September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

கேள்வி-பதில்

அருப்புக்கோட்டை வாசகர் வட்டம் அகல்யா, மாரிஸ்வரி, கிஷோர் கண்ணா, சாத்வீகா, யோகிதா, கண்மணி

1 ) ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் பாஜக அபார வெற்றி பெற்றதற்குக் காரணம் என்ன?
ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்முவுக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்பி.க்கள், 125 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் உறுப்பினர்களே அதிகளவில் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். அசாம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உபி, குஜராத், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மேகாலயா, பீகார் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் முர்முவை அதிகளவில் ஆதரித்து வாக்களித்துள்ளனர். ஆந்திரா, சிக்கிம், நாகாலாந்து மாநிலங்களில் சின்காவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஏறக்குறைய அதே நிலைதான். மாயாவதியின் பகுஜன் கட்சி இரண்டு தேர்தல்களிலுமே பாஜக வேட்பாளருக்கே ஆதரவளித்தது. அரசியல் காற்று பாஜக பக்கமே வீசிக் கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி கோஷ்டிச் சண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது. பிற எதிர்க்கட்சிகளிடையேயும் ஒற்றுமை இல்லை. பாஜக வெற்றி பெற்றதில் ஆச்சரியமே இல்லை.


2) பீகாரில் ஏற்பட்ட மாற்றத்திற்கு தாங்கள் நினைக்கும் காரணம் என்ன?
மகாராஷ்டிரா கதையை பீகாரிலும் அமல்படுத்த பாஜக காய்களை நகர்த்தி வந்தது. நிதிஷ் குமார் விழித்துக் கொண்டார். பாஜகவுக்கு எதிரியாக இருப்பதைவிட நண்பனாக இருப்பது ஆபத்து என்பதை அவர் சற்று தாமதமாகப் புரிந்து கொண்டார். அணி மாறுவதில் கில்லாடியான நிதிஷ் பழைய கூட்டாளி லாலுவே பெட்டர் என்று கணக்கு போட்டு ஒரு புதிய கூட்டணியை அமைத்தார். ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட ஏழு கட்சிகளின் கூட்டணியை அமைத்து முதல்வராக நீடிக்கிறார். தேசிய அளவிலும் இப்படிப்பட்ட கூட்டணி அமைந்து அது நிலையானதாகவும் இருக்குமானால் எதிர்காலத் தேர்தல்களில் ஒரு மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கலாம்.

சி.அ.முருகன், திருவண்ணாமலை


1) 2ஜி ஏலத்தில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட தொகை அளவுக்குத்தான் 5ஜி ஏலம் விடப்பட்டுள்ளது பற்றி…?
“ட்ராய் அளித்த பரிந்துரைகளின்படி நான் வெறும் 30 மெகாஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தபோது, 1,76,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கை கூறியது. ஆனால், இப்போது 51 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைக்கு அதைவிட மிகக் குறைவான விலையான 1.5 லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் சென்றிருக்கிறது” என்று முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா குற்றம் சாட்டியிருக்கிறார். “5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 5 அல்லது 6 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டும். இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும்” என்று அவர் குறிப்பிடுகிறார். பாரபட்சமற்ற விசாரணை நடைபெற இந்தியாவில் வாய்ப்பு உண்டா என்பதே நம் கேள்வி.


2) தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு, வழக்கமான நடைமுறைக்கு மாறாக உள்ளதே…?
உண்மைதான். அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்கள் இதற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை முதலமைச்சர் சந்தித்துப் பேசிய பிறகும் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய அறிவிப்புகள் வராதது நம் கண்டனத்துக்குரியவை. நிதி நிலையைக் காரணம் காட்டி தேர்தல் கால வாக்குறுதிகளை தள்ளிப் போடுவது சரியல்ல என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.


3) மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 80 கோடி ரூபாய் செலவில் பேனா சிலை கடலில் அமைக்கப்பட இருப்பதாக வந்த அறிவிப்பு பற்றி…?
கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 39 கோடி ரூபாய் செலவில் அரசு சார்பில் ஏற்கனவே ஒரு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் கருணாநிதி நினைவாக பிரம்மாண்ட பேனா வடிவ சிலை ஒன்றை 134 அடி உயரத்திற்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நினைவு சிலையை மக்கள் பார்வையிட 650 மீட்டர் தூரத்திற்கு இரும்புப் பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அரசின் இந்த முடிவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு நிதி இருக்கும் அரசிடம், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி இல்லையா என்ற சரியான கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

Spread the love