September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சில ஆளுமைகள்


முனைவர் ச.சீ. இராஜகோபாலன்


புதிய ஆசிரியனில் கல்வி தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்துள்ளேன். இந்த இதழில் நான் அண்மையில் படித்த சில நூல்கள் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன். சென்ற மாதம் மூன்று தமிழ் நூல்களும், மூன்று ஆங்கில நூல்களும் வாங்கிப் படித்தேன். அதில் ஒன்று தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய பழைய கட்டுரைகளின் தொகுப்பாக வந்திருக்கும் நூல்.


என்னை மிகக் கவர்ந்த நூல் இந்திய பெண் மருத்துவர்கள் பற்றியது. இந்நூலில் விவரிக்கப்படும் ஆறு பெண் மருத்துவர்கள் ஒவ்வொருவரும் பல தடைகளையும் மீறி மருத்துவப் படிப்பையும், மருத்துவப் பணியையும் மேற்கொண்டு முத்திரை பதித்தவர்கள். அனைவரும் 19-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள். பெண்கல்வியை சமூகம் ஏற்காத காலத்தில், கற்க வேண்டும் என்ற உந்துதலால் கற்று உயர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் முத்துலட்சுமி அவர்கள். இசை வேளாளர் சமூகத்தில் பிறந்தவர்.

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொணர்ந்து நிறைவேற்றினார். அனாதைக் குழந்தைகளுக்கென அவ்வை இல்லத்தை உருவாக்கியவரும் இவரே.


இன்னொரு பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி ஆவார். மராத்திய மாநிலத்தைச் சார்ந்த அவர் குழந்தைத் திருமணத்திற்கு உட்பட்டு 13 வயதிலேயே குழந்தையும் பெற்று மூன்று மாதங்களில் அக்குழந்தையையும் இழக்கின்றார். அவரது கணவர் பெண்கல்வியில் ஈடுபாடு கொண்டவர். கொல்கத்தாவிற்குத் தன் மனைவியைக் கல்வி கற்க அழைத்துச் செல்கிறார். ஆனந்தி பள்ளி செல்லும் பொழுது இளசுகளின் சீண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகின்றார். சில சமயம் அவர் மீது கற்களும் வீசப்பட்டன. எதையும் பொருட்படுத்தாது கற்கின்றார்.

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்று அறிந்ததும் அவரது கணவர் அமெரிக்காவிற்கு அனுப்புகின்றார். அமெரிக்காவில் மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் இவர். நூல் குறிப்பிடும் ஆறு பேரும் நமது பள்ளிப் பாடநூல்களில் இடம் பெறத்தக்க சாதனையாளர்கள். நூல் வெளியீட்டாளர் வெஸ்ட்லேண்ட்- வெளியிட்ட ஆண்டு 2021- விலை ரூ. 499-00)

மற்றொரு நூல் வில்லியம் டால்ரிம்பிள் எழுதியுள்ள ஒன்பது இந்தியர்களது வாழ்க்கை. சாதாரணப்பட்டவர்களது அன்றாட வாழ்க்கையைச் சுவைபட எடுத்துக் கூறியுள்ளார்.. மூன்றாவது நூல் நோபல் அறிஞர் அமர்த்யா சென்னுடைய தன் வரலாறு. அவர் பிறந்த ஊர் சாந்திநிகேதன், படித்தது சாந்திநிகேதனில் என்பது என்னைக் கவர்ந்தது.


அடுத்து, தமிழகக் கல்வி வரலாற்றில் முத்திரை படைத்த இருவர் பற்றிக் குறிப்பிட வேண்டும். உயர்கல்வியில் டாக்டர் ஏ.எல்.முதலியாரும், பள்ளிக் கல்வியில் நெ.து சுந்தரவடிவேலு அவர்களும் முத்திரை பதித்த கல்வியாளர்கள். ஏ.எல்.முதலியார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலம் பணியாற்றினார். விடுதலைக்குப் பின் புதிய கல்லூரிகள் பலவும் உருவாக ஊக்கமளித்தார்.

ஆட்சியாளர்களுக்கு வளைந்து போகாதவர். யுனெஸ்கோவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் அமைக்கப்பட்ட அகில இந்திய இடைநிலைக் கல்விக் குழுவின் பரிந்துரைகள் பள்ளிக் கல்வியில் சீரிய மாற்றங்களைக் கொணர்ந்தது. மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான அவரது சட்ட மன்ற உரைகள் காலத்தை வென்றவை. அவருக்கும் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியத்திற்கும் இடையே நடைபெற்ற விவாதங்கள் சூடும் பொருளும் மிக்கவை. தமிழ்வழிக் கல்விக்கு அவர் முட்டுக்கட்டை என்று கல்வி அமைச்சர் குறை கூறியதும் சட்டமன்றம் இயற்றிய பல்கலைக்கழகச் சட்டமும், விதிகளும் பயிற்று மொழி பற்றி ஏதும் குறிப்பிடாதபோது துணைவேந்தர் தடைக்கல்லாக இருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு பொருளற்றது என்று மேலவையில் சுட்டிக் காட்டினார்.

ஹீப்ரூவிலோ, டிம்பக்டோ மொழியிலோ விடையளித்தாலும் விடைத்தாள் திருத்தப்படுமென்று என்று நகைச்சுவையுடன் அவர் கூறியது பல ஆண்டு காலம் மேற்கோள் காட்டப்பட்டது. ஆங்கிலம் தவிர்த்த வேறு எந்த மொழியையும் பயிற்றுமொழியாக்க எந்தக் கல்லூரியும் விண்ணப்பிக்கவில்லை என்று கூறி வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மாணவர் எம்மொழியிலும் விடையளிக்கலாமென்ற நிலையை விவரித்துக் கூறி குற்றச்சாட்டுகளை மறுதளித்தார்.


பொதுக் கல்வி இயக்குநர் அனைத்து நிலைக் கல்விக்கும் பொறுப்பானவர். அப்பதவியைப் பலர் வகித்த போதிலும் இருவர் மட்டும் தனி முத்திரை பதித்தனர். ஒருவர் ஆர்.எம்.ஸ்டேதம் என்ற ஆங்கிலேயர். மிக நீண்ட காலம் அப்பதவியில் இருந்தவர். இன்றைய பல கல்விச் செயல்பாடுகளுக்கும் வித்திட்டவர். எம்.ஈ.ஆர். எனப்படும் கல்வி விதிகளை உருவாக்கியவர். பல்கலைக்கழகத்தின் பொறுப்பினின்று கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை விடுவித்தவர். இடைநிலைக்கல்வி வாரியம் அமைந்திட காரணமானவர். ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் பயணங்கள் மேற்கொண்டு கல்வி நிறுவனங்கள் நன்முறையில்

இயங்குவதை உறுதி செய்தவர். விளையாட்டில் பேரார்வம் மிக்கவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளிடை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வித்திட்டவர். தனக்கு முன் இயக்குநராகப் பணியாற்றிய விளையாட்டு ஆர்வலர் கிரிக் பெயரில் பதக்கங்கள் வழங்க வகை செய்தவர். விடுதலைக்குப் பின்னரும் சில காலம் பணியாற்றிய மிகச் சில ஆங்கிலேயர்களில் ஒருவர்.


மிக நீண்ட காலம் பொதுக் கல்வி இயக்குநராக இருந்த பெருமை பத்மஸ்ரீ நெ.து. சுந்தரவடிவேலுவைச் சாரும். பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். பணியில் அவரை விட 12 பேர் அதிக மூப்பு கொண்டிருந்தும் அவர் இயக்குநராக நியமிக்கப்பட முதலமைச்சர் காமராஜருக்கு பெரியார் பரிந்துரை செய்தார். ‘மக்கள் சார்பு இயக்குநர்’ என்று பெயரெடுத்தார். காமராஜரின் ‘அனைவர்க்கும் கல்வி’ திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினார். பட்டி தொட்டியெல்லாம் பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கக் காரணமாயிருந்தார். மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் காமராஜருக்குத் துணை நின்றார். பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி ஊர்மக்களின் உதவியோடு பள்ளிகளுக்கு வேண்டிய கட்டிடங்கள், நூலகங்கள், அறிவியற்கூடங்கள் உருவாகும் பள்ளிச் சீரமைப்புத் திட்டத்தை அருமையாகச் செயல்படுத்தினார். ஊழலற்ற நிர்வாகத்தைச் செயல்படுத்திய பெருமைக்குரியவர். அவரே பொதுக் கல்வித் துறையின் கடைசி இயக்குநர்.


(044-23620551 – [email protected])

Spread the love