September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கொரோனாவிற்குப் பிறகான கல்விச்சூழல் மாறியதா…?

உமா
ஒன்றரை வருடங்கள் கழித்து புதிதாக குழந்தைகள் பள்ளிச் சூழலுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் தமிழகம் முழுமைக்கும் இயல்பான கல்விச்சூழல் சிறிதுசிறிதாக மாறிவருகின்றது. அப்படியான சூழலில் கள எதார்த்தம் என்ன என்று ஆய்வு செய்வோம், வாருங்கள்.
ஆறு நாட்களும் பள்ளி வேலை நாள் அயர்ச்சியைத் தராதா?
கொரோனா தளர்வின்போது, பள்ளிகள் ஷிப்ட் முறையில் மாணவர்களை வரவழைத்த தருணத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகளில் குழந்தைகள் தினமும் வருகின்றனர். ஆனால் இன்னமும் 6 நாட்களும் வேலை நாட்களாகக் கடக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதலே 6 நாட்கள் வருகை புரிகின்றனர். .
கற்றல்-கற்பித்தல் என்பது மூளை உழைப்பு சார்ந்தது
ஆசிரியர்கள் சிந்திக்கவும் தங்கள் வகுப்பறைகளை மிக சுதந்திரமாகவும் வடிவமைக்க, திட்டமிட என நேரமும் சூழலும் தேவைப்படுகின்றன. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் வேறுபட்ட சமூகச் சூழல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடனான குடும்பப் பிரச்சனைகள், சாதியச் சூழல் எனப் பலவித சிக்கலான சூழல்களிலிருந்துதான் கல்வி கற்க வருகின்றனர். இவர்களை அணுகவும் அரவணைத்து கற்றலில் ஈடுபடுத்தவும் ஆசிரியர்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையில் சனிக்கிழமையும் பள்ளி வேலை நாள்தான். சனிக்கிழமை வரும்போது மாணவர் ஆசிரியர் இருவருமே தொய்வடைந்து விடுவதை கண்கூடாகப் பார்க்கலாம்
இணையதளப் பணியா, கற்பித்தல் பணியா? எது முக்கியம்?
கல்விக்கான இணையதளத்தை அரசு நிர்வகித்து வருகிறது. இதில் ஒவ்வொரு பள்ளிக்கும், ஆசிரியருக்கும், மாணவருக்கும் ஒரு எண் தரப்பட்டு மொத்த தமிழக மாணவர்களையும் டேட்டா பேஸ் விவரங்களாக அன்றாடம் அப்டேட் செய்வதே ஆசிரியர்களின் தலையாய பணி. அன்றாடம் வருகைப் பதிவேடு மட்டும் கட்டாயமாக 9.30-க்குள் மாணவர்களுக்கு குறிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது வருகைப் பதிவு அப்டேட்டுடன் மாணவர்களின் உடல் ஆரோக்கியம், எடை, உயரம், விபரக் கணக்கில், அன்றாடம் உணவு உண்பது விவரங்கள், பெண் குழந்தைகள் என்றால் மாதவிடாய் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கொடுத்து ஆசிரியர்களை இணைய வழியில் நிரப்பக் கூறுகின்றனர். ஆசிரியர்கள் தலைமைக்கும், அதிகாரிகளுக்கும் பதில் சொல்வதற்கு பயந்து பாடம் நடத்த வேண்டிய நேரங்களில் இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் அவலச் சூழல் நிலவுகிறது. எப்போதும் ஏதாவது பதிவேடுகளைப் பராமரிப்பதும், கூடுதல் கற்பித்தல் சாராத பணிகளைச் செய்வதும்தான் பிரதானமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. எந்த ஒரு பணிக்கும் சுற்றறிக்கையோ அரசின் தகவலோ நேரடியாக பள்ளிகளுக்கு வருவது கிடையாது. அனைத்தும் புலனக் குழுக்களில் முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தல் என்றோ பள்ளிக் கல்வி ஆணையரின் ஆணை என்றோதான் பகிரப்படும் புலனச் செய்தியாக வருகிறது.
இது மட்டுமன்று ஆசிரியர்களுக்கு ஆன் லைன் பயிற்சி, குழந்தைகளுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் தேர்வு என எப்போதும் பரபர என்று உயர் மன அழுத்தத்தில் வைத்திருக்கும் இடங்களாகப் பள்ளிகள் மாறியுள்ள சூழல். கொரோனா இடைநிற்றல் கற்றல் இடைவெளி நீக்கப் போகிறோம் என ஒரு பக்கம் அரசு, கல்வித்துறை செய்திகள் ஊடகங்கள் வழியே மக்களுக்கு அறிவித்து விட்டு மற்றொரு பக்கம் ஆசிரியர்களும் மாணவர்களும் பரஸ்பரம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்காத இச்சூழல்கள் மாணவர்களை எதிர்கால சமுதாயத்தின் நல்ல குடிமக்களாக எப்படி உருவாக்கும் என்பதே நமது கேள்வி.
6 லட்சம் புதிய மாணவர்களுக்கு அதே பழைய எண்ணிக்கையில் ஆசிரியர்களா …
கொரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தும், அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதியதாக ஆறு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளதை மிகப் பெருமையாக பேசும் அரசு, அந்த மாணவர்களுக்கு கற்பிக்க புதியதாக ஆசிரியர்கள் இருக்கின்றனரா என்று சிந்திக்க மறுக்கிறது. நாம் தொடர்ந்து வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமியுங்கள் என்று மன்றாடுகிறோம். ஆனால் பல ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் என்பதே இல்லை என்பதும் தற்போது வரை தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதும்தான் எதார்த்தம். இச்சூழல் ஆசிரியர்களுக்கு பெரும் நெருக்கடி தருகிறது. 50, 60 மாணவர்களை ஒரே வகுப்பறையில் வைத்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கவனித்துக் கொள்ள ஒரே ஆசிரியர் என மிகுந்த மன உளைச்சல்.. முரண்கள். அதே சமயம், குறைவான எண்ணிக்கையில் இருக்கும் மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணியாற்றும்படி உள்ள பள்ளிகளும் இருக்கின்றன. இதன் பின் ஆராய்ந்தால் சில சங்கங்கள், அரசியல் பின்புலம் என கிளைக் கதைகள் விரிகின்றன.
பட்ஜெட்டிலும் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம்
வரும் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கூட ஆசிரியர்கள் நியமனம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய அறிவிப்பு இல்லாததில் ஆசிரியர்கள் பெருமளவு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஊடக வழியே அறிவிப்புகள்-குழந்தைகளையும் ஆசிரியர்களையும் அழுத்துவது சரியா ?
கொரோனா காலம் என பள்ளி திறந்து ஆரம்ப மாதங்களில் பாடப் புத்தகத்தைக் கற்பிக்கத் தடை செய்தே சுற்றறிக்கைகள் வந்தன. ஒரு வகையில் மாணவர்களுக்கு அடிப்படை வாசிப்புத் திறன், எழுத்தறிவு, கணக்குத் திறன் இவை எதுவும் இல்லை என்பதால் அவற்றில் பயிற்சி தந்து வந்தனர். பிறகு பாடநூல்களைக் கற்பிக்கத் துவக்கினர். குழந்தைகளை மெதுவாகவே தயார்ப்படுத்த இயலும் சூழலில் திடீரென கல்வி அமைச்சர் “பொதுத் தேர்வு வருகிறது, அதற்குள் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைத்துப் பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டும்” என்று அறிவிப்பு செய்கிறார். திருப்புதல் தேர்வு ஒன்று மாநிலம் முழுவதும் அதிரடியாக பொதுத் தேர்வு போல நடத்தப்பட்டது. அதன் வழியாக சில இடங்களில் வினாத்தாள் கசிந்து பிரச்சனை உருவாகி அது வளர்ந்தது. அதேபோல கல்வித் துறை சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆசிரியர்கள் மீது பொத்தாம்பொதுவாக பல குற்றச்சாட்டுகளை வீசுகின்றனர். இவையெல்லாம் ஆசிரியர்களுக்கான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் என்றே கூட கூறலாம், பல கோணங்களிலிருந்து சீறிப் பாய்கின்றன அம்புகள் ஆசிரியர்கள் மீது .
அரசு மேற்சொன்ன பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். கல்வித் துறை அலுவலர்கள், தங்கள் பொறுப்புகளை உணர வேண்டும். தங்கள் அதிகாரப் பரப்புகளுக்கு உட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் உண்மையான களப் பிரச்சனைகளைக் கண்டறிந்து உயர் அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஒரே நோக்கமாக அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டால்தான் அரசுப் பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் சிறப்பாக நிகழும். மாணவர் ஆசிரியர்களுக்கான கற்றல்-கற்பித்தல் நேரம் மிகவும் முக்கியமானது என்பதை கல்வித் துறையின் அனைத்து தரப்பினரும் உணர வேண்டும் .
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (அ3) –
[email protected] – 99769 86098)

Spread the love