August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கையக் கட்டு.. வாயப் பொத்து..!

தேனி சுந்தர்,


வழக்கமாக மாநில, மாவட்ட, வட்டார அளவிலான பயிற்சிகளை அந்தந்த மட்டத்திலான அதிகாரிகள் வந்து தொடங்கி வைக்கிற சம்பிரதாயங்கள் எப்போதும் உண்டு.. அதில் பெரும்பாலும் வீணாவது.. பறிபோவது பங்கேற்பாளர்களின் இடைவேளை நேரம்தான்.!
தேனியில் நடந்த அப்படியான ஒரு பயிற்சியில், “பிரேக் பதினைந்து நிமிசம். டீச்சர்ஸ், சரியா 11.30-க்கு உள்ளே வந்து விட வேண்டும்” என்றார் அந்த மேற்பார்வையாளர்.
உடனே ஒரு ஆசிரியை கேட்டார், “சார், இப்பவே பத்து நிமிசம் போச்சுங்க சார்..!”
அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.? பயிற்சி ஒரு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.. அங்கு ஏற்கனவே கிட்டத்தட்ட 500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் இருப்பதே நான்கைந்து கழிப்பறைகள்தான்.. அதைத்தான் மாணவர்களும் பயிற்சிக்கு வந்துள்ள ஆசிரியர்களும் பயன்படுத்த வேண்டும்.. குறைவான கழிப்பறைகள், மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.. இந்த சிரமங்களை உணர்ந்து அவர் சொன்ன வார்த்தைகள் அவை.. ஆண்கள் கூட வெளியில், சாலை ஓரங்களில் போய் வர முடியும்.. பெண்கள் வேறு என்ன செய்ய முடியும்..?
ஆனால் அதற்கு அந்த மேற்பார்வையாளர் சொல்கிறார்.. “வாங்க டீச்சர்.. ஐயா விசிட் வந்திருக்காருல.. பத்து நிமிஷம் லேட்டாதான் வர முடியும்னு.. வந்து ஐயா கிட்ட சொல்லுங்க..!”
அடுத்து ஒரு அமர்வு, கொரானா கால பள்ளிகள் பாதிப்பு, கற்றல் அடைவுகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது.
அப்போது நம் நண்பர் ஒருவர் எழுந்து சொல்கிறார்.. “சார், நீங்க சொல்றது எல்லாம் சரி தான்.. ஆனால் ரெண்டு வருசம் பள்ளிக் கூடம் தெறக்கல.. பசங்க இப்ப தான் பள்ளிக்கே வந்துருக்காங்க.. பார்வையிட வர்ற அதிகாரிங்க.. வழக்கமான காலத்துல மாதிரியே கேள்வி கேட்டா பசங்க எப்டி சொல்வாங்க..? நெலமைக்கு தகுந்த மாதிரி கேட்டா தான நல்லாருக்கும்.. அத வச்சு ஆசிரியர்கள மிரட்டுறது சரியா இருக்குமா!?”
நம்ம மேற்பார்வையாளர் சொல்கிறார்.. “இன்னும் கொஞ்ச நேரத்தில நம்ம ஐயா வருவாங்க.. அவங்க கிட்ட சொல்லுங்க.. பசங்க ரெண்டு வருசம் பள்ளிக் கூடம் வரல.. அதுனால படிக்காமதான் இருப்பாங்கன்னு.. இப்ப என்னா சொன்னிங்களோ அத அப்படியே ஐயா கிட்ட சொல்லணும்..!”
பள்ளிய அமைப்பில் எவையெவை மேலிருந்து கீழாக கொண்டு செல்லப்படுகின்றன என்று பார்த்தால் அதில் முதலிடம் பெறுவது இந்த ‘வாயடைக்கும் வேலை’ தான்..!
இயக்குநர் ஏதாவது சொன்னால் இணை இயக்குநர்கள் சரின்னு கேட்டுக்க வேண்டும். இணை இயக்குநர்கள் சொன்னால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அமைதியாக கேட்டுக் கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என இந்த படிநிலை அப்படியே கீழ் இறங்கும்..
“அதிகாரிங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க.. ஏன்னா.. அவங்க அதிகாரிங்க..! வந்ததுக்கு ஏதாவது சொல்லணும்ல..! என்ன சொன்னாலும் சரிங்க சார்’னு சொல்லுங்க.. இல்லைன்னா பேசாம அமைதியா இருங்க.. அடுத்த முறை சரியா வச்சுக்கிறேன்னு சொல்லுங்க.. மறுத்து பேசாதீங்க.. விளக்கம் சொல்லாதீங்க..” – இதுதான் புதிய அல்லது கொஞ்சம் துடுக்கான ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு சீனியர்களின் பாலபாடம்..!
நாம் என்ன பெறுகிறோமோ.. அதைத்தானே கொடுக்க முடியும்..? வகுப்பறைகளில் அதுதான் நடக்கிறது. பாடநூல் சொல்லும் எதையும் கேள்வி கேட்காதே.. மறுத்துப் பேசாதே.. வகுப்பறையில் ஆசிரியர் சொல்வதை மட்டும் அமைதியாய் கேள்.. அதிகப்பிரசங்கித்தனம் செய்யாதே.. ஒழுக்கமான பிள்ளையாக இரு.. கையக் கட்டு.. வாயப் பொத்து..!
இதை குழந்தைகள் ஒரு பாட்டாவே பாடி தன் சக குழந்தைகள் மத்தியிலும் இனிமேல் பள்ளிக்கு படிக்க வர்ற குழந்தைகளுக்கும் கடத்துறாங்க தெரியுமா உங்களுக்கு..?
“ஒண்ணு.. ஓ வீட்டுப் பொண்ணு.. ரெண்டு ஆத்துல நண்டு..” இப்படியே போகும் அந்தப் பாடலை கடைசியாக, நம் நோக்கத்தை, பள்ளியின் எதிர்பார்ப்பை சொல்லி முடிக்கிறார்கள்.. “பத்து.. ஓ வாயப் பொத்து..!”
கேள்வி கேட்டாலே கலகம் செய்வதாய் சொல்கிறார்கள்.. கலகம் பிறந்தால் தானே வழி பிறக்கும்..!
(9047140584 – [email protected])

Spread the love