September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சினிமா

சத்யஜித் ரே – 100…
உலகம் போற்றிய இந்தியக் கலைஞன்
சோழ. நாகராஜன்
இந்தி சினிமா உலகின் பிரபல புதுமை இயக்குநர் சியாம் பெனகல் ஒருமுறை தான் பார்த்த சினிமா ஒன்றைக் குறித்து இப்படிச் சொல்லியிருந்தார்:
“நான் கல்கத்தாவுக்குப் போயிருந்த சமயம். புதிதாக வெளிவந்திருக்கும் ஒரு வங்கமொழிப் படத்தை நீ அவசியம் பார்க்கவேண்டும் என்று அங்கு வசிக்கும் என் மாமா என்னிடம் சொன்னார். நான் மதியக் காட்சிக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு அந்தப் படத்தைப் பார்க்கச் சென்றேன். அந்தப் படம் தந்த அனுபவத்தை என்னால் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. நான் நானாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்”.

சியாம் பெனகல் அந்தக் காட்சியோடு திருப்தியடையவில்லை. படம் முடிந்து வெளிவந்ததும் அடுத்த காட்சிக்கு ஒரு டிக்கட் எடுத்து மறுபடியும் பார்த்தார். படம் முடிந்து வெளியே வந்ததும் இரவுக் காட்சிக்கு மறுபடியும் டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே போனார். அன்று மட்டுமல்ல..அடுத்த நாட்களிலும் தொடர்ந்து ஊர் திரும்பும்வரை அந்தப் படத்தைப் போய்ப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அந்தப் படம்தான் `பதேர் பாஞ்சாலி’. அதன் இயக்குநர் சத்யஜித் ரே. படம் வெளியான ஆண்டு 1955. பிரபல வங்க நாவலாசிரியர் விபூதிபூஷனின் நாவல்தான் பதேர் பாஞ்சாலி. பிரபல இசைமேதை பண்டிட் ரவிசங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

சத்யஜித் ரே பதேர் பாஞ்சாலியைத் தருவதற்கு முன்னால் இந்திய சினிமா என்பது பழைய புராணங்களைப் பேசிக்கொண்டும், பழைய நாடகபாணியையே திரையில் வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தது. சத்யஜித் ரே முழுக்க முழுக்க சினிமா என்கிற அந்த அதிநவீன அறிவியல் கலையை அதன் உண்மைப் பொருளில் வெளிக்கொண்டுவந்த முதல் கலைமேதையாகத் திகழ்ந்தார். இந்திய சினிமா உலகம் மட்டுமல்லாமல் உலகமே ரேயின் வீச்சைக் கண்டு வியந்து நின்றது.

கல்கத்தாவில் பதேர் பாஞ்சாலி வெளியானபோது மூன்று வாரங்களுக்கு மட்டுமே தியேட்டரை ஒப்பந்தம் செய்திருந்தனர் படத்தின் தயாரிப்புக் குழுவினர். ஆனால், படம் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. அப்போது நடந்தது இந்த ருசிகரச் சம்பவம். படம் வெளியாகியிருந்த சமயம். ஒருநாள் அதிகாலை. அவர் வீட்டின் கதவுகளை ஒரு வேட்டி கட்டிய தமிழர் தட்டினார். உள்ளே சென்றதும் அவர் சத்யஜித் ரேயை ஆரத் தழுவிக்கொண்டார். பிறகு சொன்னார்: “நேற்று மாலைதான் உங்களது படத்தைப் பார்த்தேன். என்னவொரு அற்புதம்! உங்கள் படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்கில்தான் மூன்று வாரங்களுக்குப் பின் எனது தயாரிப்பில் உருவான படம் ரிலீசாவதாக ஏற்பாடு செய்திருந்தேன். உங்கள் படத்தை மக்கள் அமோகமாக வரவேற்கிறார்கள். அது தொடர்ந்து ஓடவேண்டும். எனவே, என் படத்தை வேறொரு தியேட்டருக்கு மாற்றிவிட முடிவு செய்து விட்டேன். மூன்று வாரங்களைத் தாண்டியும் உங்கள் படம் நூறு நாட்களைக் கடந்தும் ஓடிட வாழ்த்துகள்.”

இப்படியொரு பெருந்தன்மையை ரேயிடம் காட்டிய அந்த சென்னைத் தமிழர்தான் அந்நாளைய முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ். வாசன்.

இத்தனைக்குப் பிறகும் அன்றைய மேற்குவங்க அரசின் விளம்பரத் துறையோ பதேர் பாஞ்சாலியைப் பெருமிதத்துடன் எடுத்துச்செல்ல ஆர்வமின்றி இருந்தது. பம்பாயின் வணிக சினிமா பதேர் பாஞ்சாலியை ஒருவித வெறுப்போடு அணுகி அதனைப் புறந்தள்ளும் முனைப்பில் இருந்தது. அந்நாளைய பிரதமர் நேருவின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது. மேற்குவங்க அரசிடமிருந்து பதேர் பாஞ்சாலியின் பிரதிகளை விலைக்கு வாங்கி, உலகின் பல நாடுகளின் இந்தியத் தூதரகங்களுக்கு அனுப்பிவைக்குமாறு நேரு உத்தரவிட்டார். அதன் மூலம் உலக சினிமா ரசிகர்களும், ஆர்வலர்களும், விமரிசகர்களும் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அது வெளிவந்த காலம் தொடங்கி, இன்றுவரையில் `பதேர் பாஞ்சாலி’ பற்றிய புகழுரைகள் உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் வந்தவண்ணமே இருக்கின்றன. இந்தப் படம் மட்டுமல்லாமல் ரேயின் அபராஜிதோ, அபுர் சன்சார் போன்ற படங்களும் உலகப் பிரசித்தி பெற்றன.

சத்யஜித் ரே எனும் அந்த மாபெரும் இந்தியத் திரையுலக மேதை வெறும் இயக்குநர் மட்டுமல்ல… அவர் ஒரு மிக அற்புதமான ஓவியர், எழுத்தாளர், இசையறிஞர், புத்தகப் பதிப்பாளர், வரைபட வடிவமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர். இப்படிப் பன்முக ஆற்றலின் உருவம்தான் ரே.

1921 -ம் ஆண்டு மே திங்கள் 2 ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார் ரே. அவரது தந்தையார் சுகுமார் ரே ஒரு எழுத்தாளர், விரிவுரையாளர். ஏராளமான சிறுவர் இலக்கியங்களைப் படைத்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சத்யஜித் ரே தனது தாயார் சுபத்திராவின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். தாயாரின் வற்புறுத்தலால் தாகூரின் சாந்திநிகேதனில் பயின்றார். அங்கு அவருக்கு ஓவியத்தின்மீது நாட்டமேற்பட்டது. 1947-ல் கல்கத்தா ஃபிலிம் சொசைட்டியை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பல வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார். பணி நிமித்தமாக லண்டன் சென்ற ரே அங்கு `தி பைசைக்கிள் தீஃவ்ஸ்’ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களைப் பார்த்தார். தானுமொரு சினிமா கலைஞனாக வேண்டும் என்கிற ஆவல் அவருள் ஏற்பட்டது இப்படித்தான்.
மொத்தம் ரே இயக்கிய படங்கள் 36. அவற்றுள் முழுநீளத் திரைப்படங்கள் 29. ஆவணப்படங்கள் 5. குறும்படங்கள் 2. அவரது பதேர் பாஞ்சாலி 18 விருதுகளைப் பெற்றது. இந்தியாவின் பாரத ரத்னா மற்றும் தாதாசாகேப் பால்கே விருது என்று பல விருதுகளைப் பெற்றார் ரே. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவப் பட்டம் வழங்கியது. அவருடைய வாழ்நாள் கலைச் சேவைக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சத்யஜித் ரே என்னும் உலகம் போற்றிய அந்த மகத்தான இந்தியக் கலைஞனது நூற்றாண்டான இந்த சமயத்திலேனும் ரே எனும் அந்த மகத்தான கலைமேதையை முழுவதுமாக அறிந்துகொள்வோம்.
(98425 93924 – [email protected])

 

 

Spread the love