June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சினிமா

ஜெய் பீம்
-கலை பகர்ந்த ஒரு கண்ணீர்க்கதை
சோழ. நாகராஜன்


தமிழ் சினிமா எத்தனை முன்னோக்கி நகர்ந்திருக்கிறது என வியக்க வைக்கும் தருணங்கள் அவ்வப்போது நிகழத்தான் செய்கின்றன. ஒரு கலைப்படைப்பானது இத்தனை விவாதங்களைக் கிளப்பி, எல்லோரின் கவனிப்பையும் ஈர்ப்பதானது அபூர்வமெனினும் அதுவும் ஒருவகையில் கலையின் வெற்றியாகும். அது குறித்துப் பேசுவதானது ஆதரவாகவோ அல்லது எதிராகவோ, எப்படியாயினும் கவன ஈர்ப்பே கலையின் முதல் வெற்றியுமாகும். அப்படியான பெருவெற்றி அண்மையில் வெளியாகி, பரபரப்பையும் பாராட்டுதல்களையும் பெற்ற ஜோதிகா-சூர்யா தயாரிப்பில் உருவான ஜெய் பீம் படத்திற்குக் கிடைத்திருக்கிறது,
விளிம்புநிலை இருளர் சமூகத்தின் வாழ்க்கைப் பாடுகள் சொல்லி மாளாது. பழங்குடி இனமான அச்சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுவுக்கும், அவரது துணைவி செங்கேணிக்கும் எலி பிடித்தல், பாம்பு பிடித்தல், விஷமுறிவு வைத்தியம் பார்த்தல் போன்றவைதான் தொழில்.


கிராமத்துப் பெரிய மனிதர் ஒருவர் வீட்டில் பாம்பு புகுந்துவிட அதனைப் பிடித்து அகற்ற ராஜாகண்ணு அழைத்துச் செல்லப்படுகிறார். பாம்பைப் பிடிக்கிறபோது அந்த வீட்டின் மேசைக்கு அடியில் தவறவிடப்பட்ட ஒரு தங்கக் கம்மலை எடுத்து அந்த வீட்டுப் பெண்ணிடம் தருகிறார் ராஜாகண்ணு. பிடித்த பாம்பை அடித்துக் கொல்லச் சொல்கிறார்கள் அந்தப் பிரமுகர் வீட்டில். ஆனால், பாம்புகளைக் கொன்றுவிட்டால் பிறகு எலித் தொல்லையைத் தாங்கமுடியாது என்கிற யதார்த்ததைச் சொல்லி அந்தப் பாம்பைக் கண்காணாத இடத்தில் உயிருடன் விட்டுவிடுவதாக உறுதியளிக்கிறார் ராஜாகண்ணு. ஏழ்மையிலும் பண்பட்ட மக்களாக அந்தப் பாவப்பட்ட மக்கள் இருப்பதை இப்படியான எளிய காட்சிப்படுத்தல்கள் உணர்த்துகின்றன.


அந்த ராஜாகண்ணு, தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் மகளையும் கர்ப்பிணிக்கோலத்தில் மனைவியையும் விட்டுவிட்டு, பிழைப்பு தேடி வேறு ஒரு ஊரிலிருக்கும் செங்கல் சூளைக்குக் கூலி வேலைக்குப் போகிறார். பாம்பு புகுந்த பெரிய மனிதரின் வீட்டில் நகை களவு போகிறது. அந்தப் பழி ராஜாகண்ணுமீது சுமத்தப்படுகிறது. ராஜாகண்ணுவோடு மேலும் இரண்டு இருளர் இனத் தொழிலாளிகளும் போலீசாரால் பிடித்துக்கொண்டு போகப்பட்டு கொடும் சித்தரவதைக்கு ஆளாகிறார்கள். அரசியல் செல்வாக்கும், பணபலமும் காவல்துறைக்கு மேலும் மிருக குணத்தை ஊட்ட கொடூரமான சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்து முடிகின்றன. ராஜாகண்ணுவும் மற்ற இரு கைதிகளும் ரத்த வெள்ளத்தில் கிடக்க, திடீரென அம்மூவரும் காணாமல் போய்விட்டதாகச் செய்தி பரப்பப்படுகிறது.


உண்மையில் அவர்கள் தப்பி ஓடிவிட்டார்களா? ஓடியவர்கள் கதி என்னவாயிற்று? காவல்துறையின் அடாவடியான நடவடிக்கைகள் தொடர்ந்தனவா? செங்கேணி தன் கணவன் ராஜாகண்ணுவைக் கண்டடைந்தாளா? இந்தக் கேள்விகளுக்கான விடையினை விவரிப்பதுதான் மீதியுள்ள படக்கதை.
1993-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியம் முதனை கிராமத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை ஒரு திருட்டு வழக்கில் கைதுசெய்து லாக்கப்பில் அடித்துக் கொலை செய்த காவல்துறை அதனை மூடி மறைக்க ஆடிய நாடகங்களை ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான சந்துரு வழக்கறிஞர் பணியிலிருந்தபோது எப்படி துப்புத்துலக்கி அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்தார் என்கிற உண்மை வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த ஜெய் பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


உண்மையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜாமோகனின் பெருமுயற்சிகள் அளவிடற்கரியன. அவரது முன்முயற்சியால்தான் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி வழக்கறிஞர் சந்துருவை அணுகினார். அவரிடம் வழக்கைத் திரும்பப்பெற பேரம் பேசப்பட்டது. மனிதர் மசியவில்லை. மிரட்டல்கள் வந்தன. மனிதர் அசையவில்லை. குடும்ப வாழ்க்கை நீதிக்கான இந்தப் போராட்டத்திற்கு இடையூறாக இருக்கும் எனக் கருதி வழக்கு முடியும் வரை ராஜாமோகன் திருமணமே செய்துகொள்ளவில்லை. வழக்கு நிறைவடைந்து தீர்ப்பிற்குப் பிறகே தனது 39-வது வயதில்தான் அவர் திருமணம் செய்துகொண்டார். இது உண்மைச் சம்பவம். இதனடிப்படையில் படத்தை உருவாக்கியிருந்தாலும் செங்கொடியேந்திப் போராடும் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் கதை மாந்தர்களாக இருந்தாலும் அந்த அர்ப்பணிப்பும் தியாகமும் படத்தில் உரிய முறையில் பதிவாகவில்லை என்பது படத்தில் முக்கியமான குறை.


இருந்தபோதும், பொதுச் சமூகத்தின் மனசாட்சியை ஏழைஎளிய விளிம்பு நிலைப் பழங்குடி மாந்தர்களின் பக்கம் திருப்புகிற அரிய பணியை இந்தப் படம் வெகு சிறப்பாகவே செய்துள்ளது. வழக்கறிஞர் சந்துருவாக நடிகர் சூர்யாவின் தேர்ந்த நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய பலம். அதேபோலவே சோகப் பெருவெள்ளமாகப் பொங்கும் செங்கேணியாகவே வாழும் லிஜோமோள் ஜோஸ், ராஜாகண்ணுவாக வந்து மனைவியின் மீது அளவற்ற காதலையும், காவல் நிலைய லாக்கப்பில் உதைபட்டு அளவற்ற குருதியையும் கொட்டித்தீர்க்கும் மணிகண்டன், காவல் உயர் அதிகாரியாக – விசாரணைப் பொறுப்பேற்றுச் செயல்படும் படு இயல்பான பாத்திரத்தில் அசத்தும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட அத்தனை கதாபாத்திரங்களும் கனகச்சிதமான பங்களிப்பு செய்திருப்பது அருமை. ஒரு பரபரப்புடனேயே படம் முழுவதும் நகர்வது பார்வையாளர்களைக் கண் இமைக்க விடாமல் செய்கிறது.


படத்தைப் பற்றி தேவையற்ற சர்ச்சைகள் கிளப்பிவிடப்பட்டபோதிலும் கலை பகர்ந்த கண்ணீர்க் கதையான இந்த ஜெய் பீம் காவல்துறைக்கும், பொதுச் சமூகத்திற்கும் ஒரு பொறுப்புமிக்க எச்சரிக்கை மணியோசைதான் என்பதில் ஐயமில்லை. ஒரு கலைப்படைப்பை அதன் ஒட்டுமொத்த நோக்கத்தின் அடிப்படையில் அணுகாமல் குற்றங்குறைகளைப் பூதக்கண்ணாடி கொண்டு தேடிப்பிடித்து வம்பு செய்வது படைப்புச் சுதந்திரத்தின்மீது கோடரி பாய்ச்சுவதற்கு ஒப்பானது. அதனை ஒருபோதும் ஒரு ஜனநாயக சமூகம் அனுமதிக்கலாகாது. ஜெய் பீமின் உள்ளேயும் வெளியேயும் இதைத்தான் அனுபவங்கள் உணர்த்துகின்றன.
(98425 93924 – [email protected])

Spread the love