September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி – பதில்!

சி.அ.முருகன், திருவண்ணாமலை.


1) தமிழக நிதியமைச்சர் சமர்ப்பித்த வெள்ளை அறிக்கை மற்றும் தமிழக பட்ஜெட் பற்றி…?


இந்தக் கேள்விக்கு மிக விரிவான பதில் தரவேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிமுக அரசு இந்த அரசுக்கு சீதனமாக விட்டுச் சென்றுள்ள 5.7 லட்சம் கோடி ரூபாய் கடன் மற்றும் ஆட்சிக்கு வந்ததுமே நிவாரணப் பணியில் இறங்க வேண்டிய கட்டாயத்தை கொரோனா ஏற்படுத்திய பின்னணியில் பார்க்க வேண்டும் என்று முதல்வர் நம்மைக் கேட்டுக் கொண்டார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், வேளாண்மைக்கென தனி பட்ஜெட், காவலர்களுக்கு வார விடுமுறை, தோழர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது, அரசுப் பணிகளில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நியமனம், மோடி அரசை எதிர்க்க உருவாகியிருக்கும் கூட்டணியில் பங்கேற்பு போன்ற பல நல்ல விஷயங்களைக் குறிப்பிட்டு பாராட்டலாம். ஆனால் ஆசிரியர்-அரசு ஊழியர்களைப் பொறுத்த அளவில் பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. அவர்கள் பெரிதும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு போன்ற சில முக்கியமான கோரிக்கைகள் நிறைவேறவில்லை. நிதிநிலையைக் கருத்தில் கொண்டு சில மாதங்கள் பொறுத்திருங்கள் என்று நிதியமைச்சர் சொல்லியிருந்தால் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். அதை விடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு வாய்ப்பே கிடையாது..அரசு ஊழியர்-ஆசிரியர்களின் ஊதியத்தையே கவனித்துக் கொண்டிருந்தால் நிதி நிலைமை மிக மோசமாகிவிடும் என ஆணவ அதிகாரி போல அவர் பேசியது அவர்களின் கோபத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது. முதல்வர் தலையிட்டு ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை அழைத்து சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினால் நிலைமை சீராகலாம்.


2) ஒட்டுக் கேட்புப் புகார் பற்றி…?


இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. பொருத்தியுள்ள பெகாசஸ் வேவு மென்பொருள் பற்றி நாடே விவாதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் அதைப் பற்றி விவாதம் நடத்த மோடி அரசு தயாராக இல்லை. 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள்.. என பல பேரை மோடி அரசு ஒட்டுக் கேட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சொந்தக் கட்சியினரைக்கூட அரசு விட்டுவைக்கவில்லை. தொழில்நுட்பம் வழியாக மக்களை அரசு கண்காணிக்கத் தொடங்கினால் அதற்கு முடிவு ஏது? தனிமனித உரிமைகளில் தலையிட அரசை அனுமதிக்க முடியுமா? பீமா கொரேகான் வழக்கில் 11 மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை அரசு கைது செய்து சிறையில் வைத்தது இதற்கு ஒரு உதாரணம்தான். இந்த ஒட்டுக் கேட்டல் சீரழிவிற்கு நாம் ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.


கிறிஸ்துராஜா, விழுப்புரம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மர்மமாகவே தொடர்கிறதே..?


அதிமுக தலைவர்கள் பதறிப் போயிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு கொடநாடு பங்களாவில் சில நபர்கள் புகுந்து எதையோ தேடியது அம்பலம் ஆனது. அவர்கள் எடுத்துச் சென்றது சில ஆவணங்களைத்தான் என்பது பின்னர் தெரிந்தது. கொலை, தற்கொலை என மர்மங்கள் தொடர்ந்தன. இது தொடர்பாக மறுவிசாரணை நடத்தப் போவதாக முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாகவே கூறியிருந்தார். அதன்படி விசாரணை நடக்கப் போகிறது. வரவேற்போம்.


ஹரிணி, மேற்கு தாம்பரம்
எல்.ஐ.சி. ஒரு மக்கள் நிறுவனமாகத் தொடர இந்த அரசு அனுமதிக்காது போலிருக்கிறதே?


அதனிடம் உள்ள 51 சதப் பங்கினை தனியார்கள் வாங்குவதற்கான கடனையும் அரசு வங்கிகளே தருமாம். இதை வெல்லப் பிள்ளையாரிடமிருந்து கிள்ளி வெல்லப் பிள்ளையாருக்கே படையல் வைப்பது என்று ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியில் ஒருவர் கிண்டல் செய்திருந்தார்!


எஸ்.விஸ்வநாதன், மதுரை-10
அதிகமாக பேசப்படும் மொழிதான் ஆட்சி மொழியாக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று அறிஞர் அண்ணாவை அன்றே ஒன்றிய அரசு கேட்டதாமே..?


அதற்கு அண்ணா உடனடியாகச் சொன்ன பதில் சுவாரசியமானது. அப்படியானால் நீங்கள் காகத்தை தேசியப்பறவையாக அறிவிக்க வேண்டியதுதானே .. ஏன் மயிலை அறிவித்தீர்கள் என்று அவர்களை அண்ணா மடக்கியிருக்கிறார்!

Spread the love