September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சிறுகதை

தொடர் ஓட்டம் 
ஜனநேசன்

மதிய உணவு நேரம். அந்த அலுவலகத்தில் பெண் அலுவலர்கள் கண்காணிப்பாளரை ஒரு பார்வையால் பார்த்தும், மறுபார்வையால் தமக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டும் அவரவர் உணவை சாப்பிட்டு முடித்தனர்.

கண்காணிப்பாளரம்மா சாப்பிட்டு முடிக்கப் போகிறார் என்று உணர்ந்ததும் நளினி கேட்டாள்..

“மேடம், இன்னைக்கு நீங்க ஸ்வீட் தருவீங்கன்னு எதிர்பார்த்தோம்…”

செல்வி எழுந்து காற்றாடியின் வேகத்தை அதிகப்படுத்தினாள். கட்டுக்குள் படிந்திருந்த முடிகள் கிளர்ந்தாடின.

கண்காணிப்பாளர் முடியை சரிப்படுத்திக் கொண்டு,

“ஸ்வீட்டா…? எதுக்கு ? எந்த விசேஷமும் இல்லையே இன்னைக்கு..?”

“மேடம், ரிட்டயர்மெண்ட் வயசை அறுபதாக்கியிருப்பதாக ராத்திரி நியூஸிலே சொன்னாங்க..இன்னும் ஒண்ணரை வருஷம் கூடுதலா வேலை பார்ப்பீங்கல்ல? ரெண்டு இன்க்ரிமென்ட் கூடக் கிடைக்கும்.. இதனால பென்சனும் கூடும் ! இந்த இனிப்பான செய்திக்கு நீங்க ஸ்வீட் கொடுக்கணுமில்ல மேடம்?”

சியாமளா முகமெல்லாம் சிரிப்பு ஒளிரச் சொன்னாள்.

“ஐயோ, கொடுமையே.. இதுக்குத்தான் நான் சாப்பிடும்போது பார்வையாலே பட்டிமன்றம் நடத்தினிகளா.. அந்தச் செய்தி கேட்டதிலேருந்து மனசு ஒருநிலைப் படலை. ராத்திரியெல்லாம் தூக்கமில்லை. இன்னும் ஆறுமாசத்திலே நிம்மதியா ரிட்டையராகலாமுன்னு இருந்தேன்; இந்த அரசாங்கம் என்னோட எண்ணத்தில மட்டுமில்ல, என்னை மாதிரிப் பலரைக் குழியில தள்ளி மண்ணைப் போடப் பாக்குதே…”
என்ன மேடம் இப்படிச் சொல்றீங்க என்றாள் நளினி.

“கேளுங்க.. ரிடையராகுறதுக்கு ஆறுமாசத்துக்கு முன்னால ஜிபிஎஃப்-லேருந்து தொண்ணூறு சதத்தை திரும்பப் பெறலாம்னு போனவாரந்தான் விண்ணப்பம் அனுப்பிச்சேன் ; அந்தப் பணம் வந்தால் கையிலுள்ள சேமிப்பு, மகளது சேமிப்பு எல்லாம் சேர்த்து அவளுக்கு நல்ல இடமாப் பார்த்து கல்யாணத்தை முடிச்சுரலாமுனு இந்த மூணுமாசமா ஒவ்வொரு ஞாயிறா மாப்பிளை தேடி அலையுறோம்..

இப்போ ரிடையர்மன்ட் வயசைக் கூட்டிட்டா ஜிபிஎஃப் பணத்தை இப்ப எடுக்க முடியாதே… மகளுக்கு இருபத்தஞ்சு வயசாச்சு ; காலாகாலத்தில அவளுக்கு ஒரு நல்லதைச் செய்யணுமில்ல..? அவளுக்கு அடுத்து மகனுக்கும் கல்யாணம் செய்யணுமில்ல…அவனுக்கு நல்ல சம்பந்தம் நிறைய வருது. அக்காளுக்கு முடிக்காம தம்பிக்கு முடிக்க முடியுமா, சொல்லுங்க…

கேள்வி கேட்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கண்காணிப்பாளர் தொடர்ந்தார்.

“இந்தக் கொரோனா கொடுமை வந்தாலும் வந்தது.. மகனும் மகளும் அரைச்சம்பளம், கால்சம்பளத்துக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறாக. கரண்டுபில்லு கட்டி மாளலை. ரிடையரான மனுஷன் ஒரு டிவியை கொஞ்ச நேரம் கூடுதலா பார்க்க முடியலை. வீட்டில தங்கி, கையைக் காலை நீட்டிப் படுக்க முடியாம, சங்கம், பார்க்குன்னு அலையறாரு..

சரி, நானாவது இங்கே ஆபீசிலே நிம்மதியா வேலை பார்க்க முடியுதா? பத்து பேரு வேலை பார்த்த ஆபீசிலே இப்ப அஞ்சு பேருதான் வேலை பார்க்கிறோம். காலியான இடத்திலே ஆள் போடலை. ஒவ்வொருத்தரும் ரெண்டு சீட்டு வேலைகளைச் செய்யிறோம். நான் பேருக்குதான் சூப்பிரண்டு ! .. உங்களோடு சேர்ந்து கிளார்க் வேலையிலே தேங்கின iஃபலை எல்லாம் நானும் பார்க்கணும்… நீங்க வைக்கிற iஃபல்களை சரி பார்த்து, திருத்த வேண்டியதைத் திருத்தி அனுப்பணும்.. முக்கியமான நிதிக் கோப்பு பத்தி நானும் நீங்களும் மணிக்கணக்கா மண்டையைப் பிச்சுக்கிட்டு யோசிச்சு ஒருமுடிவெடுத்து அரசுக்கு அனுப்பினா, அரசு அதற்கு நேர்மாறான முடிவெடுத்து செயல்பட வற்புறுத்தும்..”

அது சரிதான் மேடம் என்றாள் செல்வி.

“சரி, எனக்கும் ஐம்பத்தெட்டு வயசாகப் போகுது. இந்த வயசுப் பெண்களுக்கு வரும் உடல்ரீதியான எல்லாத் தொல்லைகளும், துயரங்களும் எனக்கும் உண்டில்ல? எத்தனை நாளுக்குத்தான் வலியையும், வதையையும் மறைச்சு வேலை பார்க்கிறது? நானும் கொஞ்சம் இளைப்பாறி பிள்ளைக, பேரப்பிள்ளைகன்னு பார்க்கணுமில்ல…

பழுத்த இலை வழிவிட்டாத்தானே தளிரு முளைக்கும்? சருகுகள் மூடிகிட்டா முளைவிடும் இலைகள் வெம்பி அவிஞ்சு உதிர்ந்திருமில்ல?
அதனாலேதான் நான் சொல்றேன்.. இந்த ரிடையர்மன்ட் வயசை உயர்த்தினது என்னைப் பொறுத்தவரை லாபமில்லை..சாபம்.! கழுதைக்கு முன்னே கேரட்டைக் காட்டி மேலும் மேலும் சுமையை ஏத்தி சுமக்க விடறமாதிரி நமக்கு கொடுக்கவேண்டிய ஓய்வூதியப் பலனை உடனே கொடுக்காம தள்ளிப் போடற தந்திரம்..

அது மட்டுமல்ல, நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு அரசுவேலை கொடுக்காம பிரைவேட்டில அத்தக்கூலி சம்பளத்துக்கு தள்ளிவிடற மோசடி.. இப்போ என் பிள்ளைகள் ரெண்டுபேரும் படிச்ச படிப்புக்கு எனக்கு மேல் அதிகாரிகளாக வேலை பார்த்துகிட்டு இருக்கணும் ; ஆனா அரசு வேலைவாய்ப்பு குடுக்காததினால தனியார் கம்பனிகள்ல நேரங்காலம் வரைமுறை இல்லாம அரைச்சம்பளத்தில அல்லல்படுறாங்க.. எந்த வேலையும் நிரந்தரமில்லாம எதிர்காலத்தை இழந்து நிற்கிறாங்க. இது நம்மைச் சுற்றி பெரும்பாலானவங்க வீட்டில நடக்கிற கொடுமை. இந்தப் பாதிப்பு உங்களுக்கும்தான்.

இவ்வளவு கசப்பு இருக்கையில் நான் என்ன ஸ்வீட் கொடுக்க முடியும் ? . சொல்லுங்க..”
கேள்வி கேட்டவர்கள் விக்கித்து நின்றனர். மவுனமாகினர்.

(94422 83668 – [email protected])

Spread the love