August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சிலேட்டுக்குச்சி (கட்டுரைத் தொகுப்பு)..

ஆசிரியர் : சக.முத்துக்கண்ணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் விலை:ரூ.110/-


சக.முத்துக்கண்ணனின் கட்டுரைத் தொகுப்பு படித்து முடித்ததும் பிரமிப்பில் ஆழ்ந்தேன். படித்தது கட்டுரைகளா.. கதைகளா என்பதறியாமல் திகைத்து நின்றேன். ஆங்கில எழுத்தாளர் சார்ல்ஸ் லாம் எழுதிய ‘எலியா கட்டுரைகள்’ ஞாபகத்திற்கு வந்தன. ஆம்; லாம் கட்டுரைகள் நிஜம் எது; புனைவு எது என்று பிரித்து அறிய முடியாது வாசகர்களைத் திணறச்செய்யும். லாம் கட்டுரைகளை “ஹn யனசடிவை அiஒவரசந டிக கயஉவள யனே கiஉவiடிn” என்று திறனாய்வாளர்கள் புகழ்வார்கள். அப்படியான ஒரு கலவையாகவே முத்துக்கண்ணனின் கட்டுரைகள் மிளிர்கின்றன. அடுத்த ஆச்சரியம் கட்டுரைகளை எழுதுவது ஆசிரியரா, மாணவரா என்றறியாமல் தவிக்கிறோம். முத்துக்கண்ணன் காட்சிப்படுத்தும் பன்னீர் சார், முருகன் சார், அற்புதம்மேரி டீச்சர் எல்லாம் நம்முடைய பள்ளி நாட்களில் பார்த்துப் பழகிய ஆசிரியர்களை நினைவூட்டுகிறார்கள். நல்லாசிரியர்களின் நினைவுகள் என்றென்றும் அழிவதில்லைதானே!
ஆசிரியர்-மாணவர் உறவின் உன்னதங்களை எழுதிச் சென்றுள்ள பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி மாணவர்கள் மத்தியில் பேசி வாசிப்பில் ஆர்வத்தை ஊட்டும் ஆசிரியர்கள் இருப்பது மன நிறைவைத் தருகிறது. தமிழகத்தில் பெருகிவரும் ஆண்களின் குடிப்பழக்கம் இந்தளவுக்கு பிஞ்சு உள்ளங்களில் ஏக்கத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பது நெஞ்சைப் பிளக்கும் செய்தியாக இருக்கிறது. அரியலூர் பேருந்து நிலையத்தில் சமோசா விற்கும் குழந்தைமையைத் தொலைத்த மாணவன் படும் பாட்டை அறியும்போது நம் கண்கள் பனிக்கின்றன. ‘சிலேட்டுக்குச்சி’ கல்வியில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்பதை கல்வியாளர் பேரா.ச.மாடசாமியும், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனும் நன்றாகவே அணிந்துரைகளில் உணர்த்தியுள்ளார்கள். முத்துக்கண்ணன் தொடர்ந்து எழுதி வாசகர்களுக்கு பயனுள்ள செய்திகளை வழங்க வேண்டுமென புதிய ஆசிரியன் இதழ் வாழ்த்துகிறது.
-பேரா.பெ.விஜயகுமார் (9500740687)

Spread the love