June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சாலை விதிகளை மீறும் பயங்கரவாதிகள்

ஆபத்தான ஆயுதங்களைக் கைகளில் ஏந்தி சமூகத்திற்கெதிராக வன்முறையைப் பிரயோகிப்போரை பயங்கரவாதிகள் என்கிறோம். அப்படி ஏதும் ஆயுதங்களைக் கைகளில் ஏந்தாமலேயே அன்றாடம் சாலை விதிகளைத் துச்சமென மதித்து தாங்கள் விரும்பியபடி வளைந்து நெளிந்து நம்மை மிரட்டும் வாகன ஓட்டுநர்களும் ஒரு விதத்தில் பயங்கரவாதிகள்தான்!

சிலர் நம் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் முன் அல்லது நம் வீட்டு வாயிற்படி முன் தங்கள் காரை நிறுத்திவிட்டு சில மணி நேரம் காணாமல் போய் விடுவார்கள். வேறு சிலர் ஒரு குறுகிய தெருவை பெருமளவுக்கு ஆக்கிரமித்து குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலையை ஒரு புறம் சாய்த்துக்கொண்டு செல்பேசியைக் காதருகில் வைத்தவாறு உரையாடிச் செல்வது நாம் அன்றாடம் காணும் காட்சி. கார் அல்லது பஸ் டிரைவர்களும் செல்பேசியில் பேசிக்கொண்டு அல்லது சற்றே திரும்பி அரட்டை அடித்துக் கொண்டு பயணிகளின் உயிரைப் பணயம் வைப்போரை எந்தக் கணக்கில் வைப்பது? வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது செல்பேசியில் பேசுவதைத் தவிர்க்குமாறு ஆங்காங்கே விளம்பரங்கள் வைக்கப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் படித்து அதன்படி செயல்படும் பைத்தியக்கார மேன்மக்கள் பாரினில் சிலரே உண்டு.

ஆட்டோ டிரைவர்களில் சிலர் சாலையில் என்ன நெரிசலான போக்குவரத்து இருந்தாலும் வளைந்து நெளிந்து தலைதெறிக்கும் வேகத்தில் பறந்து உள்ளே இருக்கும் நம்மைக் கலங்கடிப்பார்கள். ஓலா, உபெர் போட்டியில் ஆட்டோக்காரர்கள் பாடு சற்று திண்டாட்டமாக மாறியிருக்கிறது.  “மீட்டர் போட்டு ஓட்டினால் நாங்கள் தயக்கமின்றி ஆட்டோவில் ஏறுவோமே?” என்று பேச்சுக் கொடுத்தால் அதெல்லாம் கட்டுபடியாகாது சார் என்று ஒரே வரியில் நிராகரித்துவிடுவார்கள். பிற மாநில நகரங்களில் மீட்டர் போடும் பழக்கம் இருக்கிறது. ஆனால் தமிழக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மீட்டர் என்றால் காத தூரம்.

நடந்து செல்வோருக்காகவென தனி நடைபாதைகள் பொதுவாக இருக்காது. அப்படியே இருந்தாலும் அவை பாதசாரிகளுக்குப் பயன்பட மாட்டா. அந்தப் பாதைகளை அடைத்துக்கொண்டு கற்குவியல்கள், சிமெண்ட், மணல், ஜல்லிகள் அல்லது பலரகக் குப்பைகள் கிடக்கும். இடையே பள்ளங்கள் எங்கே இருக்கும் என்பதைக் கவனித்து நடக்கவில்லையெனில் கீழே விழவேண்டியதுதான். சாலையில் இடம் இருக்கும்போதே நடைபாதை மீது ஏறி வரும் இரு சக்கர வாகனங்கள் நீங்கள் எங்கே போனாலும் நாங்கள் உங்களை விட மாட்டோம் என்பதைச் சொல்லாமல் சொல்லும். இவை போக சாலையோர வியாபாரிகளின் பிழைப்பே நடைபாதைகளை நம்பித்தான் நடக்கிறது. இவர்கள் போக, துண்டை விரித்துவைத்துவிட்டு “இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்வது இல்லை” என்று பாடியபடி நம்மிடம் கையேந்தும் பாவப்பட்டவர்கள் ஒரு புறம் உட்கார்ந்திருப்பார்கள். நடைபாதையை விட்டு இறங்கினால்தான் நடக்க இடம் கிடைக்கும். அப்படி இறங்கினால் பின்னாலிருந்து வரும் வாகனங்கள் நம்மை நெருக்கமாக உரசியபடி கடந்து செல்லும்.

சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது பதட்டத்துடன் நிற்கும் ஓட்டுநர்கள் மஞ்சள் வண்ணம் தெரியத் தொடங்கியதுமே வாகனத்தைக் கிளப்புவார்கள். அப்படிக் கிளப்பாமல் பச்சை வண்ணம் வரும்வரை காத்திருப்போரை பின்னால் உள்ளவர்கள் விடாமல் ஹார்ன் அடித்து கலவரப்படுத்துவார்கள். அதைப் பொருட்படுத்தாது நிற்கும் ஓட்டுநர்களை, பின்னாலிருந்து ஓவர்டேக் செய்யும் ஓட்டுநர்கள் சில வசைச்சொற்களை அள்ளி வீசிவிட்டுக் கடப்பார்கள். எல்லோருமே ஒரு அவசரகதியில் எங்கோ ஓடிக் கொண்டே இருப்பதால் சில நொடிகள் நிற்பதற்குக்கூட  யாருக்கும் பொதுவாக பொறுமை இருப்பதில்லை.. அவசரத்தில் பஸ் எங்கே போகிறது என்பதைக் கவனிக்காமல் ஏறிவிட்டால், ஓட்டுநரின் வசைச்சொல்லைத் தாங்கும் இதயம் உங்களுக்கு வேண்டும். மாநகரப் பேருந்திலோ புறநகர் ரயிலிலோ ஏற, படியருகே நீங்கள் நின்றால் போதும்.. உங்களை மற்றவர்கள் உள்ளே ஏற்றிவிட்டு விடுவார்கள். அதே போல் இறங்கும்போது படியருகே நீங்கள் சும்மா நின்றாலே போதும். உங்களைக் கீழே இறக்கிவிட்டு விடுவார்கள்.

சாலையில் செல்லும்போது இடது பக்கம் உள்ள ஒரு தெருவில் திரும்ப முயற்சிப்பீர்கள். பின்னாலிருந்து வரும் ஒரு இருசக்கர வாகனம் உங்களை இடது பக்கம் வேகமாக முந்திச் சென்று இருக்கும் குறுகிய இடத்தில் உங்களைத் தாண்டிப் பறக்கும். நீங்கள் ஒரு வாகனத்தில் செல்லும்போது, முன்னால் செல்லும் வாகன ஓட்டுநர் சிக்னல் எதையும் காட்டாமல் சடாரென்று வலது பக்கம் திரும்புவார். நீங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேக் அடிக்கத் தெரிந்தவராக இருந்தீர்கள் என்றால் பிழைத்தீர்கள். காலையில் வீட்டைவிட்டுக் கிளம்புவோர் மாலையில் வீடு திரும்புவது நிச்சயம் இல்லை என்ற நிலையை இந்த சாலை பயங்கரவாதிகள் அன்றாடம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

Spread the love