May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி பதில்

சி.அ.முருகன், திருவண்ணாமலை.


விமானத்தை தனியாருக்கு தாரை வார்த்து, நம் இதயத்தை கனக்கச் செய்த ஒன்றிய அரசின் நிலைப்பாடு பற்றி…?
இப்படி நாம ஒவ்வொரு பொதுத்துறை நிறுவன விற்பனைக்காக கனத்துப் போவது நியாயம் அல்ல என்பதால்தான் மோடி அரசு, அதில் எந்தக் குறையுமே வைக்காமல் கார்ப்பரேட்டுகள் வசம் அனைத்து நிறுவனங்களையுமே விற்றுவிடுவது என்று முடிவு செய்திருக்கிறது. இந்த இதழில் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலை பாரதி கிருஷ்ணகுமார் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.


பா.சுப்ரமணியன், திருநெல்வேலி


அரசுப் பள்ளிகள், தாய்மொழிவழிப் பள்ளிகளில் போதுமான அளவில் ஆசிரியர்களை நியமனம் செய்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கற்றலை பயனுள்ளதாக மாற்ற அரசு செய்ய வேண்டியது என்ன? ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன?
இந்த அம்சம் பற்றி ச.சீ. இரா., உமா, மணிமாறன் ஆகிய மூவரும் புதிய ஆசிரியனில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அக்டோபர் 17 ஆங்கில இந்து மேகசின் பிரிவில் வினேய் கிர்பால் என்பவர் கற்றலில் உள்ள குறைபாடுகள், போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமனம் இல்லாததால் பணியில் உள்ள ஆசிரியர்கள் படும் சிரமங்கள் எல்லாவற்றையும் பற்றி ஆழமாக அலசியிருக்கிறார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் படித்துப் பார்க்க வேண்டிய கட்டுரை அது.


கே.சகாயராணி, நாகர்கோவில்


2014-ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வர அவர் கொடுத்த வானளாவிய வாக்குறுதிகள் மட்டும் காரணம் அல்ல. காங்கிரஸ் அரசின் 2ஜி மற்றும் வேறு பல ஊழல்களைக் காரணமாக வைத்து கொடி பிடித்து இயக்கம் கண்ட அன்னா ஹசாரேயும் ஒரு காரணம். அவரை இப்ப எங்க சார் காணோம்? இந்த ஆட்சியில் ஊழல் அறவே ஒழிந்துவிட்டதா?
அருமையான கேள்வி. இந்துத்வாவும் பெருமுதலாளிகளும் கூட்டு சேர்ந்து இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களை கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்க இவர்களிடம் பணம் இருக்கிறது.. தேர்தல் பத்திரம், பிஎம் கேர்ஸ் போன்ற திட்டங்கள் மூலம் வந்து குவியும் நன்கொடைகள் இருக்கின்றன.. ‘ஊழலா, இப்ப அறவே இல்லையே’ என்று கைவிரிக்கும் ஊடகங்கள் இருக்கின்றன. அன்னா ஹசாரேயின் தயாரிப்பான கிரண் பேடியை-வேகவேகமாக கொடியை அசைத்து அறம் பாடியவரை-பாஜக உள்வாங்கி புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது. அவர் கொடுத்த குடைச்சல் என்ன ரகம் என்பதை நாராயணசாமியே நன்கறிவார். இன்னொரு தயாரிப்பான அரவிந்த் கேஜ்ரிவால் நான் இடமும் போக மாட்டேன், வலமும் போக மாட்டேன் என்று மய்யமாகவே நடந்து ஆட்சி செய்து வருகிறார். அன்னா ஹசாரேயைத்தான் காணோம்.


எஸ்.விஸ்வநாதன், மதுரை-10


சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோரும் பெரும்பாலும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். நன்கொடை கொடுத்தால்தான் அவர்கள் பணியில் சேர முடிகிறது. ஆனாலும் அவர்களை எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்ய முடிகிறது. தனியார் பள்ளி, கல்லூரி சட்டங்களின் வரையறைக்குள் இந்த நிறுவனங்களைக் கொணர அரசு ஏன் மறுக்கிறது?
காங்கிரஸ் அரசுகள் இருக்கும்போது ஓட்டு வங்கியாக சிறுபான்மையோரை அவர்கள் பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. நீங்கள் கேட்பதுபோல அரசியல் சட்டத்தைத் திருத்தி சிறுபான்மை நிறுவனங்களில் பணி செய்வோருக்கு பணிப் பாதுகாப்பை அந்த அரசுகள் கொடுத்திருக்க வேண்டும். சரி, அந்த அரசுகள் செய்யவில்லை. விடுங்கள். முஸ்லிம் பெண்களை முத்தலாக் கொடுமையிலிருந்து விடுவிக்க அரசியல் சட்டத்தைத் திருத்திய பாஜக அரசு அதைச் செய்திருக்கலாமே? இவர்களை யார் தடுத்தார்கள்? இஸ்லாமியர்கள் மேல் உள்ள வெறுப்பிலாவது பாஜக அரசு இதைச் செய்திருக்கலாமே?


அரவிந்தன், கோவை


அரச குடும்பம், சாதி பின்னணி இல்லாமலேயே இந்த நாட்டை வழி நடத்தும் பொறுப்பு தனக்குக் கிடைத்துள்ளதாக மோடி பெருமிதம் காட்டியிருக்கிறாரே..?
அவர் இந்த ஆட்சி ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ் ஆட்சி’. என்கிறார். அப்படின்னா என்ன தெரியுமா? ‘அனைவரின் ஆதரவு.. அனைவரின் வளர்ச்சி..அனைவரின் நம்பிக்கை’-இவற்றை உத்தரவாதப்படுத்தும் அரசுதான் தன்னுடைய அரசு என்கிறார் மோடி. கூட்டம் முடிஞ்சுது. எல்லாரும் வீட்டுக்குப் போங்க!

Spread the love