September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சினிமா:கடைசி விவசாயி

அசல் வாழ்க்கையிலிருந்து
ஒரு அசல் சினிமா அனுபவம்…
சோழ. நாகராஜன்
சினிமாத்தனம் எதுவும் இல்லாத சினிமா ஒன்று வந்தால் எப்படியிருக்கும்? அண்மையில் வெளியான ‘கடைசி விவசாயி’ மாதிரித்தான் இருக்கும். ஆமாம், அதென்ன சினிமாத்தனம்? கதாநாயகன், கதாநாயகி, காதல், வில்லன், ரெண்டு மூணு காதல் பாடல்கள் உள்பட நாலைந்து பாடல்கள், சண்டைக் காட்சிகள், தனி நகைச்சுவை டிராக் இத்யாதி இத்யாதியெல்லாம் இருந்தால் அதுதான் சினிமாத்தனம் என்பதாம். அப்படியான எதுவுமில்லாமல் தமிழில் அபூர்வத்திலும் அபூர்வமாக, எப்போதோவுக்கும் எப்போதோ ஒரு படம் வருவதுண்டு. அப்படி வந்து நம்மையெல்லாம் வியப்புக் கொள்ளச் செய்திருக்கிறது இந்தக் கடைசி விவசாயி.
படத்தின் பெயரிலேயே இதுவொரு வித்தியாசமான முயற்சி என்பதைக் கோடி காட்டியிருக்கிறார் இதன் கதை, வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு மற்றும் இயக்கம் என சகலத்தையும் ஒற்றை ஆளாய்க் கையாண்டிருக்கும் இதன் இயக்குநர் மணிகண்டன்.
கிராமத்தின் நிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் கும்பலின் கைகளுக்குப் போய்விட, தன்னுடைய சிறு அளவு நிலத்தை அதிக விலைக்கு வாங்குவதாக ஆசை காட்டியபோதும் தராமல் விடாப்பிடியாக விவசாயம் செய்கிறார் மாயாண்டி என்கிற தனித்து வாழும் 80 வயது ஏழைக் கிழவர். இந்நிலையில் ஊரில் குலதெய்வ வழிபாட்டுக்கு ஊர் வழக்கப்படி நெல்லை விளைவித்துத் தருமாறு ஊர் மக்கள் அவரிடம் வேண்டுகிறார்கள். அதற்குச் சம்மதித்து தனது துண்டு நிலத்தில் உழுது, நெல் பயிரிடுகிறார். இதனிடையில் இறந்து கிடந்த மூன்று மயில்களை முருகனின் வாகனம் என்று இரக்கப்பட்டு தனது வயலில் புதைக்கிறார். அதைச் சாக்கிட்டு அவர்தான் அந்த மயில்களைக் கொன்று புதைத்தார் என்று அவரைப் போலீசில் மாட்டிவிடுகிறார்கள் அவர்மீது கோபங்கொண்ட சில கெடுமதியாளர்கள்.
மனிதர் போலீஸ் நிலையம், கோர்ட், ஜெயில் என்று அல்லாடுகிறார். அதைவிட அவருக்கு நெற்பயிரின்மீதுதான் நினைவாக இருக்கிறது. தண்ணீர் பாய்ச்ச வேண்டுமே, களையெடுக்க வேண்டுமே என்ன செய்வது? ஆயிரம் உயிர்களாச்சே… அவை செத்து மடியுமே… நாளும் பொழுதும் கவலை அப்புகிறது. இந்தச் சூழலில் அவர்மீது போடப்பட்ட வழக்கிலிருந்து அவர் மீள்கிறாரா, ஊர்த் திருவிழா நடக்கிறதா, அதற்கு அவரது நிலத்திலிருந்து அவர் வாக்களித்தபடி நெல் விளைவித்துப் போகிறதா என்பதுதான் படத்தின் உள்ளடக்கம்.
இப்படியொரு கதையைச் சொல்கிறவிதத்தில் நம் விவசாயத்திற்கு உண்டாகியிருக்கும் நெருக்கடிகளைக் கண்முன்னே படம்பிடித்துக் காட்டுகிறார் இயக்குநர். தண்ணீர் போதாமை, மலட்டு விதை, பூச்சிக்கொல்லிகள் என்று எவ்வளவோ வில்லன்கள் விவசாயத்தை அழித்தொழிக்கக் கிளம்பியிருப்பதை மிகவும் யதார்த்தமான பாணியில் போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார். ஆனால் நூறு நாள் வேலைத்திட்டத்தையும் விவசாயத்திற்கெதிரான இன்னொரு வில்லனாகச் சேர்த்திருப்பது நெருடத்தான் செய்கிறது.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊழலும் குளறுபடிகளும் இல்லாமல் இல்லை. விவசாயம் இல்லாத காலத்தில் விவசாயக்கூலிகள் பயன்பெறவே அந்தத் திட்டம் வகுக்கப்பட்டது. அதை முறைப்படுத்த வலியுறுத்தலாம். மாறாக, அந்தத் திட்டத்தையே விவசாயத்திற்கு எதிராகப் புரிந்துகொள்வது பிழையானதென இயக்குநர் அறியவில்லையா?
விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் மனநிலை பிறழ்ச்சியடைந்த அந்தப் பாத்திரம் எதற்காக உருவாக்கப்பட்டது என்று கடைசிவரையில் தெரியவே இல்லை. படத்தின் துவக்கத்தில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு சமர்ப்பணம் என்று காட்டுகிறார்கள். ‘டைட்டில் சாங்’ ஆக டி.எம்.எஸ். பாடிய முருகன் பாடலே வருகிறது. விஜய் சேதுபதியும் நடப்பது முருகன் ஆட்சி என்கிறார். தத்துவார்த்தமாக இயக்குநர் எதை உணர்த்த வருகிறார் என்பது தெளிவாகப் புரியவில்லை என்பது மட்டுமல்ல… எடுத்துக்கொண்ட விவசாயப் பிரச்சனைக் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் தன்னிடமுள்ள விவசாய நிலத்தையெல்லாம் விற்றுவிட்டு ஒரு யானையை வாங்கிப் பிச்சையெடுத்துப் பணம் சம்பாதிக்கக் கிளம்பும் யோகிபாபு பாத்திரம் ஒரு நல்ல குறியீடு. உற்பத்தியில் லாபமில்லாததால் உற்பத்தியில் எந்தப் பங்கும் வகிக்காத, மூடநம்பிக்கைகளை முதலீடாக்கும் நடப்பு அலங்கோலங்களை யோகிபாபுவை வைத்து நையாண்டி செய்திருப்பது நயம்.
அசல் ஊர்மக்களின் முகங்கள், காவல்துறையின் குரூர முகம், ஈரமனசு இளம் ஜட்ஜம்மா, இரக்கமுள்ள சக சிறைக் கைதி, ரத்த பாசத்தில் துடித்து அழும் ஊர்க் கிழவிகள், இளசுகள், அசலாக நிகழ்ந்தேறும் ஊர்த் திருவிழா என எல்லாமே யதார்த்தமாக, உண்மைச் சம்பவத்தை அருகிலிருந்து பார்க்கிற உணர்வைத் தருகிறது. குறிப்பாக அந்தப் பெரியவர் மாயாண்டியாக வரும் நல்லாண்டியை சினிமா பாத்திரமாகவே உணர முடியவில்லை. அத்தனை அசல் வார்ப்பு. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் முகபாவங்களைக் கூடுதலாக குளோஸ்அப் காட்சிகளில் இயக்குநர் அவரிடம் வாங்கியிருக்கலாமோ என்றும் தோன்றத்தான் செய்கிறது.
காக்கா முட்டை மணிகண்டன் என்று பெயரெடுத்த இயக்குநர் தன் பெயரை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இந்தக் கடைசி விவசாயியைத் தந்ததன் மூலம். சின்னச் சின்னக் குறைகளைக் கடந்தும் ஒரு நல்ல சினிமாவை இப்படியும் உருவாக்கலாம் என்று அடையாளம் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவின் தரமுயர்த்தியதற்காகவும் பாராட்டுக்கள்!
(98425 93924 – [email protected])

Spread the love