September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

சக்கரவர்த்தித் திருமகள் – 75

சமூகக் கருத்துக்களைப் பேசிய
ஒரு ராஜா-ராணி கதை…

சோழ.நாகராஜன்
தமிழ் சினிமா புராணக் கதையாடல்களை, பக்தி ரசத்தைப் பரப்பிக் கொண்டிருந்த வேளையில்தான் மெல்ல மெல்ல சமூக உள்ளடக்கங்களை அது பேசத் தொடங்கியது. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட போதினில் ராஜா-ராணிக் கதைகளை வரலாற்றிலிருந்தும், மக்கள் செவிவழி வழக்காறுகளிலிருந்தும் எடுத்து இயம்பின. அப்படியானதொரு படம்தான் ‘சக்கரவர்த்தித் திருமகள்’.
ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான இந்தப் படம் அரசபரம்பரைக் கதையாடலைக் கொண்டிருந்தாலும் அது சமூகக் கருத்துக்களையும் கையாண்டது. 1950-கள் என்பது எம்.ஜி.ஆர். எனும் மாபெரும் மக்களின் கதாநாயகன் உருவாகி எழுந்துவந்துகொண்டிருந்த காலம். அந்நாளைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக இனநலம், மொழிநலம் போன்றவை உணர்வுபெற்று எழுச்சி கொண்டிருந்த காலம். அதனோடு பிற்போக்குத்தனமான மூடநம்பிக்கைகள், கடவுள் நம்பிக்கையின் பெயரால் கட்டி எழுப்பப்பட்டிருந்த சாதிய ஆதிக்கம், ஏற்றத்தாழ்வுகள் போன்றவையும் மிகக் கடுமையாகக் கேள்விக்குள்ளாகத் தொடங்கியிருந்த வேளை. அந்தப் பொழுதுகளில்தான் கலைகளின் வாயிலாகவும் இந்தக் கருத்துக்கள் முன்னெடுத்து வைக்கப்பட்டன. அந்தச் சமயத்து வெளியீடாக வந்ததுதான் இந்த ‘சக்கரவர்த்தித் திருமகள்’.
1957-ல் வெளிவந்த படம் இது. அந்த ஆண்டு மட்டும் இந்தப் படத்தையும் சேர்த்து எம்.ஜி.ஆர். நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகின. மகாதேவி, புதுமைப்பித்தன், ராஜராஜன் ஆகியவை மற்ற மூன்று படங்களாகும். சக்கரவர்த்தித் திருமகளை இயக்கிய ப.நீலகண்டன்தான் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக அவரை வைத்து 17 படங்களை இயக்கினார். அவற்றுள் பெரும்பாலான படங்கள் வசூலில் சாதனை படைத்தவையுமாகும்.
மறக்கப்பட்ட திரைக்கதையாசிரியர் பி.ஏ.குமாரின் கதைக்கு அந்நாளின் முதல் நட்சத்திர வசனகர்த்தா இளங்கோவன் வசனமெழுதினார். நாயகன் எம்.ஜி.ஆரின் இணையாக அஞ்சலிதேவி மற்றும் எஸ்.வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி, லட்சுமிபிரபா, மூத்த குணச்சித்திர நடிகர் இ.ஆர்.சகாதேவன் போன்றோரும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் இணை நகைச்சுவையில் சமூகக் கருத்துக்களை முன்வைத்துக் கலக்கினார்கள்.
அந்நாளைய முன்னோடி இசைமேதை ஜி.ராமநாதன் இசையமைத்த இந்தப் படத்தில் தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கே.டி.சந்தானம், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.ச.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தார்கள். அத்துடன் மகாகவி பாரதியின் பாடலொன்றும் இடம் பெற்றிருந்தது. காதலெனும் சோலையிலே ராதே ராதே.., ஆடவாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே.., மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது.., அத்தானும் நான்தானே… போன்ற பாடல்கள் பெரியளவில் ரசிகர்களைக் கவர்ந்தன.
கலைவாணருடன் சீர்காழி குரலில் எம்.ஜி.ஆர். பாடும் போட்டிப் பாடலான “சீர்மேவும் குருபதம்…” – எனத் தொடங்கும் பாடல் கருத்தாழம் மிக்க பகுத்தறிவு இசைத்து ரசிகர்களின் மனங்களை வென்றது. அதில், “கோவிலைக் கட்டிவைப்பது எதனாலே?”- என்ற கேள்விக்கு, “சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு, அதனாலே…” – என்று கோவிலின் முதன்மை நோக்கமான கடவுளைப் புறந்தள்ளிவிட்டு புதுமையான பதிலைத் தருவான் இளவரசனான நாயகன். “புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?”- எனும் கேள்விக்கோ தனது வர்க்கச் சார்பைக்கூட மறந்து, “பசித்து வாடும் மக்கள் வயிறு அது…” – எனப் பதிலுரைப்பான் அந்த இளவரசன். பட்டுக்கோட்டையார் வரிகளில் பகுத்தறிவை இந்தப்படியாகப் பேசி புதுமையான வியப்பையும் அதிர்வுகளையும் உண்டுபண்ணியது இந்தச் சக்கரவர்த்தித் திருமகள்.
அந்நாளைய தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதரின் நியூடோன் ஸ்டூடியோஸின் முதலீட்டாளர்களில் ஒருவரான ஆர்.எம்.ராமநாதன் செட்டியாரால் உமா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு ஜனவரி 18- ம் நாள் வெளிவந்த இந்தச் சக்கரவர்த்தித் திருமகளுக்கு இன்றைக்கு வயது 75. எம்.ஜி.ஆரின் சினிமா தடத்தின் படங்களில் இதுவும் ஒன்று என கருதப்படுகிறது.
சீர்காழி கோவிந்தராஜன், பி.லீலா, ஜிக்கி இணைந்து பாடும் ‘ஆடவாங்க அண்ணாத்தே’ பாடலுக்கு ராகினி, இ.வி.சரோஜா மற்றும் ஜி.சகுந்தலா ஆகியோர் ஆடும் நடனப் பாடல் காட்சி படத்தில் பேசப்பட்ட மற்றொரு அம்சமாகும். நடன இயக்குநர்கள் சோகன்லால், தங்கராஜ் ஆகியோர் இந்த நடனக் காட்சியை உருவாக்கியிருந்தார்கள். பிரபல லென்ஸ் கலைஞர் வி.ராமமூர்த்தி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அவருக்கு உதவியாளராகப் பணியாற்றிய கர்ணன்தான் பின்னாளில் பிரபலமான ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், இயக்குநர் ‘ஜம்பு’ கர்ணன்.
இந்தப் படத்தின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மோகன்தான் பின்னாளில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பில் திறம்படச் செயல்பட்ட சினிமா ஆளுமையான மோகன் காந்திராமன் ஆவார்.
மிகச்சிறந்த கதையமைப்பு, வசனம் மற்றும் பாடல்களால் சக்கரவர்த்தித் திருமகள் வசூலிலும் பெரும் வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆர். – அஞ்சலிதேவியின் கவித்துவமான காதல் காட்சிகளைக் கண்ட ரசிகர்கள் புருவமுயர்த்தினார்களாம். 75 ஆண்டுகளுக்கு முன்னமேயே முத்திரைகள் பல பதித்து, பவளவிழா காணும் இந்தச் சக்கரவர்த்தித் திருமகள் எம்.ஜி.ஆருக்கு பெயர் வாங்கித்தந்ததுடன் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படங்களில் ஒன்றாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது.
(98425 93924 – [email protected])

Spread the love