September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி-பதில்

மாணவர்கள் அகல்யா, முகிலன், கிஷோர், யோகிதா
அருப்புக்கோட்டை வாசகர் வட்டம்
1) நாட்டில் பூஜைகளும் கோவில்களை நோக்கிய பாதயாத்திரைகளும் கும்பாபிஷேகங்களும் பல மடங்கு பெருகிவிட்டன. மக்கள் காவடி எடுக்கிறார்கள். இப்படி ஒருபுறம் பக்தி பல மடங்கு பெருகி உள்ளது. மறுபுறம் தவறுகள், குற்றங்கள் கூடி வருவதையும் செய்தித்தாள்களிலும் டிவியிலும் பார்க்கிறோம். பக்தி பெருகினால் பயம் ஏற்பட்டு தவறுகள் குறையவேண்டும் அல்லவா? நாட்டு நடப்பு நேர்மாறாக உள்ளதை ஆசிரியர் விளக்கவேண்டும்.
அருமையான கேள்வி. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் பெரும் பகுதியினர்-அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும்- கோவில், சர்ச், மசூதிக்குப் போய் கடவுளிடம் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்று ஆழமாக யோசித்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். தங்களுக்கு வீடு, நகை, கார் போன்ற சொத்துகள் பெருக வேண்டும் என்று கும்பிடுகிறார்கள். குற்றவாளிகளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தாங்கள் அளிக்கும் காணிக்கையை கடவுளுக்குரிய பங்காகக் கருதி, கடவுள் தங்களை மன்னித்து விடுவார் என்று நம்புகிறார்கள். கடவுள் தங்களுக்கு அருள் புரிவார் என்று நம்புகிறார்கள். மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது குற்றம் என்ற உணர்வுக்குப் பதில் அதுதான் பக்தி என்று இந்துக்களில் ஒரு பகுதியினர் நம்பியதால் விளைந்த கேட்டினை நாம் அறிவோம். சுயநலன்தான் பக்திமான்களை ஏதோ ஒருவிதத்தில் இயக்குகிறது. இதில் விதிவிலக்காக சிலர் இருக்கலாம். பொதுவான நிலவரத்தை எடுத்துக் கூறியுள்ளேன். கடவுளுக்குப் பதிலாக மனிதத்தை நம்புபவர்கள் பெருகினால் குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படும்.
2) இந்தியாவில் வாக்கு இயந்திரங்கள் இல்லாமல் நடத்தப்பட்ட உள்ளாட்சி, நகராட்சி, தேர்தல்களிலெல்லாம் பா.ஜா.க படு தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்த வேண்டுமென்று எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து குரல் எழுப்பி போராடாமல் இருப்பதன் காரணத்தை விளக்குங்கள்.
ஏற்கனவே இந்தியத் தேர்தல்களில் பணபலம், சாதிமதப் பிரிவினைகள் எல்லாம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய இந்திய அரசின் நிறுவனங்களில் கடும் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யமுடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்று எதிர்க்கட்சிகள் கருதினால் ஓர் ஆய்வுக்குழு அமைத்து தரவுகளைச் சேகரித்து இதைப் பற்றி ஒரு முழுமையான ஆய்வினைச் செய்யலாம். வரப்போகும் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு விவாதிப்போம்.
சி.அ.முருகன், திருவண்ணாமலை.
ஹிஜாப் சர்ச்சை எதேச்சையாக எழுந்ததா? தேர்தலுக்காக திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா?
அந்தப் பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொhண்டு பள்ளிக்கு வருவது புதிதல்ல. பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதுதான். திடீரென்றுதான் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்ற புதிய விதியைக் கொணர்ந்தார்கள். கிடைத்த அந்தப் பிரச்சினையை பாஜகவினர் விடுவார்களா? ஊதிப் பெரிதாக்கி, தேசப் பிரச்சினையாக மாற்றி தங்கள் தேர்தல் வெற்றிக்குப் பயன்படுமா என்று சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். வாக்காளர்கள் ஏமாந்தார்களா, இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
கிறிஸ்துராஜா, விழுப்புரம்
பிரிவினைவாதத்தைத் தூண்டும் கட்சியை ஒரு நிமிடம் கூட ஆட்சியில் தொடர அனுமதிக்கக் கூடாது என்கிறார் பிரதமர் மோடி. ‘மத நம்பிக்கைகளில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.. திமுக ஆட்சி அனைத்து சாதி மக்களையும் சமமாக மதிக்கவில்லை.. இங்கே மதவாதம் தலைதூக்கி ஆடுகிறது..’ என்று பேசிக் கொண்டே போகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. சாதிமதப் பிரிவினையை வைத்து அரசியல் செய்யும் இவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லையே..?
‘இது ஒனக்குத் தெரியுது, எனக்குத் தெரியுது.. இந்த ஊருக்குத் தெரியலியே?’ என்று ஒரு படத்தில் கவுண்டமணி செந்திலிடம் கூறுவார். இவர்கள் பேசுவதற்கும் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று நமக்குப் புரிகிறது. மேலும் பலர் புரிந்து கொண்டால் இந்தியாவுக்கு இவர்களிடமிருந்து விடுதலை கிடைக்கும்…

Spread the love