September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

செப்டம்பர் 5 : கௌரி லங்கேஷ் நினைவு நாள்

கௌரி லங்கேஷ் 1962-ம் ஆண்டில் பிறந்தவர். இவர் ஓர் இந்தியப் பத்திரிகையாளர். மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் கூட.
லங்கேஷ் பத்ரிகே’ என்ற கன்னட இதழின் முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்தார் கௌரி லங்கேஷ். ராணா அய்யூப் எழுதியகுஜராத் ஃபைல்ஸ்’ என்ற நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். ஏழை விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். அம்பேத்கர், பசவன்னா ஆகியோர் சென்ற நெறிகளில் தாமும் செயல்பட முயற்சி செய்தார்.
மதம், சாதி, இந்துத்துவா கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக எழுதி வந்ததால் பல எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தார். 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று பசவன்குடியில் உள்ள லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் சுடப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கௌரி லங்கேஷின் மார்பு, கழுத்து, வயிறு பகுதியில் குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கூலிப் படையை இயக்கியது இந்துத்துவா பரிவாரத்தின் ஒரு மதவெறிக் கும்பலே.
எம்.எம்.கல்புர்கி, நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலைகளுடன் கௌரி லங்கேஷின் கொலை தொடர்புடையது என்று சிறப்பு விசாரணைக் குழு கூறியது. இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 10 ஆயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது. கொலையாளிகளுக்குத் தண்டனை எப்போது?
பெரணமல்லூர் சேகரன் (9442145256)

Spread the love