September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கொரோனா காலச் சிந்தனைகள் ( தொடர்கின்றன)

முனைவர் ச.சீ. இராஜகோபாலன்
12-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறா என்ற அறிவிப்பு வியப்பிற்குரியதல்ல. மாற்று முடிவுகள் ஏதும் எடுக்க இயலாத நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வுகளே மாணவரது கற்றல் நிலையை அறியும் ஒரு கருவியாகக் கருதுகின்றனர். வகுப்புத் தேர்வுகளும் நடைபெறாது அடுத்த வகுப்பிற்கு மாணவர் செல்வது அவர்களுக்குப் பழக்கமில்லாத ஒன்று. தேர்வுகள் வடிகட்டும் கருவியாகவே செயல்பட்டு வந்துள்ளதுதான் காரணம்.
ஏறக்குறைய 16 மாதங்களுக்கு மேல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் கற்பித்தல் என்பது தனியார் பள்ளிகளில் நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் அவற்றின் பயன் அனைத்து மாணவர்க்கும் முழுமையாகச் சேர்ந்ததா என்பது வினாக்குறியே. ஸ்மார்ட் ஃபோன்கள், மடிக்கணினிகள் எல்லா மாணவர்களிடமும் இருப்பதில்லை என்று அறிகிறோம்.
தேர்வுகள் நடைபெறாததால் மதிப்பெண்கள் இல்லை. அனைவர்க்கும் அடுத்த வகுப்பிற்குக் கட்டாயத் தேர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்க்கும் பெற்றோர்க்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று கருதப்படுகின்றது. தேர்ச்சிப் பட்டியல் வெளியிட்ட பின் ஒரு தந்தை என்னிடம் வந்து என் மகனது தேர்ச்சியில் எனக்கு திருப்தி இல்லை. அதே வகுப்பில் மீண்டும் ஓராண்டு கற்பது மாணவர்க்கு நல்லது என்று கருதுகின்றேன் என்றார். கல்வி விதிகளில் இதற்கு இடம் இல்லை. இத்தகைய விருப்பத்தை எந்த பெற்றோரும் விரும்பமாட்டார் என்பதால் விதிகளை இயற்றியோர் இதைப் பற்றி சிந்திக்கவில்லை.
நான் இடைநிலைக் கல்வி வாரிய உறுப்பினராக இருந்த பொழுது குறைந்த மதிப்பெண் பெற்றவர் வாழ்நாள் குற்றவாளியாக நடத்தப்படுவது சரியல்ல. தேர்வின் பொழுது உடல்நலக் குறைவு, வீட்டில் பேரிழப்பு போன்ற காரணங்களால் ஒரு மாணவர் தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த இயலாது போகலாம். தேர்ச்சி பெற்றவரும் தம் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள மறு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தி மறு தேர்வுகளுக்கு வழி செய்யப்பட்டது. இதனால் பல மாணவரும் பயன்பெறுவது மகிழ்ச்சிக்குரியது.
எல்லா மாணவரும் ஒரு வகுப்பு மேலே சென்றுள்ளனர். அவர்களது அடைவுத் திறன் சோதிக்கப்படாதது, புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் இருக்கின்ற வகுப்பை விட ஓராண்டு பிற்பட்டுதான் இருப்பார்கள். எட்டாம் வகுப்பில் உள்ளவர் ஏழாம் வகுப்புப் பாடங்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை. மொழிப்பாடங்களைப் பொறுத்து பாதிப்பு அதிகம் இருக்காது. புதிய பாடத்திட்டம் உருவாக்கவோ, புதிய பாடநூல்களைத் தயாரிப்பதோ இயலாத நிலையில் இன்றைய பாடநூல்களைப் பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும். ஆனால் கணிதம், அறிவியல் பாடங்களில் குறைபாடு இருக்கும்.அக்குறைபாட்டினை வகுப்பு நடத்தும் பொழுது அறிந்து நீக்குவது அவசியம்.
நேரடி வகுப்புகள் நடைபெறாததால் மொழி பேசும் ஆற்றலை வளர்க்க வாய்ப்புகள் இல்லை. எழுத்துக்கும் சொல்லிற்கும் நேரடி உறவு ஆங்கிலத்தில் இல்லை. பெர்னார்ட் ஷா இதனைச் சுட்டி ஆங்கில மொழியைச் சீர்திருத்த வேண்டுமென்று வாதிட்டார். பிக்மேலியன் என்ற தனது நாடகத்தில் ஆங்கிலம் கற்கும் இடர்ப்பாடுகளை விவரித்திருப்பார். எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வினை எதிர் கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவரது உச்சரிப்பும், பேச்சும் பிழைபட்டதாக இருக்கும். குயவாநச என்ற சொல்லை கயவ hநச என்றும் அடிவாநச என்ற சொல்லை அடிவ hநச என்றும் உச்சரித்த மாணவரைக் கண்டுள்ளேன். பேச்சு தவிர்த்த ஆன்லைன் கற்றலில் இத்தகைய குறைபாடுகள் உள்ளதைச் செய்தித்தாள்கள் சுட்டிக் காட்டியுள்ளன. பாடங்களைக் கற்பிக்கும் பொழுது உச்சரிப்பையும் கவனித்துத் திருத்த வேண்டும்.
புதிய கல்வியாண்டு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி கல்வி இயக்ககமே பெரும் சவால்களைச் சந்திக்கும். ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு பிரச்சினைகளைச் சந்தித்திருப்பர். அதே போல ஆசிரியர்களும், பள்ளிகளும் புதிய சூழ்நிலையில் இயங்க வேண்டியுள்ளது. இது ஒரு புதிய அனுபவம். சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய தருணம். கடந்த சில ஆண்டுகளாக சென்னையிலிருந்தே ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு ஆசிரியர்கள் அவற்றைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக உள்மாவட்டப் பள்ளிகளின் நிலை அறிந்து அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களோடு உரையாடல் நடத்தி ஒரு முடிவுக்கு வருவதே சிறப்பானது.
(044-23620551 – [email protected])

Spread the love