September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கைலி

செல்வகதிரவன்


தொழிற்சாலையில் பகல் வேலை முடிந்து ஐந்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தான் முத்து. வந்ததும் அவசர அவசரமாகக் குளித்தான். இன்று சங்கடஹர சதுர்த்தி. தெரு முனையில் இருக்கிற பிள்ளையார் கோயிலில் ஆறு மணிக்கு பூஜை ஆரம்பித்து விடும். இரவு எட்டு வரை பூஜை நடந்து அதன் பிறகு பிரசாதம் வழங்குவார்கள். தெருவாசிகள் பெரும்பாலோரை இன்று பிள்ளையார் கோயிலில் காணலாம். இந்த முத்து உள்ளூர் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்க்கிறான். இது போன்ற பூஜைகளுக்குப் போய் வருவதைத் தவற விடுவதில்லை. இந்தத் தடவை சங்கடஹர சதுர்த்தி எந்த தேதியில் வருகிறது என்பதை மாத ஆரம்பத்திலேயே குறித்து வைத்துக் கொண்டான்.


என்னங்க எங்க கௌம்பிட்டிங்க..?


என்ன கேள்வி கேக்கிற..?


எங்க போறீங்கன்னு கேட்டா என்ன கேள்வி கேக்குரேன்னு கேட்டா என்ன அர்த்தம்..?


நல்ல பொம்பள போ.. இன்னக்கி சங்கடஹர சதுர்த்தின்னு தெரியாதா..? கோயில்ல பூஜை ஆரம்பிச்சுருப்பாங்க. அதான் அவசரமாக் கௌம்பிக்கிட்டு இருக்கேன்..


நான் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குப் போறேன். அங்க இன்னக்கி வெளக்கு பூஜை நடக்கிது. அடுத்து வீட்டு அக்கா கூப்பிட்டாங்க. நீங்க வர்றதுக்குள்ள வந்திடுவேன்..


தெருவின் தொடக்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு வேக வேகமாய் விரைந்தான் முத்து. தெருவின் நடுப்பகுதியில் இடப்பக்கம் இருக்கும் வீட்டில் தண்ணீர் தொட்டி நிரம்பியதைக் கண்டுக்கிடாமல் இருந்திருக்கிறார்கள். ஆதனால் தண்ணீர் வெளியேறி தெருவில் ஓடி அங்குள்ள பள்ளங்களிலும் தண்ணீர் கிடந்தது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஓரமாக வந்தான் முத்து. எதிரே டுவீலரில் வந்த நபர் தெரியாமல் பள்ளத்தில் வண்டியை விட, வேகமாக வந்ததால் முத்துவின் மீது மண் கலந்த நீரடித்து வேட்டி சட்டை முழுதும் அசிங்கமாகி விட்டது. வண்டியில் வந்தவன் சிட்டாய் பறந்து விட்டான்.


இந்தக் கோலத்தில கோயிலுக்குப் போனா நல்லா இருக்காது. எல்லோரும் என்ன இப்பிடின்னு கேக்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கிட்டே இருக்கணும். சாமிய சரியாக் கும்பிட முடியாது.. அதனால வீட்டுக்குப் போயி வேற வேட்டி சட்டை மாத்திட்டு வந்திடலாம்..வீடு பூட்டப்பட்டிருந்தது. மாற்றுச் சாவி கைவசம் இல்லை. வெளிக் கொடியில் காலையில் துவைத்துக் காயப் போட்டிருந்த சட்டையும் கைலியும் கண்ணில் பட்டன. கைகால் கழுவி விட்டு அணிந்திருந்த ஆடையை அவிழ்த்துப் போட்டுவிட்டு கொடியில் கிடந்த உடையை அணிந்து கொண்டு புறப்பட்டான் முத்து. தொழிலதிபர் முருகானந்தத்தின் சொந்த இடத்தில் அவர் செலவில் கட்டப்பட்ட பிள்ளையார் கோயில் அது. காலையில் எழுந்து குளித்துவிட்டு கோயிலுக்குப் போகும் பழக்கம் உள்ளோருக்கு முருகானந்தத்தின் தாராள மனப்பான்மையால் இந்த ஆலயம் கிடைத்தது. பாரதிசத்யா இந்த ஆலயத்தின் அர்ச்சகர். மாத ஊதியத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். தினசரி இரு வேளைகள் பிள்ளையாருக்கு பூஜை செய்வதோடு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜையும் நடத்துவார். பேக்டரி ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிவதோடு பகுதிப் பணியாக இந்த அர்ச்சகர் பணியைச் செய்து வருகிறார். ஏதோ அவருக்குத் தெரிந்த பாணியில் பூஜை பண்ணுவது அவரது வழக்கம். அர்ச்சகருக்குரிய பந்தா இல்லாத மனிதாபிமானி. ஆதனால் தெருவில் வசிப்போருக்குப் பிடித்தவர்.
பூஜை ஆரம்பித்திருக்குமோ என்கிற பதட்டத்தில் கோயிலுக்கு வந்தான் முத்து. பூஜை நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல் பக்தகோடிகள் நிறைய பேர் வந்து பயபக்தியுடன் பிள்ளையாரைக் கும்பிட்டவாறு இருந்தனர். முத்துவும் கூப்பிய கரங்களோடு கும்பிடத் தொடங்கினான். முத்துவின் பக்கத்தில் தூய வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நடுத்தர வயதுக்காரர் நின்றிருந்தார். அந்தத் தெருவாசிதான். அவ்வப்போது அந்த பிள்ளையார் கோயிலில் அவரைப் பார்த்திருக்கிறான் முத்து. கண்களை மூடி சாமி கும்பிட்டார். சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்து முத்துவை முறைத்துப் பார்த்தார். பிறகு பேச ஆரம்பித்தார்.


ஏம்ப்பா கைலியக் கட்டிக்கிட்டு கோயிலுக்கு வரலாமா..?
வேட்டியிலதான் வந்தேன் சார்.. வர்றபோது ஒருத்தன் டுவீலர்ல வேகமாப் போனதில பள்ளத்தில கிடந்த சேறும் சகதியுமான தண்ணி பட்டு என்னோட டிரஸ்ஸ அழுக்காக்கிடுச்சு..
வீட்டுல வேற வேட்டி இல்லையா..?
வீட்டுக்கு உடை மாற்றப் போனதை.. மனைவி வீட்டைப் பூட்டிவிட்டு வெளக்கு பூஜைக்குப் போய்விட்டதை.. வெளிக் கொடியில் கிடந்த கைலியை எடுத்துக் கட்டி வந்ததை ஒன்றுவிடாமல் அந்த ஒயிட் காலர்வாசிக்குத் தெரிவித்தான் முத்து.
அப்ப நீ என்ன பண்ணி இருக்கணும்? கோயிலுக்குக் வந்திருக்க கூடாது..
இதனைக் கேட்டதும் முத்து உஷ்ணமானான்.
ஏன் வந்திருக்க கூடாது..?
கைலி கட்டிக்கிட்டு நம்ம கோயில்களுக்கு வரக்கூடாதுப்பா.. கைலி வேற மதக்காரங்களோட உடை தெரியுமில்ல..?
அப்பிடிப் பாத்தா, இங்க எத்தன பேரு பேண்ட் போட்டு நிக்கிறாங்க? பேண்ட் நம்ம மதத்துக்காரங்க உடையா? பேண்ட போட நாம வெள்ளக்காரங்களப் பாத்துத்தான் கத்துக்கிட்டோம். அவங்கல்லாம் கிறிஸ்துவ மதத்துக்காரங்கதானே?
அதிகப் பிரசங்கித்தனமா பேசக்கூடாது. மொதல்ல எடத்தக் காலி பண்ணு!
யாரு அதிகப் பிரசங்கித்தனமாப் பேசுறது.. நீங்களா.. நானா..? என்னயப் போகச் சொல்ல நீங்க யாரு..? அர்ச்சகர் சொல்லட்டும்.. போய்க்கிடுறேன்!
பூஜை தீபத்தட்டோடு வந்த அர்ச்சகர் பஞ்சாயத்து செய்தார். ‘அய்யா சுத்தமான உடையில கோயிலுக்கு வரணும்கறது சரிதான். ஆனா இந்தக் கலர் உடையில வரணும், அந்தக் கலர் உடையில வரக் கூடாதுன்னு கட்டுப்பாடு ஒண்ணும் கெடையாது. சாமி கும்பிட வந்த இடத்தில தேவை இல்லாத விவகாரம் வேண்டாம். அந்தப் பிள்ளையாரப்பனே இவரு இந்த உடையில வந்ததுக்காக கோவிச்சுக்கிட மாட்டாரு..’
விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்காமல் கோபமாக வெளியேறினார் அந்த மனிதர்.
குளத்தோட கோபிச்சுக்கிட்டு வாய் கொப்பளிக்காம போனா குளத்துக்கு நஷ்டமில்ல.. வாய்தான் நாறும்.. நிஜமான இந்து இப்படியெல்லாம் பேசமாட்டாரு.. இந்த மனுஷன் இந்து கிடையாது இந்துத்துவவாதி.. மதத்தின் பேர்ல பிளவ ஏற்படுத்துற இந்த மாதிரி ஆட்கள நாம புரிஞ்சுக்கணும்..
பாரதிசத்யாவின் வெளிப்படையான விளக்கங்களை அங்கிருந்தவர்கள் அனைவரும் வரவேற்கவே செய்தனர். பிரசாத விநியோகம் தொடர்ந்தது.

(99445 09530 – [email protected])

Spread the love