September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சார்பட்டா பரம்பரை: புதிய நம்பிக்கை-புதிய தமிழ் சினிமா…

சோழ. நாகராஜன்


இந்திய – தமிழ் சினிமாவின் நெடும் பயணத்தில் எப்போதாவது ஒருமுறை அபூர்வத்திலும் அபூர்வமாக கதையாடல், கதை சொல்லல் ஆகியவற்றில் வியக்கவைக்கும் புதுமை பூத்துவிடும். அப்படியானதொரு அபூர்வ சினிமாதான் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இந்த சார்பட்டா பரம்பரை.
வெள்ளையர்களிடமிருந்து நமக்கு எத்தனையோ நல்லதும் கெட்டதுமான பழக்கவழக்கங்கள் ஒட்டிக்கொண்டுவிட்டன. அவர்கள் நம்மை விட்டுப் போய்விட்டபின்பும் அவர்களது மொழி, கலாச்சார மிச்சங்கள் தொடர்வதைப் போல சென்னையின் வடபகுதியில் வாழும் விளிம்புநிலை மக்கள் திரளினிடையே குத்துச்சண்டையும் சிலபல காலத்திற்கு ‘ரோஷத்தோடு’ ஒட்டிக்கொண்டு நீடித்தது.
வடசென்னையில் குத்துச்சண்டைக்குப் பெயர்பெற்ற இரண்டு அணிகள்தாம் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியப்ப பரம்பரை ஆகியன. இவை இரண்டும் குத்துச்சண்டையை ரோஷமானதாகவும் தன்மானத்தோடு இணைந்ததாகவும் உணருகிற குழுக்கள். அதிலுள்ள வீரர்களுக்கு வேலைக்குப் போவதோ, மனைவி, குழந்தை குட்டிகளைப் பேணிக் கவனிப்பதோ அத்தனை முக்கியமில்லை. சதா குத்துச்சண்டையில் வெல்ல வேண்டும் என்கிற குறிக்கோள் ஒன்று மட்டும்தான். அதில் ஏதாவது ஏடாகூடம் நடந்தால் அவ்வளவுதான்… அடிதடி, வெட்டுக் குத்து, பகைமை பாராட்டல்.
இப்படியானதொரு வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில்கூட தாயன்பு, திருமண உறவு, பிள்ளைப் பாசம் எல்லாம் இருக்கவே செய்யும் என்கிற தவிர்க்க இயலாத மனித சமுதாய இயல்புகளை யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிற இந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் நேர்த்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
1975-ம் ஆண்டில் நடப்பதான கதையில் எமர்ஜென்சி என்றழைக்கப்பட்ட அவசரநிலைக் காலம் பின்புலமாக இந்தப் படத்திற்கு ஒரு வரலாற்றுத் தன்மையை வழங்குகிறது. நாயகன் (ஆர்யா) கபிலனுடையது ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற வாழ்க்கை. தன் கணவனைக் குத்துச்சண்டையால் மரணத்தின் பிடியில் இழந்த கபிலனின் தாய் தன் மகன் கபிலனும் அதுபோல குத்துச்சண்டையால் உயிரை மாய்த்துக் கொண்டு விடக்கூடாதே என்று தவித்துத் துடிக்கிறபடியால் சண்டையை விட்டு விலகி நிற்பதுவும், மறுபக்கம், தான் பெரிதும் மதிக்கும் தனது குத்துச்சண்டை ஆசான் (பசுபதி) எதிர்த் தரப்பு நபர்களால் அவமானப்படுத்தப்படும் போதெல்லாம் தாயாரின் கண்டிப்பையெல்லாம் தூக்கி ஓரம் போட்டுவிட்டு, சண்டையில் இறங்குவதும் என்று ஆர்யாவின் நிலை பரிதாபத்துக்குரிய வகை.
ஒரு கல்யாணத்தைச் செய்துவைத்து கால்கட்டுப் போட்டுவிட்டால் எந்த ஆம்பளைக்கும் பொறுப்பு வந்துவிடும் என்று எண்ணும் சராசரி எண்ணத்தின்படி கபிலனுக்கு அவனது மாமன் மகளான முறைப்பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளோடு ஆட்டமாடி, பாட்டுப்பாடி, குடும்பம் நடத்தி, குழந்தை பெற்றுக்கொண்டாலும் தொடரும் அவனது சூழல் காரணமாக குத்துச்சண்டையின்மீதான நாட்டம் அவனை விட்டபாடில்லை. எப்பப் பார்த்தாலும் உனக்கு ‘பாக்சிங்’தான் முக்கியம் என்றால் என்னை ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டீங்க என்று நியாயமாகவே கொந்தளிக்கிறாள் கபிலனின் மனைவி மாரியம்மா. வெறும் ஆட்டம்தானே… தோற்றுப்போனால் என்ன? உங்க மானத்தை ஏன் பரம்பரையின்மேல ஏத்தி வைக்கிறீங்க?-என்று போகிறபோக்கில் அவள் கேட்கும் கேள்வி பொருள் பொதிந்தது. சாதீய சமுதாயத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்விதான் அது. அதைத் துறுத்தல் இல்லாமல், வெகு இயல்பாக போகிற போக்கில் கேட்கவைத்திருக்கிற நேர்த்தி ஒரு யதார்த்த சினிமாவின் இயல்பு கெடாமல் கருத்தைச் சொல்லும் பாங்கிற்கு அண்மைக்கால உதாரணமாக இந்தக் காட்சியைச் சொல்லலாம்.
விளையாட முடியாமல் போகிறபோது வெறுமையும் இயலாமையும் சூழ, நாயகன் குடிகாரனாக மாறும் அவலநிலையில் அவன்மீதே அவனுக்கு வரும் கோபம் நியாயமானது. எந்தவொரு விளையாட்டு வீரரும் கடக்க நேர்கிற அந்தமாதிரியான தருணத்தை இந்தத் திரைப்படம் சினிமாத்தனமில்லாமல் பதிவு செய்திருப்பதும் பாராட்டத்தக்கது. வயிற்றுப்பாட்டிற்காக மீன்பிடித் தொழிலில் இருக்கும் அந்த முதியவர் நாயகன் கபிலனுக்குத் தரும் கடும் பயிற்சி அவனுக்கு மறுவாழ்வைத் தருகிறது. எளிய மனிதர்கள் தங்களுக்குள்ள பிரச்சனைகளிலிருந்து நம்பிக்கையோடு எப்படி மீண்டெழுகிறார்கள் என்பதை இந்தக் காட்சிகளில் சொல்லியிருக்கும் விதமும் தமிழ் சினிமாவுக்குப் புதிதுதான்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஆங்கிலமும், அது விட்டுச்சென்ற சின்னச் சின்னப் பண்பாட்டுக் கலப்பின் தூவல்களும்கூட படத்தில் காட்சிகள் ஆக்கப்பட்டிருப்பது இயக்குநரின் கலை நுட்பத்தைச் சொல்பவையாக உள்ளன. கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் உழைப்பாளிகளாக மக்களோடு மக்களாகத் தங்களை அடையாளப்படுத்தி வாழ்ந்ததையும் இந்தப் படம் தன் கதைப்போக்கில் சொல்கிறது.
குத்துச்சண்டை எனும் ஒரு உலகப்புகழ்பெற்ற விளையாட்டில் தமிழகத்தின் எளிய உழைப்பாளி மக்கள் இத்தனை ஆர்வம் காட்டி ஈடுபட்ட வரலாற்றை அந்தக் காலப் பின்னணியோடு இந்த சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக்கியிருப்பது சிறப்பானதுதான். ஆனாலும், கதையில் எமர்ஜென்சி காலப் பின்னணி, இந்தப் படத்திற்கு திமுக-அதிமுக அரசியல் இயக்கங்களின் நியாயமான தேவை போன்றவை இன்னும்கூடக் கூடுதல் தெளிவோடு விளக்கப்பட்டிருக்கலாம். மிகவும் நீண்டுகொண்டே செல்லுகிற படத்தின் சம்பவக் குவியல்களும், படத்தின் உச்சகட்டக் காட்சிகளில் நாயகன் வெற்றிபெறுவானா மாட்டானா என்று பார்வையாளர்களை ஒரு அளவுக்குமேல் எதிர்பார்க்க வைத்துச் சோதித்துக்கொண்டே இருந்ததும் அயற்சியை வரவழைக்கவே செய்தன.
ஆர்யா, பசுபதி உள்ளிட்ட அத்தனை கலைஞர்களும் நடிப்பில் புதிய பரிணாமத்தையே காட்டியிருக்கிறார்கள். இத்தனை நூற்றுக்கணக்கான மனிதர்களைப் படம் முழுக்கக் காட்டிக்கொண்டே இருந்ததுகூட சலிப்படையச் செய்யவில்லை. முற்றிலும் புதிய கதையும் அதைச் சொல்லிய விதமும் படத்தின் தனித்துவச் சிறப்பு. இப்படியான நல்ல காரணங்களால் படத்தின் மேற்சொன்ன சிலபல குறைகளை மறந்து நம்மைப் படத்தோடு ஒன்றிடச் செய்துவிட்டார் இயக்குநர் பா.ரஞ்சித்.
அதனாலேயே இந்த சார்பட்டாவை இருகரம் கூப்பி, மனமொப்பி வரவேற்போம்!
(98425 93924 – [email protected])

Spread the love