June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு.. கேரள அரசின் புதிய சட்டம்..

பேரா. வ. பொன்னுராஜ்
“நிரந்தரமற்ற வேலை நியாயமற்ற ஊதியம்” என்பது புதிய தாராளமயக் கொள்கையின் தாரக மந்திரம். சுயநிதி கல்வி நிறுவனங்கள் இக்கொள்கையை அட்சரம் பிறழாமல் நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழக சுயநிதி கல்லூரிகளில், குறிப்பாக கலை அறிவியல் கல்லூரிகளில், பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கொத்தடிமை நிலை யாவரும் அறிந்த ரகசியம்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் கல்லூரி ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் இடதுசாரி சிந்தனை கொண்டோரும் பல ஆண்டுகளாக இப்பிரச்சனையை பல தளங்களில் எழுப்பி வந்தாலும் மெத்தப் படித்த அந்த அடிமைகளின் விலங்குகள் இன்னும் உடைக்கப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் கேரள அரசு அம்மாநில சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்கும் புதியதொரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அச்சட்டம்…
அரசு பல்கலைக்கழங்களில் இணைவு பெற்றுள்ள சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் நியமனங்களை முறைப்படுத்துகிறது.
கல்வி நிறுவனம் காலிப்பணியிடங்களை விளம்பரப்படுத்தி, யு.ஜி.சி./அரசு பரிந்துரைத்துள்ள கல்வித் தகுதி கொண்ட மனுக்கள் பெற்று, மனுக்களைத் தரப்படுத்தி, அதனடிப்படையில் எழுத்துப்பூர்வ நியமன ஆணை வழங்கி நியமனம் செய்ய வேண்டும்

  • என்கிறது.
    அவ்வாறு நியமிக்கப்படும் பணியாளர்கள், ஊதிய விகிதம் மற்றும் படிகள், ஆண்டு ஊதிய உயர்வு, ஆகியவை குறித்து கல்வி நிறுவனங்களோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
    நியமனமான மூன்று மாத காலத்திற்குள் ஆசிரியர்களின் முழு விவரங்களையும் கல்வி நிறுவனம் அதன் இணைவு பெற்றுள்ள பல்கலைக் கழகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
    அரசு உதவி பெறும் கல்லூரி பணியாளர்களுக்குப் பொருந்தும் பணிநேரம், பணி நாட்கள், பொது விடுமுறை, தற்செயல் விடுப்பு, மற்றும் பேறுகால விடுப்பு ஆகியவை சுயநிதி பணியாளர்களுக்கும் பொருந்தும்.
    ஓய்வு பெறும் வயது, அரசு வரையறுக்கும் வயதாக இருக்கும்.
    இச்சட்டத்திற்கான விதிகளுக்கு இணங்க பணியாளர்கள் மீது கல்வி நிறுவனம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
    கல்வி நிறுவனம் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பணியாளர் பல்கலைக்கழகத்திடம் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டின் மீது பல்கலைக்கழகம் எடுக்கும் முடிவே இறுதியானது.
    இதன் மூலம், இனி கல்வி நிறுவனங்கள் தங்களின் hசைந யனே கசைந நடைமுறைக்கு விடை கொடுக்க வேண்டிய நாள் கனிந்து விட்டது எனலாம்.
    சிறுபான்மை கல்லூரிகளுக்கு இவ்விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்பது இச்சட்டத்தின் கூடுதல் சிறப்பு.
    அதே சமயம், ஆசிரிய, அலுவலர்களுக்குத் தரப்பட வேண்டிய கவுரமான குறைந்தபட்ச ஊதியம் பற்றியும் சட்டத்தில் ஏன் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தெரியவில்லை. இச்சட்டத்திற்கான விதிகள் வெளியானபின் அவற்றையும் படித்தபிறகு பரிசீலிப்போம்.
    எந்த சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பதை நடைமுறைப்படுத்திய இன்றைய தமிழக அரசு, கேரள அரசைப் பின்பற்றி தமிழக சுயநிதி கல்லூரி பணியாளர்களுக்கு விரைவில் பணிப்பாதுகாப்பிற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். அதோடு நின்றுவிடாது, கோரிக்கை நிறைவேறத் தேவையான இயக்கங்களை வலுவாகக் கட்டுவோம்.
    ([email protected] – 9443446694)
Spread the love