September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சீனாதான் காரணமா…?

சி.அ.முருகன், திருவண்ணாமலை.
1) மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் செயல்பாடுகள் நியாயமானதா?
மம்தா பானர்ஜி ஒரு சண்டைக்கோழி. ரவுடி ராஜ்ஜியம் நடத்துவதில் கைதேர்ந்தவர். இடதுசாரித் தொண்டர்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்தவர்.. குவித்துவருபவர். பாஜக மேற்கு வங்கத்தில் நுழைய களம் அமைத்துக் கொடுத்தவர் அவர்தான். அதன் பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் இருந்தாலும் இன்று அவர் பாஜக அரசுக்கெதிராக நடத்தி வரும் போராட்டத்திற்கு நாம் ஆதரவு கொடுத்தே ஆக வேண்டியிருக்கிறது. பாஜகவுக்கு எதிராகத் திரண்டிருக்கும் எதிர்க் கட்சிகளுக்கு அவர் தரும் ஆதரவு குறிப்பிடத்தகுந்தது. வன்முறை அரசியலை அவர் கைவிட்டால் (?) அது வரவேற்கத் தகுந்த மாற்றமாக இருக்கும்.
2) கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறதே, அது எந்த அளவுக்கு உண்மை?
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளுக்கு சீனா எப்போதுமே எதிரிதான், அவர்கள் இப்படி ஒரு செய்தியைப் பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். ‘ஆரிஜின் அன்க்ளியர்’ என்ற தலைப்பில் ஜூன் 14 ஆங்கில இந்து தலையங்கத்தில் “கோவிட் வைரஸ்-2 எப்படி உருவாயிற்று என்பதை விஞ்ஞானிகளால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை..மற்ற கிருமிகளைப் போல இந்தக் கிருமியும் இயற்கையிலேயே உருவாகி வெளவால்கள் மூலமோ அல்லது வேறு ஏதோ ஒரு ஹோஸ்ட் மூலமோ பரவியிருக்கக்கூடும் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது” என்று எழுதியிருக்கிறது. தற்போதைக்கு இதை ஏற்கலாம் என்று நினைக்கிறேன்.
3)முப்பது நாட்களில் மாநில அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா?
நிச்சயமாக. தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு முதலமைச்சர் இருப்பதாகவே தெரிகிறது. கொரோனாவை எப்படி சமாளிப்பது என்பதிலேயே அவரது கவனம் தற்போது குவிந்திருக்கிறது. இந்த மூச்சுத்திணறல் நின்ற பிறகே மற்ற பிரச்சினைகளை அவர் கவனிக்க முடியும். சில மாதங்கள் கழித்துப் பேசுவோம்.
ஹரிணி, மேற்கு தாம்பரம்
அண்மையில் காதில் விழுந்த ஒரு நன்மொழி,,
“கார் வைத்திருந்தால் ஆடம்பரமாக வாழலாம்.. அதுவே ஒரு சைக்கிள் வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்” என்பது ஒன்று.
கொரோனா காலத்தை ஒட்டி எழுந்த ஒன்று : “எல்லோரும் பாதுகாப்பாக இல்லையெனில் ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை!”
எஸ்.விஸ்வநாதன், மதுரை-10
நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகள்தான் இருந்ததா? மிகக் குறைவாகத் தெரிகிறதே..
நமக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நான் கூட 2018 -ம் ஆண்டில் எழுதிய அறிவியல் கதிர் கட்டுரையில் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். உத்தரமேரூர் கல்வெட்டில் உள்ள தகவல் வேறு என்று ஒரு நண்பர் கூறியதைக் கேட்ட பிறகு, நான் இணையதளத்தில் தேடினேன். 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கே குடவோலை முறையில் தேர்தல் நடந்திருக்கிறது. 12-ம் நூற்றாண்டில் அந்த முறையில் வாக்களிக்க குறைந்தபட்ச வயது 35 என்றும் அதிகபட்ச வயது 70 என்றும் இருக்கிறது. அப்படியானால் அந்தக் கால மனிதர்கள் 70 வயது வரை வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதானே பொருள்? அக்காலத்தில் முதுமக்கள் தாழி இருந்தது என்றும் நம் வரலாறு கூறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி வந்த பிறகே இந்தியர்களின் ஆயுள் கூடியது என்பது அவர்கள் எழுதிவைத்த சரித்திரம் என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
——————————————————————–
புதிய ஆசிரியன் நடத்தும் 9-வது கருத்தரங்கு
புதிய ஆசிரியன் நடத்தும் 9-வது இணையவழிக் கருத்தரங்கில் தோழர்கள் சேவியர் அமல்ராஜ் (மூட்டா).. ஆர்.ஜெயராமன், ஆசிரியர், புதுச்சேரி.. மூ. மணிமேகலை, மாநிலத்தலைவர், கூசூஞகூகு.. எஸ்.வி.வேணுகோபாலன், எழுத்தாளர் ஆகிய நான்கு பேர் ஜுலை 15 வியாழன் அன்று மாலை 6 மணிக்கு “புதிய ஆசிரியன் வாசிப்பு அனுபவம்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்,
ஆசிரியர் குழு

Spread the love