June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சிங்கிள் ஷாட் சினிமா :

பார்த்திபனின் இரவின் நிழலை முன்வைத்து..
சோழ. நாகராஜன்
இயக்குநர் பார்த்திபன் தொடர்ந்து மாறுபட்ட சினிமா முயற்சிகளைச் செய்தவண்ணமிருப்பவர். அவரது ‘ஒற்றைச் செருப்பு’ படத்தைத் தொடர்ந்து தற்போது பேசுபொருளாகியிருப்பது அவர் கைவண்ணத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் படமான ‘இரவின் நிழல்’. 50 வயதைக் கடந்த ஒரு மனிதன் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதான கதையமைப்பைக் கொண்டதே இந்த ‘இரவின் நிழல்’. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தில் அவர் என்ன புதுமை செய்திருக்கிறார் என்றால் அதனை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பதுதான்.
அதென்ன ஒரே ஷாட்டில் எடுப்பது? படப்பிடிப்பு தொடங்கி, கேமராவை முடுக்கிவிட்டுவிட்டால் படம் முழுவதையும் எடுத்து முடித்துவிட்டுத்தான் கேமராவை நிறுத்த வேண்டும். அது சில நிமிடங்களானாலும் சரி, மணிக்கணக்காக எடுக்கவேண்டியிருந்தாலும் சரி. இப்படியொரு சவால் சாதனைக்குப் பெயர்தான் “சிங்கிள் ஷாட் சினிமா”. அதனை ஒன் ஷாட் சினிமா என்றும், சிங்கிள் டேக் ஃபிலிம் என்றும், கன்டின்யூவஸ் ஷாட் ஃபீச்சர் ஃபிலிம் என்றும் அழைக்கிறார்கள். “ஒன்னர்” – என்றும் செல்லமாக அழைக்கப்படும் இந்தவகை உத்தியானது தமிழுக்குப் புதிது என்றாலும் உலகம் முழுவதும் இப்படியான முயற்சிகள் நெடுங்காலத்திற்கு முன்னமே தொடங்கிவிட்டவைதான்.
மனிதக் கற்பனைக்கு எல்லையென்று ஒன்றுள்ளதா என்ன? அதிலும் சினிமா என்னும் அதிநவீனக் கலையில் மனிதனின் கற்பனைக் குதிரையானது எல்லையற்றுப் பாய்ந்தோடும் வல்லமை கொண்டது அல்லவா? அப்படியான எத்தனையோ புதிய தேடல் முயற்சிகளுள் ஒன்றுதான் இந்த சிங்கிள் ஷாட் சினிமா. இது மிகப்பெரிய சவால்கள் நிறைந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. படப்பிடிப்பின்போது சின்னத் தவறு நேர்ந்துவிட்டால்கூட மறுபடியும் முதலிலிருந்து படப்பிடிப்பை நடத்தவேண்டிய நிலை ஏற்படும். எனவே மிக மிகக் கவனமாக மேற்கொள்ளவேண்டிய படப்பிடிப்பைக் கோருகிற ஒரு உத்தியாகவே இயல்பில் இந்த சிங்கிள் ஷாட் சினிமா இருக்கிறது.
1982-ம் ஆண்டில்தான் முதன்முதலில் சிங்கிள் ஷாட் சினிமா உருவாக்கப்பட்டது. தொடர்ந்து ஒரே ஷாட்டில் 57 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தப் படத்தின் பெயர் ‘மேக்பத்’. ஹங்கேரிய இயக்குநர் பேலா டார் இந்தப் படத்தை இயக்கினார். இதுதான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் சினிமா என்றாலும் இதற்கு வெகுகாலத்திற்கு முன்னமே 1948-ல் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இதை முயன்றுள்ளார். அவரது சைக்காலஜிக்கல் கிரைம் திரில்லர் சினிமாவான ‘ரோப்’ என்ற படத்தில் பல காட்சிகளை நீண்டநேரம் ஓடக்கூடிய சிங்கிள் ஷாட் காட்சிகளாக எடுத்து அப்போதே அந்தப் புதுமைக்கு வித்திட்டார். ஒவ்வொரு நீண்டநேரக் காட்சியும் ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு ஓடக்கூடிய ஒரே ஷாட் காட்சிகளாக அமைந்தன. ஆனால், முழுக்க முழுக்க சிங்கிள் ஷாட் படமாக உருவாக்கப்பட்ட முதல் சினிமா மேற்சொன்ன ‘மேக்பத்’தான்.
அதனைத் தொடர்ந்து 1998-ல் பிக் மன்டே (74 நிமிடங்கள்), 2000-ல் டைம்கோட் (97 நிமிடங்கள்) என்று சுமார் 35 படங்கள் வெளிவந்தன. அதில் அமெரிக்காவிலிருந்து 8 படங்கள் உருவாகி வெளிவந்தன. இந்தியாவில் மட்டும் 5 படங்கள் வெளிவந்தன. ஹங்கேரி, ரஷ்யா, கொலம்பியா, பிரேசில், ஈரான், ஸ்பெயின், இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலும் இந்த சிங்கிள் ஷாட் பட உத்தியில் படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த சவாலை எதிர்கொள்ள எப்போதும் கலைஞர்களுக்கு ஆர்வம் இருந்தே வந்துள்ளது.
அப்படியானதொரு ஆர்வம் இயக்குநர் பார்த்திபனுக்கும் வந்து தமிழில் இப்போது முதன்முதலில் ஒரு சிங்கிள் ஷாட் சினிமா எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் ஹிட்ச்காக் போல தமிழிலும் சிங்கிள் ஷாட் காட்சி முயற்சிகள் பலவும் நடந்துள்ளன. கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் வரும் அந்த இரவு நேரப் பாடல் காட்சியில், பல தளங்களிலும் காமிரா பயணித்து கடைசியில் வரலட்சுமி கமலைத் தாலாட்டிப் பாடுவதில் முடியும். இது குணா வெளிவந்த போதே சிலாகித்துப் பேசப்பட்டது.
பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தில்கூட கண்ணுக்குப் புலப்படாத வெட்டி ஒட்டும் எடிட்டிங் வேலை நடந்துள்ளதாக இதனை விருதுப் பட்டியலிலிருந்து தள்ளிவிட்ட கேன்ஸ் விழா நிகழ்வு சுட்டுகிறது. ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழிகளின் திறமைகளை அவர்களுக்கு மதிக்கத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் பார்த்திபன். தனது படம் சிங்கிள் ஷாட் படம்தான். எந்த இடத்திலும் எடிட் செய்யப்படவில்லை என்கிறார் அவர்.
சிங்கிள் ஷாட் போலத் தோன்றும் சில காட்சிளும் உண்டு. எம்.ஜி.ஆர். இரட்டை வேட நடிப்பில் உருவான ‘நாளை நமதே’ படத்தில் ஒரு பாடல் காட்சி. ‘அன்பு மலர்களே.. நம்பி இருங்களேன்.. நாளை நமதே…’ என்று தொடங்கும் மேடைப் பாடலில் இளம் எம்.ஜி.ஆர். தனது கடைசி சகோதரனுடன் மேடையில் பாடிக்கொண்டிருப்பார். காமிராவை மேடைக்கு இடதுபுறமாகத் திருப்புவார்கள். மேடைக்கு இடப்பக்கம் தொலைவில் வயதான-அகோரத் தோற்றம் கொண்ட இன்னொரு எம்.ஜி.ஆர். மனதுக்குள்ளான மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் இவர்களைப் பார்த்துக்கொண்டு நிற்பார். மேடையில் ஒரு எம்.ஜி.ஆர். கீழே தூரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர். இந்தக் காட்சியில் இருவரையும் ஒரே ஷாட்டில் காட்டுவதன் மூலம் பார்வையாளர்களுக்கு இரண்டு வேறு வேறு எம்.ஜி.ஆர். என்ற உணர்வை ஏற்படுத்தவே இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் இரண்டு வேடங்களில் நடிக்கிற ஒரு நடிகரைத் தனித் தனியே ஷூட் செய்தாலும் அது பளிச்செனத் தோன்றாதவாறு இடையிலே சின்ன வெட்டு இருக்கும். அது கண்டுபிடிக்க முடியாதவாறு எடுக்கப்பட்டிருக்கும். இதுதான் சிங்கிள் ஷாட்போல எடுப்பது.
சிங்கிள் ஷாட்போல எடுக்கப்பட்ட சினிமாக்கள் சுமார் 14 படங்கள் வெளிந்திருக்கின்றன. தொழில்நுட்ப ரீதியிலான புதுமைதான் இந்த ஒன் ஷாட் உத்தியும் சிங்கிள் ஷாட்போல எடுக்கப்படும் உத்தியும். எது எப்படியோ சினிமா எனும் கலை அதன் வெளிப்படும் தன்மையில் பார்வையாளர்களிடையே பயனுள்ள மகிழ்வை ஏற்படுத்தினால் அதைவிட நல்ல உத்தியும் முயற்சியும் வேறென்ன இருக்கமுடியும்?
(98425 93924 – [email protected])

Spread the love