமல் போய் அஞ்சலி செலுத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றிருக்கின்றன. என்னது? அவைகளுக்கு மலர்வளையம் வைக்க வேண்டுமா? மலர்வளையம் எல்லாம் இப்போது கிடையாது. செல்ஃபோன் வந்த பிறகு அழுவது போன்ற ஒரு எமோஜியும் RIP தான்.
(9443321004 – [email protected] )

Spread the love