June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி-பதில்

சி.அ.முருகன், திருவண்ணாமலை.
’ஜெய்பீம்’ படத்தைக் கொண்டாடும் ஊடகங்களும் சரி, ஊடக விவாதங்களில் பங்கேற்போரும் சரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தோழர்களின் மகத்தான பங்களிப்பை அவ்வளவு எளிதாகக் கடந்து போவதேன்?
அது ஒரு குறைதான். ஆனால் அதனையும் தாண்டி படம் சமூகத்திற்குத் தந்திருக்கும் படிப்பினை மகத்தானது. அதனால்தான் முற்போக்கு ஊடகங்கள் படத்தைப் பாராட்டி, கொண்டாடி மகிழ்கின்றன. ராஜாக்கண்ணு மனைவி பார்வதிக்கு 15 லட்ச ரூபாய் நிவாரணத்தை சிபிஎம் தலைவர்கள் கொடுக்குமாறு நடிகர் சூர்யா ஏற்பாடு செய்தார். கட்சியின் பங்கு வலுவாகக் காட்டப்பட்டிருந்தால் அது ஒரு நல்ல ஆவணப் படமாக இருந்திருக்கலாம். இப்படி வணிகரீதியான வெற்றியைப் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.


எஸ்.விஸ்வநாதன், மதுரை-10
டில்லியில் காற்று மாசு, சென்னை, கடலூர், டெல்டா பகுதிகளில் மழை என இயற்கை நம்மை மிரட்டிக் கொண்டே இருக்கிறதே..?
ஆனந்த விகடன், தமிழ் இந்து, தீக்கதிர் போன்ற இதழ்கள் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்மொழிந்து கொண்டுதான் இருக்கின்றன. கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாநாடும் உலக நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சில முடிவுகளை எடுத்திருக்கிறது. நீர்நிலைகளைப் பராமரிப்பது, மழை நீரைச் சேமிப்பது, வடிகால்களில் தங்குதடையின்றி நீர் ஓட வழி ஏற்படுத்திக் கொடுப்பது, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, பெட்ரோல், டீசல் வாகனங்களைக் குறைத்து மின்வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது என பல்வேறு வழிகள் இருக்கின்றன. அரசும் மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டிய களம் இது.
பெட்ரோல், டீசல் விலையைக் கூட்டினாலாவது நாம் வாகனச் செலவைக் குறைப்போம் என்று ஒன்றிய அரசு அவற்றின் மீது வரிகளை உயர்த்திக் கொண்டே போகிறது. ஆனால் நாம் விடுவதாக இல்லை !


கே.சகாயராணி, நாகர்கோவில்
நீட் தேர்வு சாதாரண மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அது திரும்பப்பெறப்பட மாட்டாது என்று தமிழக பாஜக தலைவர் அறிக்கை விடுகிறார். தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றியெல்லாம் அவருக்குக் கவலையே கிடையாதா?
வேளாண் சட்டங்களில் கமா, புள்ளி கூட மாற்றப்படாது என்று இவர் அறிக்கை விட்டார்.. மோடி அந்த சட்டங்களை விலக்கிக் கொண்டுவிட்டார். நீட் தேர்வு சம்பந்தமாக அண்ணாமலை அறிக்கை விடுவது நல்லது. விரைவிலேயே மோடி அந்த விதிவிலக்கைத் தமிழகத்திற்குத் தர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது !


அரவிந்தன், கோவை
அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை 14 நாட்கள் நடந்த கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் நடந்த விவாதங்கள் நம்பிக்கை அளிக்கின்றனவா?
மாநாட்டு விவாதங்களை கிரேட்டா துன்பர்க் ஒரே வரியில் ‘பிளா, பிளா, பிளா’ என்று கூறிவிட்டார். பிளா, பிளா, பிளா என்றால் அர்த்தமற்ற வெறும் பேச்சு என்று அர்த்தமாம் ! ஆனாலும் நாம் நம்பிக்கை இழக்க முடியாது. உலகைக் காப்பாற்ற வேண்டிய கடமை நம் முன் இருக்கிறது. விவாதங்கள், வளர்ந்த நாடுகள் மீது தர வேண்டிய அழுத்தங்கள் எல்லாம் தொடர்வது அவசியம்.


எஸ்.தினேஷ், காட்பாடி
எதிர்க்கட்சியினர் சொல்வதை நான் பொருட்படுத்துவதில்லை என்கிறார் தமிழக முதல்வர். அதிமுக, பாஜகவினர் வலுச் சண்டைக்கு இழுப்பது உண்மை என்றாலும் ஸ்டாலின் சொல்வதை ஏற்க முடியவில்லையே?
கரெக்ட்! அவர்கள் சொல்வதை இவர் பொருட்படுத்துவதில்லை என்றால் இவர் சொல்வதை மோடி பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் ஆகிறதே? அவர்களுக்கான பதிலை அவர் சுருக்கமாகத் தந்துவிட்டு, தான் செய்ய வேண்டிய பணிகளில் கவனம் செலுத்தப் போய்விடலாம்.


மாலதி சுப்பிரமணியன், சென்னை -51
பிரதமர் போபாலில் பேசும்போது பழங்குடியினர் இதுவரை நாட்டிற்கு ஆற்றிய சேவைகளை, தியாகங்களை நான் மக்களிடம் கூறும்போது அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. இதுவரை ஆண்டவர்கள் அதை அவர்களுக்குச் சொல்லவில்லை என்று பேசினார். வாஜ்பாய்ஜீயையும் சேர்த்துத்தான் சொல்கிறாரா?
நல்ல கேள்வி. எப்போதும் தன்னை முன்னிறுத்தியே பார்ப்பவருக்கு இப்படித்தான் பேசத் தோன்றும், ஜவஹர்லால் நேரு நம் நாட்டிற்கு இட்ட அடித்தளத்தை இவரால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. விட்டுத் தள்ளுங்கள்!

Spread the love