September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி – பதில்

சி.அ.முருகன், திருவண்ணாமலை.
எம்.பி.-யாக இருப்பவர் எம்.எல்.ஏ. பதவிக்கும், எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் எம்.பி. பதவிக்கும் போட்டியிடுவது நியாயமா?

அவருடைய தனிப்பட்ட விருப்பம் அல்லது கட்சியின் விருப்பம் அதுபோல் அமைந்தால் அதைத் தடுக்க முடியாதல்லவா..? அதே சமயம் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் ஒரு பதவியிலிருந்து விலக வேண்டியிருக்கும். மறுதேர்தல் நடத்தவேண்டியிருக்கும்.அது மக்கள் பணத்தை வீணாகச் செலவழிப்பதுதானே? அதனால் இம்மாதிரி நேரங்களில் அவரிடமிருந்து ஒரு கணிசமான தொகையை தேர்தல் கட்டணமாக வசூலிக்கலாம்.

பா.சுப்ரமணியன், திருநெல்வேலி
அண்மையில் சிரிப்பை வரவழைத்த செய்தி ஏதாவது உண்டா?

புதுச்சேரி முதல்வராகிறார் என்.ரங்கசாமி என்று தேர்தல் முடிவுகள் வெளியானபோது வந்த செய்தி. புதுச்சேரிக்கு யார் முதல்வர் ஆனா என்ன.. அதிகாரம் எல்லாம் தமிழிசை மேடம்கிட்ட இருக்கப் போவுது என்று நினைத்துக் கொண்டேன். புதுச்சேரி, புதுடில்லி போன்ற யூனியன் பிரதேசங்களுக்கெல்லாம் மக்கள் பணத்தை செலவழிச்சு தேர்தல்கள் நடத்தறதை மத்திய அரசு நிறுத்திட்டா என்ன என்றுகூடத் தோன்றுகிறது. யூனியன் பிரதேச முதல்வர்களுக்கு உரிய அதிகாரங்களைக் கொடுன்னு மத்திய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினை மீது கூடுதல் கவனம் செலுத்தலாமே?

மாலதி சுப்பிரமணியன், சென்னை-51
கொரோனா யுகம் தந்த படிப்பினைகளில் ஒன்று..?

நிறைய உண்டு. வீட்டைவிட்டு வெளியே சுற்றாமல் பயனுள்ள வழிகளில் பொழுதைச் செலவழிப்பது எப்படி எனக் கற்றுக் கொண்டோம். பல நண்பர்கள் உயிரிழந்தபோது மனதைத் தேற்றிக் கொள்வது எப்படி என்ற கடினமான பாடத்தை கொரோனா நமக்குச் சொல்லிக் கொடுத்தது. தம் உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சேவை ஆற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், குப்பைகளை அகற்றி நம்மைப் பாதுகாக்கும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரது தன்னிகரற்ற சேவையை மதிக்கக் கற்றுக் கொண்டோம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கொரோனாவின் பிடியிலிருந்தும் சங்பரிவாரத்தினரின் ஆட்சியிலிருந்தும் நாம் விடுதலை பெறுவது எப்போது என்ற எண்ணமும் அவ்வப்போது ஓடிக் கொண்டிருந்தது!

எஸ்.விஸ்வநாதன், மதுரை-10
இந்தியாவில் சாதி வெறி இருப்பதுபோல மேலை நாடுகளில் வெள்ளை இனவெறி இருந்திருக்கிறதே..?

ஆம். 20-ம் நூற்றாண்டில் வெள்ளை இனவெறியை எதிர்த்துப் போராடிய ரோஸா பார்க்ஸ் பற்றி ஏப்ரல் 28 தமிழ் இந்து மாயா பஜார் இணைப்பில் மருதன் எழுதியிருந்தார். வெள்ளையர் உள்ளே வந்தால் பேருந்தில் உட்கார்ந்திருக்கும் கருப்பினத்தவர் எழுந்திருக்க வேண்டும். மற்ற பெண்கள் எழுந்துவிட்டார்கள். ரோஸா பார்க்ஸ் எழுந்திருக்கவில்லை. அந்தக் கட்டுரையை மருதன் இப்படி முடித்திருந்தார் : “நான் என்ன செய்தேன் என்பது முக்கியமல்ல. என்ன செய்யவில்லை என்பது முக்கியம். நான் கடைசிவரை எழுந்திருக்கவில்லை.”

ஹரிணி, மேற்கு தாம்பரம்
மருத்துவமனைப் படுக்கைகளுக்கும் ஆக்சிஜனுக்கும் இப்படி அல்லாடும்படி ஆகிவிட்டதே..?

ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ஆங்கில இந்துவின் இணைப்பில் ஜி. சம்பத் நையாண்டிக் கட்டுரைகள் எழுதுவார். “காற்றில் ஆக்சிஜன் இருக்கிறது. அதை உங்களுக்கு வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து, ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்று மோடியைக் குற்றம் சொல்லாதீர்கள். அவர் ஆச்சிஜன் தருவதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் எங்கேயுமே வாக்குறுதி கொடுக்கவில்லையே..” என்று மே 9 அன்று வெளியான இணைப்பில் கிண்டல் செய்கிறார் சம்பத்!

எஸ்.தினேஷ், காட்பாடி
தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு தேறியிருக்கிறதே.. ஆச்சரியமாக இல்லை?

கொரோனா பிரச்சினையால் மக்கள் அவதிப்படுவதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் உச்சசீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. ராமர் கோவில் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, சிஏஏ, விவசாயிகள் போராட்டம் போல, இதையும் வேடிக்கை பார்த்துவிட்டுப் போய் விடலாம் என்று உச்சநீதிமன்றம் நினைக்காதது ஆச்சரியம்தான். மத்திய அரசுக்குக் கோபம் வந்துவிட்டது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று அதற்குப் பதில் சொல்லியிருக்கிறது மத்திய அரசு!

Spread the love