June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

“சின்ன (அக்)கவுண்டர்!”

டாக்டர் ஜி. ராமானுஜம்
எவெரெஸ்ட் மலையில் டென்சிங்கும் ஹில்லாரியும் ஏறியபோது அங்கு ஒரு நாயர் டீக்கடை போட்டிருந்தார். ‘சாரே சாயா வேணுமோ?’ என்று கேட்டார் என்பது பழைய ஜோக். நவீன கால ஜோக் என்ன தெரியுமா? அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்த அடுத்த வினாடி அவருக்கு ஒரு ஃபோன் வந்ததாம். ‘சார்.. நாங்க ஏபிசிடி பேங்க்லேர்ந்து பேசறோம். பெர்சனல் லோன் வேணுமா ?’ என.
அப்படித்தான் ஈமெயிலைக் கண்டுபிடித்தவருக்கு அடுத்த நிமிடமே அவரது பல கோடி ரூபாய்கள் சொத்தை அவர் இருக்கும் இடத்திற்கு மாற்றித்தர கமிஷன் கொடுப்பதாக ஏமாற்றும் மெயில் வந்திருக்கும்.
மோசடிகளைக் குறைக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். அந்தத் தொழில்நுட்பங்களையே பயன்படுத்தி நவீன வடிவில் மோசடித்தனங்களைச் செய்கிறார்கள். என்னதான் எதிர்ப்பு சக்தி தடுப்பூசிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி கொரோனா வைரஸ் உருமாறி உருமாறி ஆல்ஃபா ஓமிக்ரான் என்றெல்லாம் வருவதுபோல் இத்தகைய மோசடிகளும் உருமாறி உருமாறி உருவாகின்றன.
ஆனால் எல்லோரும் அப்படி ஏமாறுவதில்லை. ஒரு திரைப்படத்தில் வடிவேலுவைக் கொள்ளையடிக்க சிங்கமுத்து அண்ட் கோ துரத்து துரத்து என துரத்துவார்கள். சட்டை பாக்கெட்டைப் பிடித்தபடியே வடிவேலு ஓடுவார். ஒரு வழியாக சிங்கமுத்து அவரைத் துரத்திப் பிடித்தபின் பார்த்தால் அவர் சட்டைப் பையில் பர்ஸோ பணமோ இருக்காது. ‘ஓடும்போது ஒரு சப்போர்ட்டுக்காக நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு ஓடினேன்’ என்பார் வடிவேலு. ‘இத்தனை கிலோமீட்டர் எங்களை இதுக்குத்தான் ஓட விட்டியா ?’ எனச் சிங்கமுத்து ஆத்திரமடைவார்.
அதுபோல் சிலரது அக்கவுண்டில் பெரிதாக ஒன்றும் இருக்காது (சிறிதாகவும் ஒன்றும் இருக்காது). எனக்குத் தெரிந்த ஒருவருக்கு இந்த ஆன்லைன் மோசடிக் கும்பல் ஃபோன் செய்து “வங்கியிலிருந்து பேசறோம். உங்க ஏ.டி.எம். கார்டோட பதினாறு இலக்க எண்ணைச் சொல்லுங்க. பின் நம்பர் சொல்லுங்க.” என்றெல்லாம் கேட்டு பதினைந்து நிமிடங்கள் பேசினார்கள். கடைசியில் அந்தக் கும்பலுக்குத் தெரிந்தது அந்த அக்கவுண்டில் அவர் பதினைந்து ரூபாய்தான் வைத்திருந்தார் என! பதினைந்து ரூபாய்க்குத்தான் பதினாறு இலக்க ஏ.டி.எம் நம்பரா எனக் கடுப்பானது அந்தக் கும்பல்.
அடுத்து முக நூலில் நம் பெயரில் போலிக் கணக்கை உருவாக்கி நம்முடைய நண்பர்களிடம் பணம் கேட்கும் கும்பல் ஒன்று உலவுகிறது. பாவம் அவர்களுக்கு நம் ஆட்களைப் பற்றித் தெரியாது. நேரில் சென்று அவசரமாகக் கேட்டாலே ஒரு மணி நேரம் அட்வைஸ் செய்துவிட்டு பத்து பைசா கூடத் தராத அவர்களை நம்பி கஷ்டப்பட்டு போலி அக்கவுண்ட் உருவாக்கி என்ன பலன் கிடைத்துவிடும்?
இதுபோல் என் பெயரிலும் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கி மோசடி செய்ய ஒரு சமயம் முயற்சி நடந்தது. ஆயிரம் ரெண்டாயிரம் எனக் கேட்டாராம் அந்த மோசடிப் பேர்வழி. எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. நான் லட்சக்கணக்கில்தான் கடன் கேட்பேன் என்பது அவருக்குத் தெரியாது.
உடனே நான் முக நூலில் ஒரு பதிவு போட்டேன். “யாரோ முகநூலில் எனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்திப் போலி அக்கவுண்ட் தொடங்கி பணம் கேட்டு மெசேஜ் அனுப்புகிறார்களாம். அப்படி என் பெயரில் ஏதாவது செய்தி வந்தால் அதை எனக்கு உடனே தெரிவிக்கவும். அந்தச் செய்தியை நான் பார்த்து அதில் இருப்பது நிஜமாகவே என்னுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணாக இருந்தால் ஓகே என மெசேஜ் செய்கிறேன். அதன்பின் பணம் போடவும்!” என்று அதில் எழுதினேன்.
இதேபோல் ஒருவர் தன் நண்பரிடம் “டேய்.. யாரோ உன் அக்கவுண்டை ஹேக் பண்ணியிருக்காங்க. நேத்து எங்கிட்ட பணம் கேட்டு மெசேஜ் வந்தது” என்றார். அதற்கு அந்த நண்பர் “டேய்! அது நான்தாண்டா! எங்கிட்ட வாங்கின கடனைத் திரும்பிக் கொடு” என்றாராம்.
சிலசமயம் இயல்பாக நடக்கும் விஷயங்கள்கூட பீதியைக் கிளப்பிவிடும். ஒரு முறை என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து திடீரெனெ ஒரு தொகை வேறொரு கணக்கிற்கு அனுப்பப்பட்டதாக அதிகாலையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு அது கொஞ்சம் பெரிய தொகை என்பதால் பதறிவிட்டேன். இப்போதைக்கு யாருக்கும் நம்பர் தரவில்லையே எனப் பதறி பேங்க் டோல்ஃப்ரீ நம்பர், அந்த வங்கி பிராஞ்சில் வேலை பார்க்கும் மச்சினர், கமிஷனர் ஆபீஸ் எதிரில் காய்கறிக் கடை வைத்திருப்பவர் என எல்லோரிடமும் ஃபோன் பேசி அந்த மோசடியைப் பற்றிப் புகார் கூறினேன். நாளைய செய்தியில் ‘பிரபல மன நல மருத்துவரிடம் ஆன்லைன் மோசடி’ என வருமே என லேசாக மகிழ்ந்தாலும் பெண்போல் நடித்து ஆசைவார்த்தைகள் பேசி மயக்கி பண மோசடி என்றெல்லாம் இஷ்டத்துக்கு அடித்து விடுவார்களே என்ற பயமும் எழுந்தது.
வழக்கம்போல எங்கோ ஆப்பிரிக்கக் காடுகளில் மரத்தில் தாவிக் கொண்டிருந்த என் மூதாதையரிலிருந்து ஆரம்பித்துப் பரிணாம வளர்ச்சிப் பாதையில் என் பரம்பரைக்கே பொறுப்பு இருக்காது என இல்லத்தரசி விமர்சனம் வைத்தார்.
கடைசியில் எல்லாக் களேபரமும் முடிந்த பின் 23-ம் புலிகேசி பட ஒற்றன் ‘முக்கிய’ செய்தியுடன் வருவதுபோல் அலட்சியமாக ஒரு மெயில் வந்தது வங்கியிலிருந்து. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருக்கும் பணத்தை வங்கியே ஆட்டோமேட்டிக்காக ஃபிக்ஸட் டெப்பாசிட் ஆக எடுத்துக் கொண்டு விடுமாம். அது நம் அக்கவுண்டை பாதுகாக்கும் வழியாம். வங்கி அக்கவுண்ட் ஆரம்பிக்கும்போது கையெழுத்திட்ட படிவத்தில் பொடி எழுத்தில் 6 சைஸ் ஃபாண்டில் இப்படி எழுதியிருப்பார்கள். நாம அந்தக் குறிப்பிட்ட தொகைக்கு மேல என்னிக்கு பணம் வச்சிருப்போம்? ஐ.பி.எல்.கப்பிலே ஜெயிக்கற மாதிரி அபூர்வமா நடந்ததினாலே மறந்தே போச்சு!!
நல்லா கிளப்புறானுங்க பீதியை!! மெசேஜையாவது கொஞ்சம் விடிஞ்சப்பறம் அனுப்புங்கய்யா! பெரிய அக்கவுண்டிலிருந்து சின்ன அக்கவுண்டுக்கு மாற்றிய பஞ்சாயத்து சின்னக் கவுண்டர் பஞ்சாயத்துபோல் ஆகிவிட்டது.
இப்படியெல்லாம் நாம் கவலைப்படக் கூடாது என்றுதான் அரசாங்கங்கள் நம் அக்கவுண்டில் பணம் அதிகமாக சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. எதற்கும் நமக்குத் தரப்போகும் அந்த பதினைஞ்சு லட்ச ரூபாயை கேஷாகவே கொடுக்குமாறு அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டும்.
(9443321004 – [email protected])

Spread the love