June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி-பதில்

மாணவர்கள் அகல்யா, மாரிஸ்வரி, கிஷோர் கண்ணன், யோகிதா
அருப்புக்கோட்டை வாசகர் வட்டம்
1) பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது எவ்வாறு?
ஓராண்டுக்கு மேல் நடந்த விவசாயிகள் போராட்டம், அவர்கள் நடத்திய பிரச்சாரம் பிஜேபிக்கு எதிராக அமைந்தது. காங்கிரசின் உட்கட்சிப் பூசல்கள் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுத்தன. புதுடெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி ஒன்றிய அரசுக்கெதிராக எடுத்த நிலைபாடுகள், கல்வி-சுகாதாரம் போன்ற மக்கள் நலப் பணிகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் சேர்ந்து அக்கட்சிக்கு ஆதரவைத் தேடித் தந்தன. அக்கட்சி காங்கிரசுக்கு மாற்றாக தன்னை நிறுத்திய முயற்சி பஞ்சாபில் பலன் அளித்தது. ஆனால் அதே சமயம், நாடு முழுவதிலும் காங்கிரசுக்கு மாற்றாக தன்னை நிறுத்திக் கொள்ளும் ஆம் ஆத்மியின் முயற்சிகள் 2024 தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக முடியும் என்பதை அந்தக் கட்சி உணர்ந்தால் நல்லது.
2) உக்ரைன் ரஷ்ய போர் நீடித்துக்கொண்டே போகிறதே?
ரஷ்யா நினைத்தபடி உக்ரைனை எளிதாகத் தோற்கடித்துவிட முடியவில்லை. காரணம், உக்ரைன்- ரஷ்ய போர் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போர் அல்ல. அதை ஒரு மூன்றாவது உலகப் போர் என்று கூட சொல்லலாம். உக்ரைனுக்குப் பின்னணியில் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் உள்ளன. அவை இந்தப் போரில் ரஷ்யா தோற்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுவரை நேட்டோவிலிருந்து விலகியிருந்த ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய இரு நாடுகளும் நேட்டோவில் இணைய முன்வந்துள்ளன. நிலவரம் சிக்கலாக இருப்பதால் போர் எப்போது முடியும் என்று தற்போது சொல்ல முடியவில்லை.
சி.அ.முருகன், திருவண்ணாமலை.
1)இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராய் நடைபெற்றுவரும் நிகழ்வுகள்…எழுச்சியா? வன்முறையா? 2) உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாய் மீள இலங்கைக்கு என்ன வழி?
1) நிச்சயமாக மக்கள் எழுச்சிதான். இன, மொழி, மத வேறுபாடுகளைப் பயன்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்தி எதேச்சதிகார ஆட்சி நடத்தி வந்த ராஜபட்சேக்கள் ஆட்சிக்கெதிராக மக்கள் திரண்டெழுந்துள்ளனர். மகிந்த ராஜபட்சே பதவி விலக நேர்ந்தது. அது மட்டுமல்ல, மக்களின் ஆவேசத்திலிருந்து தப்பிக்க ஹெலிகாப்டரில் குடும்பத்தோடு தப்பி ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர் தங்கியிருக்கிறார். எதிர்க் கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். மேலும் சிலரை அமைச்சரவையில் சேர்த்து மக்களை அமைதிப்படுத்த கோத்தபய ராஜபட்சே முயன்று வருகிறார். இது எந்தளவு பலன் அளிக்கும் என்று கூறமுடியவில்லை,
2) சுற்றுலா வருமானத்தையே இலங்கை சார்ந்திருந்தது. கொரோனா ஊரடங்கால் சுற்றுலா வருமானம் வீழ்ந்தது. உணவுப் பொருட்கள், எரிபொருள், சமையல் வாயு, மருந்துகள் ஆகியவற்றுக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்த இலங்கை, உணவுப் பொருள் உற்பத்தியை மட்டுமாவது உயர்த்தியிருக்க முடியும். அதில் தவறியதால் கடும் உணவுப் பஞ்சத்தில் நாடு சிக்கியிருக்கிறது. உற்பத்திப் பொருளாதாரமாக இலங்கையை வளர்க்காமல் சர்வதேசக் கடன்களை நம்பியே ராஜபட்சேக்கள் ஆட்சி நடத்தினர். சொத்து சேர்த்தனர். ஆடம்பரமாக வாழ்ந்தனர். விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்தது. நாடு திவால் என்று தற்போது அறிவித்துள்ளது. பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தி ஜனநாயக ஆட்சி நடத்தி படிப்படியாக மீள முயற்சிப்பதுதான் இலங்கை முன் உள்ள ஒரே வழி.
3) தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவரும், நிதியமைச்சரின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளுக்கு, நிதியமைச்சர் மட்டுமே காரணமா?
அதிமுக அரசு கடன் சுமையை விட்டுச் சென்றிருக்கிறது.. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி நிலுவைகளைக் கொடுப்பதில்லை… பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகளைத் தாறுமாறாக உயர்த்தி நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்து வருகிறது.. என்பதெல்லாம் உண்மை. ஆனால் தேர்தல் முடிந்து ஒரு வருடம் கழித்து அதையெல்லாம் சொல்லி நிதியமைச்சர் தப்பிக்க முயல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் படிப்படியாக நிறைவேற்ற முதல்வர் முயற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.
வி.சேகர், ஆரணி
உலகமே வியந்து பாராட்டுவதாக மோடி சொல்வது உண்மையா..?
‘கடந்த எட்டு ஆண்டுகளாக நான் பிரதமர் ஆக நம் தேசத்திற்குச் செய்துள்ள சேவைகளைப் பார்த்து உலகமே வியந்து பாராட்டுகிறது’ என்று அவர் தம்பட்டம் அடிப்பதைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த மன் கி பாத், தமிழ்-திருக்குறள் மீது பற்று போன்ற நாடகங்களைப் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை…

Spread the love