September 28, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி-பதில்

மாணவர்கள் அகல்யா, மாரிஸ்வரி, கிஷோர் கண்ணன், யோகிதா
அருப்புக்கோட்டை வாசகர் வட்டம்
சதாம் உசேன் இராக்கில் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்று கூறி லட்சக்ணக்கான குழந்தைகளைக் கொன்று சதாம் உசேனைத் தூக்கிலிட்டது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை மலரச் செய்வேன் என்று கூறி தாலிபான்களை தூண்டி விட்ட அமெரிக்கா பின்னர் ஆப்கன் மக்களைக் கைவிட்டு ஓட்டம் பிடித்தது. இதேபோல் சிரியா, லிபியா, வியட்நாம், கியூபா, வெனிசுலா, பொலிவியா போன்ற பல நாடுகளில் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கா பற்றி ஊடகங்கள் பெரிதாகப் பேசவில்லை. ஆனால் நேட்டோவோடு சேர்ந்து ரஷ்யாவிற்கு துரோகம் செய்ய நினைத்த உக்ரைனைக் கண்டிக்காமல் ரஷ்யா குண்டுமழை பொழிகிறது என்று கூறுவது ஊடக தர்மமா?
இந்த மாத இதழின் தலையங்கமே உக்ரேன்-ரஷ்யா போர் பற்றித்தான் பேசுகிறது. நீங்கள் சொல்வது போல அமெரிக்கா செய்த ஆக்கிரமிப்புகள் பற்றி ஊடகங்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் அவை எல்லாம் அமெரிக்க வல்லரசுக்கு ஆதரவான வலதுசாரி ஊடகங்கள். அதே சமயம் ரஷ்யா செய்வதையும் நாம் நியாயப்படுத்திட முடியாது. தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க முயல்வதே ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் கடமை.
சி.அ.முருகன், திருவண்ணாமலை
1) நாட்டில் நடக்கும் இவ்வளவு சம்பவங்களுக்குப் பிறகும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது பற்றி…?
2) பா.ஜ.க.வின் வெற்றிக்குக் காரணம் காங்கிரசா? அல்லது இதர எதிர்க்கட்சிகளா?
3) எதிர்வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசும், இதர எதிர்க்கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை என்ன?
மூன்று கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்லி விடுகிறேன். இந்த மாத அட்டைப்படக் கட்டுரையில் ஐந்து மாநிலத் தேர்தல்கள் பற்றித்தான் மதுக்கூர் இராமலிங்கம் எழுதியிருக்கிறார். நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, புலம் பெயர் தொழிலாளர்கள் பட்ட துயரம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி தாக்குதல், குடியுரிமைச் சட்டம், பெகாசஸ் உளவு பார்த்தது, முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள், போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றது, மாநில உரிமைகள் பறிப்பு, அமலாக்கப் பிரிவு-சிபிஐ துணையுடன் கருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் .. என எண்ணற்ற கொடுமைகள் பாஜக ஆட்சியில் நடந்தன. ஆனாலும் அவற்றையெல்லாம் சாதிமதப் பிரச்சனைகள், ராமர் கோவில் அரசியல் போன்ற திசைதிருப்பும் வேலைகள், பணபலம் ஆகியவற்றின் மூலம் பாஜகவால் நான்கு மாநிலங்களில் வெற்றிபெற முடிந்திருக்கிறது.
ஒரு நாளைக்கு மோடி இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார் என மகாராஷ்ட்ரா பாஜக தலைவர் வருத்தப்பட்டிருக்கிறார். எனக்கும் அவர் எட்டு மணி நேரம் தூங்கக் கூடாதா, அப்படித் தூங்கினால் நாம் அந்தளவுக்கு நிம்மதியாக இருக்கலாமே என்ற ஏக்கம் மேலிடுகிறது.
இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற வேகம் இல்லை. யார் பெரியவர் என்று தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கிறார்கள். 2024-க்குள் எதிர்க்கட்சிகள் தங்களைத் திருத்திக் கொள்ளவில்லையெனில் பலியாகப் போவதென்னவோ நாம்தான்.
இராச. செயராமன், பெல்காவி
சித்ரா ராமகிருஷ்ணன் அப்படின்னு சினிமா நடிகை கெட்டப்பில் ஒருவர் 5 லட்சம் கோடி அளவில் ஊழல் செய்து 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட பிறகும், அனைத்து ஊடகங்களும் காக்கும் அமைதி பற்றி என்ன நினைக்கிறீங்க?
நீங்கள் கேட்பது சரியான கேள்வி. சித்ரா ராமகிருஷ்ணன் இந்திய தேசிய பங்குச் சந்தையின் முதல் பெண் நிர்வாக இயக்குனர். அடையாளம் தெரியாத ஒரு மர்ம யோகியுடன் சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்ந்து ஆலோசித்து வந்தது, அதன்படி ஆனந்த் சுப்பிரமணியன் என்கிற ஒரு நபரை கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து நியமித்துக் கொண்டது.. போன்ற பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அப்படியே அமுங்கியும் போயின. பாஜக மேலிடத்திற்கு மிகவும் வேண்டியவர் என்று சொன்னால் ஊடகங்கள் காக்கும் அமைதி புரிந்துவிடும். விஜய் மல்லையா, முகுல் சோக்ஸி, நிரவ் மோடி போன்ற பலர் வெளிநாட்டுக்குத் தப்பியோடியது போல சித்ரா ராமகிருஷ்ணனும் ஒரு நாள் காணாமல் போவார், மக்கள் இதையெல்லாம் மறந்து போவார்கள். நீங்கள் விதிவிலக்கானவர் என்று புரிகிறது!

Spread the love