September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கோயபல்ஸே வெட்கப்படக்கூடும்!

மதுக்கூர் இராமலிங்கம்


பிரதமர் மோடிக்கு நகைச்சுவை உணர்ச்சியே கிடையாது என்று யாரும் கூறிவிட முடியாது. அவர் முடிந்தளவிற்கு நகைச்சுவையாகப் பேச முயன்று கொண்டுதான் இருக்கிறார். மத்தியப் புலனாய்வுத்துறை மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய அவர், மோசடி செய்தவர்கள் உலகின் எந்த மூலைக்கும் சென்று ஓடி ஒளிந்துவிட முடியாது என்று பேசியதைப் படித்து வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றவர்கள் சிரித்து மகிழ்ந்திருப்பார்கள்.


அவர்களை இந்தியாவிற்கு அழைத்துவரப் போவதாக ஒவ்வொரு நாளும் செய்தி வெளியாவதில் குறை இருக்காது. ஆனால், அவர்களோ நாங்கள் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் எங்கள் கவுரத்திற்கேற்ற அறையோ, கழிவறையோ இருக்காது என்று மனுக்கள் போட்டு இங்கு வராமல் தப்பித்துக் கொண்டே இருக்க முடிகிறது. சட்டம் இவர்களைப் போன்ற களவாணிகளுக்கு அந்தளவு சாதகமாக இருக்கிறது.


தன்னுடைய அரசு சமையல் எரிவாயு முன்பதிவு முதல் வரித்தாக்கல் வரை அனைத்தையும் ஆன்-லைன் முறைக்கு மாற்றிவிட்டதால் ஊழலற்ற புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றும் பேசி வருகிறார் மோடி. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,000-த்தைத் தொட்டு நிற்கிறது. ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்று சொல்லி மானியத்தை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக ஒன்றிய அரசு முன்பு கூறியது. ஆன்-லைன் முறைக்கு மாறியதால் மானியம் காணாமல் போனதுதான் மிச்சம். மன்னர் மானியத்தை ஒழித்தது ஒரு காலம் என்றால் மண்ணெண்ணெய் மானியத்தை ஒழித்தது மோடியின் காலம்.


தம்முடைய அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழலை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டதாக கதை கட்டி வருகிறார் பிரதமர். சோற்றில் பூசணிக்காயை மறைக்க முடியுமா என்று கேட்பார்கள். ஏன் முடியாது? ரஃபேல் விமானத்தையே ஊழல் போர்வை போட்டு மூடியவர்களுக்கு பூசணிக்காய் எல்லாம் வெறும் சுண்டைக்காய்தான்.


மனித உரிமை தினத்தில் பேசுகிறபோது மனித உரிமைக்கே புதிய விளக்கம் தந்திருக்கிறார் பிரதமர். மனித உரிமை என்ற பெயரில் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை விட்டுவிட முடியாது என்று இவரும் இவருக்கு இணையாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வும் அனல் கக்கியிருக்கின்றனர். இவர்களது பெயரைக் கேட்டாலே மனித உரிமை அலறிக்கொண்டு ஓடும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஆள் தூக்கிச் சட்டங்களை ஏன் இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றமே இன்று வேதனைப்பட்டு கேள்வியெழுப்பியிருக்கிறது.


பீமா கோரேகான் வழக்கில் சமூக உரிமைப் போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை இல்லாமல் பிணை கூட கிடைக்காமல் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கணினியில் பொய்யான தரவுகளை உள்நுழைத்து வழக்கு ஜோடிக்கும் பெகாசஸ் வேலைகள் பிரமாதமாக நடந்து கொண்டிருக்கின்றன.


ஆட்சியிலுள்ள சீடகோடிகள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க குருபீடமான ஆர்எஸ்எஸ் அதன் பங்கிற்கு அன்றாடம் அருளுபதேசம் செய்து கொண்டிருக்கிறது. விஜயதசமி நாளில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த நாளில் விரிவான உரை நிகழ்த்துவது ஆர்எஸ்எஸ் வழக்கம். இந்தாண்டு விஜயதசமி நாளில் உரை நிகழ்த்திய மோகன் பகவத் மக்கள் தொகை ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்.


நாட்டில் பெரும்பான்மை இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாகவும் மறுபுறத்தில் மதச் சிறுபான்மையின மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது..இதனால் பெரும்பான்மை என்ற அந்தஸ்தை இந்துக்கள் இழந்துவிடும் ஆபத்து உள்ளது.. எனவே குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.. என்று அவர் பேசியிருக்கிறார்.


இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாகவோ சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவோ தரவுகள் இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறா இப்படியொரு புரளியை அவ்வப்போது கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது.
மறுபுறத்தில் மற்றொரு ஆர்எஸ்எஸ் தலைவரான தத்தாத்தரேயா ஹோசபலே ‘இந்தியாவில் ஒரே ஒரு மரபணுதான் உள்ளது. அந்த மரபணுவின் பெயர் இந்து. சிலர் நாங்கள் இந்துக்கள் அல்ல. இந்தியர்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது’ என்கிறார். பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு அனைவரையும், அனைத்து மரபணுக்களையும் பாதிக்கிறது. ஆனால் ‘ஒன்று இந்துவாக இரு. இல்லையேல் இரண்டாம்தர குடிமகனாகக்கூட இருக்கத் தகுதியில்லை’ என்று கோல்வால்கரின் குரலில் பேசி உண்மையான பிரச்சனைகளிலிருந்து நம் கவனத்தை இவர்கள் திசை திருப்புகின்றனர்.


ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் சுதீஷ் மின்னி மலையாளத்தில் எழுதி சதாசிவம் மொழி பெயர்த்துள்ள ‘நரகமாளிகை’ என்ற நூலைப் படித்துப் பார்க்கலாம். சுதீஷ் மின்னி கால் நூற்றாண்டு காலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றிவிட்டு பின்னர் அந்த அமைப்பைப் புரிந்துகொண்டு வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அக்குவேறு ஆணி வேறாக அந்தப் புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். நாக்பூர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் யோகாசனம் கற்றுக் கொண்டவராம் கௌதம் அதானி. அதானியால் ஒரு நாளைக்கு ரூ.1,002 கோடி எப்படி சம்பாதிக்கமுடிகிறது என்று கேட்டால் நாக்பூரில் அவர் கற்றுக்கொண்ட யோகாசனம்தான் காரணம். மற்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் இந்த வித்தை நன்கு தெரியும்.


இது ஒருபுறமிருக்க ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாத்மா காந்தியடிகள் சொல்லித்தான் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்று ஒரு குண்டைப் போட்டிருக்கிறார். இது எந்தளவிற்கு அப்பட்டமான பொய் என்பதை பல வரலாற்று அறிஞர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


சாவர்க்கர் பரப்பிய வெறுப்பு அரசியல்தான் கோட்சேயின் கைத் துப்பாக்கியாக மாறியது என்பது வரலாறு. ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் அதை மெய்யாக்கிவிட முடியுமென்பது ஹிட்லரின் அமைச்சரான கோயபல்ஸ் கடைப்பிடித்த உத்தி. ஆனால், கோயபல்சே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பொய்த் தொழிற்சாலையையே இங்கே இவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.


உண்மை ஒரு நாள் வெளியாகும்..அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்.. பொறுமை ஒரு நாள் புலியாகும்.. அதற்கு பொய்யும் புரட்டும் பலியாகும்- என்பது பட்டுக்கோட்டையாரின் பாட்டு.


(94422 02726 – [email protected])

Spread the love