September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கோரிக்கைப் பட்டியல் (சென்ற இதழ் தொடர்ச்சி)


உமா


சுவடு இதழும், அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து சமர்ப்பித்துள்ள கோரிக்கைப் பட்டியல்:
பெறுவோர் :
முதலமைச்சர் அவர்கள்,
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் அனைத்து ஊடகங்கள்.
பொருள்: பள்ளிகள் திறக்கப்படாததால் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் இணைந்து நடத்திய கலந்துரையாடல்கள் வழி எழுந்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக.
கோரிக்கைகள்:
(1). ஒவ்வொரு ஊரிலும் நிலவும் நோய்த்தோற்றுப் பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு, பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரிடம் வெளிப்படையான முறையில் உரையாடல் நடத்தி, பள்ளிகளைத் திறப்பதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்…(2). பள்ளிகளைத் திறக்கும் சூழல் இருக்கும் இடங்களில் சுழற்சி முறையில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும் வாரத்தில் இரண்டு நாட்கள் வரவழைத்து கற்பித்தல் – கற்றல் செயலை நடைமுறைப்படுத்தலாம். அல்லது காலை, பிற்பகல் என ஷிப்ட் முறையில் மாணவர்களை வரவழைத்து பள்ளியுடனான அவர்களின் தொடர்பை வலுப்படுத்தலாம்…(3). சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்க முற்படும்போது, தொடக்கப் பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகள், உயர்நிலைப் பள்ளிகளில் 8, 10 ஆம் வகுப்புகள், மேல்நிலைப் பள்ளிகளில் 8, 10, 12ஆம் வகுப்புக் குழந்தைகளை முதலில் வரவழைத்து, பிறகு சிறிது சிறிதாக மற்ற வகுப்புகளையும் வரவழைக்கலாம்…(4). ஒரே வகுப்புக் குழந்தைகளை எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவையும் வாரத்தில் இரு நாட்கள் வரவழைத்து வகுப்பு நடத்தலாம். மேற்குறிப்பிட்ட வழிமுறைகளால் மாணவர்களிடையே சமூக இடைவெளியை முழுமையாகப் பின்பற்ற வைக்க இயலும்…(5). பள்ளிகளில் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். சாநிடைசர், முகக் கவசம், சோப்பு போன்றவற்றை இலவசமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் கருவி ஒவ்வொரு வகுப்புக்கும் இருக்க வேண்டும்…(6). மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் முழுமையான தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் தனிப்பட்ட முறையில் அரசே தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்…(7). பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பாடங்களை நோக்கித் திரும்பாமல், மாணவர்களை பள்ளிச் சூழலுக்குத் தயார் செய்ய அவர்களுடன் உரையாடல், விளையாட்டு, வாசிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைள் மூலம் அவர்களுக்கு பள்ளி மற்றும் கல்வியுடனான பிணைப்பை உருவாக்க வேண்டியது மிக அவசியம். மேலும் பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள் நியமனத்தை உறுதி செய்யவேண்டும்…( 8). பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லாத இடங்களில் ஆசிரியர்களை மாணவரின் இருப்பிடத்திற்கே சென்று கற்பித்தலில் ஈடுபட வைக்கலாம். ஆசிரியர்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களில் சில தெருக்களை அல்லது பகுதிகளைப் பிரித்துக்கொண்டு மாணவர்களுடன் நேரடி சந்திப்பில் ஈடுபடலாம்… (9). வீதி வகுப்பறைகள் அல்லது நுண் வகுப்பறைகளை அந்தந்தப் பகுதியில் உருவாக்கி மாணவர்களைக் கற்றலில் ஈடுபடுத்தலாம். இவ்வாறு நடத்தும்பொழுது வகுப்பு, வயது வாரியாக மொழிப் பாடம், கணக்கு சார்ந்த திறன்களை மட்டும்கூட அவர்களுக்குக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்…(10).பள்ளி அல்லது பொது நூலகங்களிலிருந்து புத்தகங்களை மாணவர்களுக்குக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுக்கலாம். மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் அனைத்தும் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையே குறைந்தபட்சத் தொடர்பை உருவாக்க மட்டுமே உதவும். பள்ளிகள் முழுமையாகச் செயல்படத் துவங்கும் வரை மாணவர்களிடம் முழுமையான கற்றல் செயல்பாடு நிகழாது என்பதால் இணையவழிக் கல்விச் செயல்பாட்டையும் சீர்திருத்தி நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
அது தொடர்பான கோரிக்கைகள்: (11). இணையவழிக் கல்வி அனைத்து மாணவர்களுக்கும் சமமாகச் சென்று சேர, அதற்கான கருவிகளையும் இணைய வசதிகளையும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசே முழுமையாக ஏற்படுத்தித் தரவேண்டும்… (12). ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்பே பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பெரிய திரை கொண்ட கருவி வழங்க வேண்டும். அந்தக் கருவிகளில் பாடங்கள் மற்றும் ஆசிரியர்களுடனான தொடர்பு தவிர்த்து மற்ற வகையில் மாணவர்கள் பயன்படுத்த முடியாதபடி கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்… (13). ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தடையற்ற இணைய வசதியை அரசே ஏற்பாடு செய்து தரவேண்டும்… (14). இணைய வழிக் கல்வியை பாதுகாப்பான முறையில் வழங்குவதை உறுதி செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்… (15). கல்வித் தொலைக்காட்சி வகுப்புகளை மேம்படுத்திட வேண்டும். மேலும் ஆன்லைன் கல்வி ரேடியோ முறையையும் கூடுதலாக அறிமுகப்படுத்தலாம். இணையவழிக் கல்வியில் இது பாதுகாப்பான முறையாக அமையும்… (16). பள்ளிகளில் இணையவழிக் கல்விக்காக உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்தி, தேவையான உபகரணங்கள் நிறைந்த பணியிடங்களை (றுடிசம ளவயவiடிளே) அமைத்துத்தர வேண்டும்… (17). கல்வி அதிகாரத்தைப் பரவலாக்கிட வேண்டும். நமது கல்விக் கட்டமைப்பில் மாவட்டங்கள், ஒன்றியங்கள் வாரியாக கல்வி அதிகாரிகள், அலுவலர்கள் இருப்பதால், அந்தந்தப் பகுதிக்கு ஏற்றபடி மேற்கூறிய வழிமுறைகளில் வாய்ப்பு உள்ளவற்றை நடைமுறைப்படுத்தலாம். ஊராட்சி ஒன்றிய அளவில் நமது பள்ளிகள் இருப்பதாலும் அந்தந்த வரம்புக்கு உட்பட்ட அதிகாரிகள், அவரவர் பகுதிப் பள்ளிகளுக்கான பொறுப்பு எடுத்துக்கொண்டு, மேற்கண்ட வழிமுறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி, மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும். அதற்கேற்ற வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும்… (18). வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கும் குழுவில், அதிகாரிகள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரும் இடம்பெறச் செய்ய வேண்டும்…(19). ஒவ்வொரு மாணவனும் கல்வி பெறுவதை உறுதிசெய்யும் நடைமுறைகளை அரசு மேற்கொள்வதுடன், இடைநிற்றல் நிகழாவண்ணம் தடுத்து மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்பச் செய்யும் நடவடிக்கைகளில் ஆசிரியர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். (20). நிதிநெருக்கடி மிகுந்த இந்தச் சூழலில் கல்வித் துறைக்குத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தரமான கல்வியே ஒரு சமூக வளர்ச்சிக்கான அடிப்படை என்பதால், அரசு மாணவர்கள் நலனில் தீவிர கவனம் செலுத்தி அனைத்து மாணவர்களுக்கும் உரிய கல்வி கிடைப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம், சுவடு பதிப்பகம் மற்றும்
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (m3) –
[email protected] – 99769 86098

Spread the love