September 28, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி-பதில்

சி.அ.முருகன், திருவண்ணாமலை
1)ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்து பற்றி…?
அட்டைப்படக் கட்டுரையில் மதுக்கூர் இராமலிங்கம் உங்கள் கேள்விக்கு விரிவான பதிலைச் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இந்தித் திணிப்பு பரவலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை அமித் ஷா இன்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.. அவ்வளவுதான்! 1937-லேயே தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. 1965-களில் தமிழ்நாட்டில் மிகப் பலமான இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கிச் சூடு வரை அப்போராட்டம் சென்றது. அப்போராட்டத்தை ஆதரித்த திமுக பின்னர் 1967-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அன்று இழந்த ஆட்சியை இன்று வரை காங்கிரஸ் கட்சியால் பிடிக்க முடியவில்லை. தமிழகம் ஆங்கிலம், தமிழ் என்ற இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது. தமிழகம், கேரளம் மட்டுமல்ல கர்நாடகம், வடகிழக்கு மாநிலங்களில் கூட இன்று இந்தி எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன. இந்தியாவில் 69 கோடி பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள். அவர்கள் அனைவர் மீதும் இந்தியைத் திணிக்கும் அமித் ஷாவின் முயற்சியை நம்மால் எப்படி ஏற்க முடியும்?
2) இளையராஜாவின் அம்பேத்கர்-மோடி ஒப்பீடு பற்றி…?
அம்பேத்கர் சாதியக் கொடுமைகள் இல்லாத, சமூகநீதி நிலைநாட்டப்பட்ட நாட்டை நிறுவப் பாடுபட்டவர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். மனுநீதி அடிப்படையில் சனாதன தேசத்தை அமைக்கக் கனவு கொண்டிருக்கும் அமைப்பு. மோடி அதன் வழியே அடி பிசகாமல் நடப்பவர். இசையில் கொடிகட்டிப் பறப்பவர் இளையராஜா என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அம்பேத்கரை மோடியோடு ஒப்பிட்டு தன் பெயரை இளையராஜா கெடுத்துக் கொண்டுவிட்டார் என்பது என் கருத்து.
மாணவர்கள் அகல்யா, மாரிஸ்வரி, கிஷோர் கண்ணன், யோகிதா
அருப்புக்கோட்டை வாசகர் வட்டம்
1) கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்காளத்தில் இப்பொழுது அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. காரணம்..?
மம்தா பானர்ஜியும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து செய்த அவதூறுப் பிரச்சாரங்களையும் படுகொலைகளையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சுயபரிசீலனை செய்து கொண்டு அமைப்பு ரீதியாகப் பலம் பெற அக்கட்சி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த முயற்சியில் இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துவோம்.
2) பிளவுவாதஅரசியல் நடத்தி எதிர்க்கட்சிகளுக்கு பணம் கொடுத்து அல்லது பயமுறுத்தி அவர்களது ஆதரவைப் பெற்று, ஓட்டு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்து பாஜக ஜெயிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டபிறகும் எதிர்க்கட்சிகள் இன்னும் ஒன்றுபடவில்லையே.. இதற்கு என்ன காரணம்?
மதச்சார்பின்மை அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று திமுவுடன் இணைந்துள்ள முற்போக்கு அணி விரும்புகிறது. கேரளத்தை ஆண்டுவரும் இடதுசாரி அணியும் அதையே விரும்புகிறது. ஆனால் பாஜகவை எதிர்க்கும் அர்விந்த் கேஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி போன்ற பலர் அதற்குத் தயாராக இல்லை. அரசியலில் ஆட்சி என்பது அதிகாரத்தைப் பிடிக்கும் ஆட்டம். இதில் தாங்கள் மட்டுமே அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற தன்முனைப்பு பலரிடம் அதிகமாகவே இருக்கிறது. அதையெல்லாம் கைவிட்டு, பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் நாம் விரும்பும் மாற்றம் நிச்சயம் கைகூடும். பார்க்கலாம்.
வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று தேர்தல் கமிஷன் மறுக்கிறது. இது பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.
எஸ்.விஸ்வநாதன், மதுரை-10
சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் சில முக்கியமான பிரிவுகளை நீக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். எவை என்று சொல்ல முடியுமா?
ஆப்பிரிக்க, ஆசியாவில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி, வகுப்புவாதம் மற்றும் மதச்சார்பற்ற அரசு, ஜனநாயகம், பன்முகத்தன்மை போன்ற ஆர்.எஸ்.எஸ். தத்துவத்திற்கு எதிரான பல்வேறு பிரிவுகள் நீக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பாஜகவினர் களத்தில் சொல்லிக் கொண்டிருந்த விஷயங்கள்தான். அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

Spread the love