June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி-பதில்

மாணவர்கள் மாரிஸ்வரி, கண்மணி, சுவேதா, மகாலட்சமி, அகல்யா, கிஷேர், யோகிதா-அருப்புக்கோட்டை வாசகர் வட்டம்
1) தென்அமெரிக்காவில் சிவப்புக் காற்று வீசுகிறது என்றால் என்ன?
தென் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுகிறது என்று பொருள். மக்கள் தேர்வு செய்த அரசுகள் கவிழ்க்கப்படுவதும், மீண்டும் மீண்டும் இடதுசாரிகளை மக்கள் தேர்வு செய்வதும் தென் அமெரிக்காவில் தொடர் அரசியல் நிகழ்வாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ஜெண்டினா, வெனிசுலா, பெரு, பொலிவியா, தற்போது சிலி என்று பல நாடுகளில் மீண்டும் மக்கள் நல அரசுகள் அமைந்துள்ளன. இந்த சிவப்புக் காற்று, தென் அமெரிக்காவில் மட்டுமல்ல, மெக்சிகோ, ஹோண்டுரஸ், நிகரகுவா என்று மத்திய அமெரிக்காவிலும் வீசுகிறது. இது ஏழை எளிய மக்களுக்குச் சாதகமான திருப்பம் என்பதில் சந்தேகம் இல்லை.

 1. ஆப்கானிஸ்தாவில் இருந்து அமெரிக்கா படைகளை ஏன் திரும்ப அழைத்துக் கொண்டது?
  1980-களில் ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் படைகளுக்கு எதிராக தலிபான் போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா கொம்பு சீவிவிட்டது. அந்தக் குழுக்கள் ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராகவே திரும்பின. தலிபானை விரட்டிவிட்ட அமெரிக்கா கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை தனது படைகளின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் தலிபான் அண்மையில் ஆப்கனை மீண்டும் கைப்பற்றிவிட்டது. அமெரிக்கப் படைகள் எடுத்தன ஓட்டம். தலிபானைப் பயிற்றுவித்த அமெரிக்கா கடைசியில் அவர்களிடமே தோற்றுப்போய் ஆப்கனைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
  சி.அ.முருகன், திருவண்ணாமலை
  1) பெண்களின் திருமண வயது 21 – சாதக பாதகங்கள் என்ன ?
  திருமண வயதை உயர்த்தியதை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு பிரிவாக இருக்கிறார்கள். அரசுக்கு இப்பரிந்துரையைச் செய்த ஜெயா ஜேட்லியே “அது மட்டுமே தீர்வு கிடையாது. பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறைகள் மற்றும் நாப்கின்கள் கொடுத்து அவர்கள் பள்ளியிலிருந்து இடைநிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழிற்கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பயிற்சிகளும் தரவேண்டும்”என்கிறார்.“ஒரு பெண் தன்னுடைய பதினெட்டாவது வயதில் வயதிற்கு வந்தவள் என்று கருதப்படுவதால்தான் வாக்குரிமை அவளுக்கு அந்த வயதில் தரப்படுகிறது. குற்றவியல் சட்டங்கள் உட்பட வயதுக்கு வந்த குடிமக்களுக்குப் பொருந்துகின்ற அனைத்துச் சட்டங்களும் ஒரு பெண்ணின் பதினெட்டாவது வயதில் அவளுக்குப் பொருந்துகின்றன. திருமணம் தொடர்பான முடிவுகளில் 18 வயதை முடித்த ஒரு பெண்ணின் விருப்பத்தை மறுப்பது தவறாகும். பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் இந்த மசோதா, சாதி மற்றும் சமூகத் தடைகளை உடைத்தெறிந்து இளம் வயது தம்பதிகள் தாங்களாகத் தேர்வு செய்து கொள்கின்ற திருமணங்களைச் சட்டவிரோதமாக்கி விடும். பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைத் திருமணங்கள் கணிசமான அளவில் இந்தியாவில் இன்னும் நடைபெற்று வருகின்ற நிலையில், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். 18-21 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணத்தைக் குற்றமாக்குவதைக் காட்டிலும், உத்தரவாதமான வேலை வாய்ப்புகள், கல்விக்கான வாய்ப்புகள் போன்றவற்றை இளம் பெண்களுக்கு வழங்குவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். மக்கள்தொகையில் பெரும் பகுதியினர்-முக்கியமாக ஏழைகள்-சட்டரீதியான தண்டனைகளை எதிர் கொள்வதற்கே இந்த மசோதா வழிவகுத்துக் கொடுக்கும்” என்கிறது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.
  (கடைசிச் செய்தி : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக மசோதா தற்போது நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது).
  2) விமானப் போக்குவரத்து தனியார்மயத்தைத் தொடர்ந்து வங்கிகளும் தனியார் மயம். இப்படியே தொடர்ந்து எல்லாமே தனியார் மயமாக்கப்பட்டால்… அரசின் கடமைதான் என்ன?
  ஆகாயம், தரை, கடல் என எதையும் விட்டுவைக்க பாஜக அரசு தயாராக இல்லை. “It is not the business of the government to do business” என்பது பொருளாதார தாராளமயமாக்கலின் தாய் என்று போற்றப்படும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் பொன்மொழி. பிரதமர் மோடி அந்த வழிகாட்டுதலை அப்படியே பின்பற்றி விமானம், ரயில், சாலை, கப்பல் போக்குவரத்துகளை மட்டுமல்ல எல்.ஐ.சி., வங்கிகள், சுகாதாரம்- கல்வித் துறைகள், ராணுவத் தளவாட உற்பத்தி, அணுசக்தி, தகவல் தொழில்நுட்பம், நிலக்கரி எடுத்தல், விமானம் தயாரித்தல், கப்பல் கட்டுதல், சுற்றுலா, மருந்து-உரம் தயாரித்தல், கட்டுமானத் தொழில் என அனைத்துத் துறைகளையும் தனியாரிடம் கொடுத்து வருகிறது, நாடாளுமன்றத்தில் விவாதங்களையே அரசு அனுமதிக்காதபோது, புதிய கட்டடம் கட்டுவது எதற்காக.. யாருக்காக..?
Spread the love